under review

திருவாரூர் மும்மணிக்கோவை

From Tamil Wiki

திருவாரூர் மும்மணிக்கோவை சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள், பதினோராம் திருமுறையின் நாற்பத்தோரு நூல்களில் ஏழாவது நூல். மும்மணிக்கோவை என்ற சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது. திருவாரூரில் கோவில் கொண்ட சிவனை சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருமுறை.

ஆசிரியர்

திருவாரூர் மும்மணிகோவையை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார் என்னும் நாயன்மார். மாக்கோதையார் என்றும் கழறிற்றறிவார் என்றும் அறியப்பட்டார். அவர் வாழ்ந்த காலம் காலம் பொ.யு. 650-710. இந்நூல் எழுதப்பட்ட காலமும் அதுவே எனக் கொள்ளலாம். சேரமான் பெருமாள் நாயனார் திருச்சிலம்பு வழியே சென்று நடராசனை வணங்கிய பேறு பெற்றவர் என்றும் இறைவனின் திருமுகம் கண்ட அருளுடையவர் என்றும் சுந்தரரின் இனிய தோழர் என்றும் கயிலைக்கே சென்று இறைவனின் அருள் பெற்றவர் என்றும் பெரிய புராணம் கூறுகிறது.

நூல் அமைப்பு

திருவாரூர் மும்மணிக்கோவை திருவாரூரில் கோவில் கொண்ட சிவபெருமான்மீது பாடப்பட்டது. அகவற் பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை இவை முறையாக மாறி மாறி வர, முப்பது செய்யுட்களை அந்தாதியாகக் கோப்பது ‘மும்மணிக்கோவை இப்பிரபந்தத்தின் பாட்டுடைத் தலைவர் திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமான். 30 அகத்திணைப் பாடல்கள் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. 'விரிகடல்' எனத் தொடங்கும் நூல் 'விரிகடல்' என்ற சொல்லில் முடிவடைகிறது. அகப்பொருளில் இயற்றப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளை, நெய்தல் திணைகளில் இரங்கலும், இரங்கல் நிமித்தமும், ஊடல் ஆகியவற்றைப் பேசுபொருள்களாகக் கொண்டுள்ளன. பாடல்கள் பெரும்பாலும் தலைவிகூற்றாகவும், தோழி கூற்றாகவும் இரங்கல் துறையில் அமைந்தன.

பாடல் நடை

வெண்பா

மனம்மால் உறாதேமற் றென்செய்யும்! வாய்ந்த
கனமால் விடையுடையான் கண்டத்(து) - இனமாகித்
தோன்றினகார்; தோன்றிலதேர்; சோர்ந்தனசங்(கு); ஊர்ந்தனபீர்;
கான்றனநீர் ஏந்திழையாள் கண். 2

(தலைவர் குறித்துச் சென்ற கார்ப் பருவம் வந்துவிட்டமையால்) பெருமை பொருந்திய திருமாலாகிய இடபவாகனத்தையுடை சிவபெருமானது கண்டத்திற்கு ஒத்த வகையினை யுடையவாய் முகில்கள் கண் முன்னே தோன்றிவிட்டன. ஆயினும் தலைவர் ஊர்ந்து சென்றதும், சேமமாகக் கொண்டு சென்றவும் ஆகிய தேர்கள் எம் கண்முன் தோன்றவில்லை. ஆகவே, இவளுடைய (தலைவியுடைய) மனம் மயக்கம் கொள்ளாது என் செய்யும்! (ஒன்றையும் செய்யமாட்டாது. ஆகையால்) இவள் கையில் உள்ள சங்க வளையங்கள் கழன்று வீழ்ந்தன; மேனி முழுதும் பசலைகள் போர்த்தன; கண்கள் நீராய்ப் பொழிந்தன.

கட்டளைக்கலித்துறை

கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில் ஆல்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே. 3

மேகம், ‘கண் பொருந்திய நெற்றியை யுடைய எம் தந்தையாகிய சிவபெருமானது அழகிய கண்டம்’ என்று சொல்லும்படி இருண்டு, தனக்கு இடமாகிய விண்ணின்கண் இடியுடன் மேலே உளதாயிற்று. விசாலித்த நிலத்தின்கண் மலையிடத்து இளமையான மயிலின் ஆட்டம் கீழே உளதாயிற்று. (எனவே,) விண்ணும், மண்ணும் கார்ப் பருவம் வந்ததைத் தெளிவாகக் காட்டி நிற்றலால்) இளைய மான்போலும் பெண்ணாகிய இவள் தலைவனைப் பிரிந்து உறையும் தனிமை இனி என்னாய்க் கழியுமோ!

அகவற்பா

உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக்; கைபோய்
வெஞ்சிலை கோலி, விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது, வானே; நிலனே,
கடிய வாகிய களவநன் மலரொடு
கொடிய வாகிய தளவமும், அந்தண்
குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ(டு)
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமே; அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே;
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற்(கு) அஞ்ஞான்(று)
உலவா நல்வரம் அருளிய உத்தமன்
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே. 4

வானம்; தன்னிடத்து உள்ள மேகங்களின்வழி மின்னலாகிய ஒளி பொருந்திய வாளை உறையினின்றும் உருவி வீசி, இடி முழக்கமாகிய போர்முரசம் ஒலிக்க, எவ்விடமும் அகப்படக் கொடிய வில்லை (வான வில்லை) வளைத்து, எங்கும் நிறைந்த மழைத் தாரைகளாகிய வெள்ளிய அம்புகளை ஏவிப் போர்புரிந்தது; நிலம், கடிய களாமலர், கொடிய முல்லை மலர், குலையாக மேம்பட்ட அழகிய, குளிர்ந்த வெண்காந்தள் மலர், அலைவால் மேம்பட்ட செங்காந்தள் மலர், ‘இந்திர கோபம்’ என்னும் வண்டு காயா மலர் இவைகளுடன் கூடி கொடிய துன்பத்தைத் தருகிறது. அவரோ (தலைவரோ) பகை மன்னரது காவல் மிக்க அரணை, வெளி வருவாரையும், உட்புகுவாரையும் அவற்றைச் செய்யாதவாறு தடுத்து முற்றுகை யிட்டு, இரவும் பகலும் காவல் புரிகிறார்.

உசாத்துணை


✅Finalised Page