under review

சிதம்பரப் பாட்டியல்

From Tamil Wiki
சிதம்பரப் பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று. ஆசிரியர் பரஞ்சோதியார். இவர் சிதம்பர புராணம் என்னும் நூலை இயற்றிய புராணத் திருமலை நாதர் என்பவரின் மகன். 16-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

மரபு

தமிழில் பாட்டியலில் அகத்திய மரபு, இந்திரகாளிய மரபு என இரண்டு மரபுகள் கூறப்படுகின்றன. அகத்திய மரபு அவிநயரின் வழியாக சிற்றிலக்கிய இலக்கணத்தில் தொடர்ந்தது. சிதம்பரப் பாட்டியல் அகத்திய மரபைச் சார்ந்தது. ஆகவே இதில் யாப்பியலும் உள்ளது என்று இரா.இளங்குமரனார் கூறுகிறார். மு.அருணாச்சலம் அகத்திய மரபு மூன்று இயல்களில் இலக்கணத்தை வரையறை செய்வது என்றும் பின்னர் வந்த மரபு பஞ்சலக்ஷணம் என்னும் ஐந்து இலக்கணங்களைச் சொல்வது என்றும் வரையறை செய்கிறார்[1].

ஆசிரியர்

சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் பரஞ்சோதியார். இவர் சிதம்பர புராணம், மதுரையுலா ஆகியவற்றை இயற்றியவர். இவர் காலம் கி.பி. 16-ம் நூற்றாண்டு. (சிதம்பரபுராணம் இயற்றப்பட்ட காலம் கி.பி. 1518 எனப்படுகிறது).

பதிப்பு

சிதம்பரப் பாட்டியல் 1911-ல் மு.இராகவையங்காரால் பதிப்பிக்கப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு கி. இராமானுஜையங்காரால் 1932-ல் வெளியிடப்பட்டுள்ளது

அமைப்பு

சிதம்பரப் பாட்டியல் 47 எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த பாடல்கள் கொண்டது. ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • உறுப்பியல்
  • செய்யுளியல்
  • ஒழிபியல்
  • பொருத்தவியல்
  • மரபியல்

இந்நூலின் முதல் மூன்று இயல்களும் யாப்பியல் சார்ந்தவையாகவும் இறுதி இரண்டு இயல்களும் பாட்டியல் சார்ந்தவையாகவும் உள்ளன.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page