பிரபந்த தீபம்
- தீபம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தீபம் (பெயர் பட்டியல்)
To read the article in English: Prabandha Deepam.
பிரபந்த தீபம் (பொ.யு 19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணங்களைச் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று. மிகவும் பிற்காலத்தையது. சிற்றிலக்கியங்கள் கொள்ளவேண்டிய இலக்கணத்தை வரையறைசெய்பவை பாட்டியல் நூல்கள் எனப்படுகின்றன
நூலாசிரியர்
இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. முத்துவீரியம் என்னும் நூலின் நூற்பாக்கள் சிலவற்றை அப்படியே பயன்படுத்தியுள்ளதால் இந்த நூல் முத்துவீரியத்துக்குப் பிற்பட்டது என்பது புலனாகிறது.
இது 19-ம் நூற்றாண்டு நூல் என்று இந்நூலைப் பதிப்பித்த முனைவர் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
நூல் அமைப்பு
பிரபந்த தீபம் 97 பாடல்களால் 97 வகை பிரபந்தங்களின் இலக்கணத்தைக் கூறுகிறது. இந்த நூலின் இறுதியில் 'அபூர்த்தி’ என்னும் குறிப்பு உள்ளதால் இந்த நூல் முற்றுப்பெறாத நூல் எனத் தெரியவருகிறது.
உள்ளடக்கம்
வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் 96 வகை பிரபந்தங்கள் காட்டப்பட்டுள்ளன. சதுரகராதி காட்டும் பரணி, உழத்திப்பாட்டு ஆகிய பிரபந்தங்கள் இந்த நூலில் இல்லை. மாறாக சீட்டுக்கவி, 'சமுத்தி' என்னும் பிரபந்தங்கள் குறிப்பிடப்படுகின்றன. சதுரகராதி பெருங்காப்பியம், சிறுகாப்பியம் எனக் காட்டும் இரு வகைகளை இந்நூல் காப்பியம் என ஒன்றாக வைத்துக்கொள்கிறது. சதுரகராதி 'தொகை' எனக் குறிப்பிடும் ஒன்றை இந்நூல் கலித்தொகை, நெடுந்தொகை, குறுந்தொகை என மூன்றாகப் பகுத்துக்கொண்டுள்ளது. குறத்திப்பாட்டைக் கூறிய இவர் உழத்திப்பாட்டை கூறவில்லை
உசாத்துணை
- பிரபந்த தீபம், பதிப்பாசிரியர் ச.வே.சுப்பிரமணியன், தமிழ்ப்பதிப்பகம், பெருங்குடி, சென்னை 96, 1980
- தமிழ் இலக்கண நூல்கள், பதிப்பாசிரியர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், 2007
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Nov-2023, 08:25:57 IST