under review

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

From Tamil Wiki

திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு) பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான 'ஒருபா ஒருபது' வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்

திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பட்டினத்தார், திருவெண்காடர் என்றும் அறியப்பட்ட பட்டினத்து அடிகளால் இயற்றப்பட்டது. கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, ஆகியவை இவர் இயற்றிய மற்ற நூல்கள்.

நூல் அமைப்பு

ஒருபா ஒருபது வெண்பாவிலாவது, அகவல் பாவிலாவது பத்துப்பாடல்களால் பாடுவது என்று பன்னிரு பாட்டியல் இதற்கு இலக்கணம் கூறுகிறது. இந்நூல் அகவற்பாவால் அமைந்தது. திருவொற்றியூர் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவனைப் பத்து அகவற்பாக்களால் பாடுகிறது. நூல் 'இருநிலம்’ என்னும் தொடருடன் தொடங்கி 'இருநிலத்தே’ என்று மண்டலித்து அதே தொடரில் முடிகிறது.

சிவனைப் பற்றிய செய்திகள்

ஆண் அல்லது பெண் என ஓருருவம் பெற்றிலாதவன் சிவன், பாவகன் (தீ), பரிதி, மதி ஆகிய மூன்று கண்களை உடையவன், விசும்பே அவன் உடம்பு, எட்டுத் திசையும் அவனுக்கு எட்டுத் தோள், கடல் உடை, மண்டலம் அவன் அல்குல் (பெண்ணுறுப்பு), மணிமுடிப் பாந்தள் (பாம்பு) அவன் தாள், மாருதம் (காற்று) அவன் உயிர்க்கும் மூச்சு, ஓசை அவன் வாய்மொழி, நிரம்பிய ஞானம் அவன் உணர்வு; உலகின் நீர்மை, நிற்றல், சுருங்கல், விரிதல், தோற்றம் – ஐந்தும் தொழில்; அமைதல், அழிதல், பெயர்தல், இமைத்தல், விழித்தல் – ஐந்தும் இயல்பு

பாடல் நடை

இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே

உசாத்துணை


✅Finalised Page