பதிகம் (சிற்றிலக்கியம்)
- பதிகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பதிகம் (பெயர் பட்டியல்)
பதிகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம்.ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம். 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. பத்து பதிகங்களின் தொகுப்பு ஆழ்வார் பாடல்களில் பத்து (முதல் பத்து, இரண்டாம் பத்து ....) என்றே குறிப்பிடப்படுகிறது. தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்புகள் பதிகம் என்றே அழைக்கப்படுகின்றன. பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின.
ஆசிரியத்துறை அதனது விருத்தம்
கலியின் துறை அவற்றின் நான்கடி
எட்டின் கூறும் உயர்ந்த வெண்பா
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்
பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்
பன்னிரு பாட்டியல் - 197
பதிகங்களில் பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.
கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு
பாவெடுத்துரைப்பது பதிகமாகும்
முத்துவீரியம்- 1116
இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.
பதிகங்கள் பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு.
பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி
பத்துப் பாட்டால் பாடல் பான்மையே
பிரபந்ததீபிகை - 80
சமய நூல்களில் பதிகங்கள்
- அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர் நால்வரின் தேவாரப் பாடல்களும், ஒன்பதாம் திருமுறைத் தொகுப்பில் உள்ள காரைக்கால் அம்மையார் போன்றோரின் பாடல்களும் பதிக முறையிலேயே அமைந்துள்ளன.
- சம்பந்தர், சுந்தரர் பாடல்களில் பதிகத்தின் இறுதியில் பதினோராம் பாடல் ஒன்று வரும். இது பதிகத்தின் கடைசியில் பதிகத்துக்கும், பதிகம் பாடுவோருக்கும் காப்பாக அமையும் பாடல்.
- நம்மாழ்வார் பாடல்களும், பெரியாழ்வார் பாடல்களும் பத்து பத்து பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
சில பதிகங்கள்
- அபிராமியம்மை பதிகம்
- திருநீற்றுப் பதிகம்
- அச்சோப் பதிகம்
- திருநீற்றுப் பதிகம்
- கோளறு பதிகம்
- முனாஜத்துப் பதிகம்
- கிறிஸ்து வருகைப் பதிகம்
- வாரணம் ஆயிரம்
உசாத்துணை
- பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Nov-2023, 09:09:17 IST