under review

இளம்பெருமான் அடிகள்

From Tamil Wiki

இளம்பெருமான்அடிகள் (இளம்பெருமானடிகள்) (பொ.யு. 9-10-ம் நூற்றான்டு) சைவத் திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும் சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இளம்பெருமான் அடிகளின் வாழ்க்கை பற்றிய தகவல்கள் அறியவரவில்லை. பெருமான் அடிகள் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்கடவூர்த் திருப்பதிகப் பாடல்களில் சிவபெருமானைப் பெருமான் அடிகள் எனப் போற்றுகிறார். இளம்பெருமான் என்ற பெயர் முருகனைக் குறித்த பெயராகவும் இருக்கலாம். பெருமானடிகள் என்ற பெயரில் இரு சிவனடியார் இருந்து, இவர் இளையவராக இருந்ததால் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.

பெருமான் அடிகள் என்பது தேவாரத்தில் சிவபிரானைக் குறித்தாலும், கல்வெட்டுகளில் இச்சொல் பெரும்பாலும் பக்தி மிகுந்த அரசனைக் குறிக்கிறது. எனவே இளம்பெருமான்அடிகள் இளவரசனாக இருக்கக்கூடும் என்று 'சைவ சமய வளர்ச்சி' நூலில் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

இவர் வாழ்ந்த காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டின் இறுதியும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆக இருக்கலாம் என மு. அருணாசலம் தன் தமிழ் இலக்கிய வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். கடைச்‌ சங்க காலத்திலில்லாத கட்டளைக்‌ கலித்துறை யாப்பும்‌ விநாயகர்‌ வழிபாடும்‌ இவர்‌ பாடிய திருமும்மணிக்‌ கோவையில்‌ இடம்‌ பெற்றிருத்தலாலும்‌ கி.பி. ஒன்பது, பத்தாம்‌ நூற்றாண்டுகளில்‌ வாழ்ந்த ஆசிரியர்கள்‌ பாடிய பிரபந்தங்களுக்கிடையே இவர்‌ பாடிய மும்மணிக்கோவை முறைப்படுத்தப்‌பட்டிருப்பதாலும்‌ இவர் பொ.யு. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இளம்பெருமானடிகள் 'சிவபெருமான் திருமும்மணிக்கோவை' என்ற நூலை இயற்றினார். இவரது ஆசிரியப்பாக்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன. வெண்பாக்கள் கைக்கிளைப் பாடல்களாக உள்ளன. சங்க காலத் தமிழ்ச்சொற்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

பாடல் நடை

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே. 1

குறையாப் பலிஇவை கொள்கஎன்
 கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென்
 தெய்வக்கங் கைப்புனலில்
பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட
 கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம்
 மேனிஎம் வேதியனே. 27

உசாத்துணை


✅Finalised Page