under review

பட்டினத்து அடிகள்

From Tamil Wiki
பட்டினத்து அடிகள்

பட்டினத்து அடிகள் (பட்டினத்தார்) (பத்தினத்தடிகள்) (பொ.யு 10-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சித்தர், சைவ மெய்ஞானி.

பிறப்பு

பட்டினத்து அடிகள் பொ.யு 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவநேசருக்கும், ஞானகலாம்பிகைக்கும் மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார். சிவனடியார். இயற்பெயர் திருவெண்காடர். வாணிகத்தொழில் செய்து வந்தார். ரத்தின வியாபாரி, பல கப்பல்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன.

தனிவாழ்க்கை

பட்டினத்து அடிகள் சிவகலையை திருமணம் செய்தார். குழந்தைகள் இல்லை. திருவிடைமருதூரில் சிவனடியாரான சிவசருமர் என்ற அந்தணரின் மகனான மருதவாணரைத் தத்தெடுத்தார்.

தொன்மம்

தன்வினை தன்னைச் சுடும்

பட்டினத்து அடிகள் கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறியதால் தன் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க அவருடைய தங்கை முயன்றார். அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே சொருகி விட்டு ”தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கூரை தீப்பற்றி எரிந்ததாக நம்பிக்கை உள்ளது.

தாயின் ஈமச்சடங்கு

தாயின் ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து நடத்துவேன் என்று பட்டினத்தடிகள் வாக்களித்திருந்தார். துறவியாக இருந்த காலத்தில் தாய் மரணமடைந்ததை உள்ளுணர்வால் தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் சுடுகாட்டை அடைந்தார். பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துப் பாடல்களைப் பாடி சிதையைப் பற்றச் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது ஆகியவை இவர் இயற்றிய நூல்கள்.

பாடல் நடை

  • தாயின் ஈமச்சடங்கில் பாடிய பாடல்

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி

  • கோயில் திரு அகவல்

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;

மறைவு

திருவொற்றியூரில்தான் தனக்கு முக்தி என்பதை உணர்ந்து அங்கு லிங்க வடிவாக மாறி பட்டினத்தடிகள் சிவசமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்தில் கடலை நோக்கி காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தியடைந்த ஆடி உத்திராடம் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

பட்டினத்து அடிகள் சமாதி (திருவொற்றியூர்)

திரைப்படம்

பட்டினத்தார் என்ற படம் கே. சோமு இயக்கத்தில் டி.எம்.எஸ் செளந்தர்ராஜன், எம்.ஆர். ராதா நடித்து வெளியானது.

இவரைப்பற்றிய நூல்கள்

  • பட்டினத்துப் பிள்ளையார் புராணம்

நூல் பட்டியல்

பதினொன்றாம் திருமுறைப் பிரபந்தங்கள்
  • திருக்கழுமல மும்மணிக்கோவை
  • கோயில் நான்மணிமாலை
  • நினைமின்மனனே
  • திருவேகம்பமுடையார் திருவந்தாதி
  • திருவேகம்பமாலை
  • கச்சித்திரு அகவல்
  • திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  • திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  • திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

உசாத்துணை


✅Finalised Page