under review

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்

From Tamil Wiki

திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் (திருவாலங்காட்டுப் பதிகம் / திருவாலங்காட்டுத் திருப்பதிகம்). இது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. காரைக்கால் அம்மையார் பாடிய இந்தப் பாடல்களே முதன் முதலாகப் பாடப்பெற்ற பதிகங்கள்.

இவை பழமையானவை என்பதைக் குறிக்க மூத்த என்ற அடைமொழி சேர்த்து மூத்த பதிகங்கள் என்றும், இறைவனைப் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது.

பாடல் அமைப்பு

பதிகம் என்றால் பத்து பாடல்களின் தொகுப்பாகும். கொங்கை திரங்கி, எட்டி இலவம் எனத் தொடங்கும் இரு பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் உள்ளன. இறுதிச் செய்யுள் திருக்கடைக்காப்பு எனப்படும். அது அப்பதிகத்தைப் பாடுவார் பெறும் நன்மையைக் குறிக்கும். இந்த முறையைப் பின்பற்றியே தேவார மூவரும் பல பதிகங்களைப் பாடியுள்ளனர். கொங்கை திரங்கி எனத் தொடங்கும் பதிகத்தில்[1] 10 பாடல்கள் உள்ளன. 11-ம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது. இது நைவளம் என்னும் பண்ணில் பாடப்பட்டுள்ளது. "ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே என்ற அடியோடு 10 பாடல்களும் முடிகின்றன. எட்டி இலவம் எனத் தொடங்கும் இரண்டாம் பதிகம் இந்தளம் என்னும் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளது[2].

உள்ளடக்கம்

இப்பதிகங்களில் அம்மையார் புனிதவதி என்று தன் பெயரைக் குறிப்பிடாமல் காரைக்கால் பேய் என்று குறிப்பிடுகிறார். அம்மை பேய் வடிவம் பெற்றதற்கு ஏற்பப் பேய்களது வருணனைகளும், 'ஆலங்காடு’ என்பதற்கு ஏற்பக் சுடுகாட்டு வர்ணனைகளும் இப்பதிகங்களில் இடம்பெறுகின்றன.

சிவபெருமான் சுடுகாட்டையே ஆடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கூத்தினை காரைக்கால் அம்மையார் பாடியுள்ளார். சிவபெருமான் ஆடும்பொழுது நீண்ட அவர் திருச்சடை எட்டுத்திசையும் வீசுகிறது. அவர் ஊழின் வலியால் இறந்த உயிர்கள் உள்ளம் குளிரவும், அமைதி அடையவும் திருக்கூத்து நிகழ்த்துகின்றார்.

வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப
 மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை
 கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல்
 ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்து அனல் ஆடும் எங்கள்
 அப்பன் இடந்திரு ஆலங்காடே

- மூத்த திருப்பதிகம் - 3

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page