under review

பள்ளு

From Tamil Wiki

பள்ளு (உழத்திப்பாட்டு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது மருதநில(வயலும் வயலைச் சார்ந்த இடமும்) இலக்கியம். உழவுத் தொழில் செய்யும் பள்ளர்களின் வாழ்க்கையை (பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர்) விளக்கிக் கூறும் இலக்கியம் பள்ளு.

பள்ளு இலக்கியங்களிலிருந்து வேளாண் மக்களின் வாழ்க்கை நிலை, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகள், பண்பாட்டுத் தகவல்கள் போன்றவற்றை அறிய முடிகிறது. சிற்றிலக்கிய வகை நூல்களில் பள்ளு இலக்கியங்களே அதிகம் கிடைத்திருக்கின்றன.

பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாட்டியல் நூல்களில் பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை. நவநீதப் பாட்டியலில் நான்கு பாடல்களில் உழத்திப்பாட்டு[1] குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தோற்றமும் வளர்ச்சியும்

சிலப்பதிகாரத்தில் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு போன்ற மருத நில மக்கள் வாழ்க்கையைக் குறித்த பாடல்கள் இருக்கின்றன (நாடுகாண் காதை, 125 :134- 137[2]) ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவது பொன்னேர் பூட்டல் எனப்படும். ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு ஏர் மங்கலம். வயல்களில் நெற் பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுத்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு. இவ்வாறு காணப்படும் உழவர்கள் பற்றிய செய்திகளும், உழத்திப்பாட்டு முதலிய பாடல்களும், பாட்டும் கூத்துமாக அமைந்துள்ள பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்ற வழி வகுத்தது.[3]

பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் 17-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. திருவாரூர் தியாகப் பள்ளு என்பதுதான் முதற்பள்ளு இலக்கியம் என்ற கருத்து உண்டு. 1642-ல் இயற்றப்பட்ட ஞானப் பள்ளே முதற்பள்ளு என்ற கருத்தும் உண்டு.

பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை. இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்

முக்கூடற்பள்ளு வைணவம் சார்ந்த பள்ளு நூல். பாட்டுடைத் தலைவன் அழகர் (திருமாலின் மற்றொரு பெயர்). பள்ளனின் பெயர் அழகக் குடும்பன். மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.

சைவ சமய நூலாகிய திருவாரூர்ப் பள்ளில் பாட்டுடைத் தலைவன் வன்மீக நாதன். பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன். மூத்த பள்ளியின் பெயர் வன்மீகப் பள்ளி. இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி.

எடுத்துக்காட்டு

ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தை சேர்ந்தவள், மற்றவள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவன் மற்றும் திருமால் குறித்த விவாதத்தை முக்கூடற் பள்ளு காட்டுகிறது.

மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப் பொன்னின் மாயமாம் - பனி
மலையேறிப் போனான் உங்கள் மத்தன் அல்லோடி

காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால் - அன்று
கடலேறிப் போனான் உங்கள் கண்ணன் அல்லோடி

வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி

புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே - ஏழை
போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி

வானிலை

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
   யாள மின்னல் ஈழமின்னல்
   சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
   நீர்ப்படு சொறித்த வளை
   கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
   தேடியொரு கோடி வானம்
   பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க்
கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
   புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
   துள்ளிக் கொள்வோமே

பள்ளு நாடகம்

Pallu1.jpg

பள்ளு நூல்களை19-ம் நூற்றாண்டில் நாடகமாக நடிக்கும் வழக்கம் இருந்தது. பள்ளு இலக்கியத்தின் இசை அனைவரையும் கவரும் வண்ணம் சிந்து, கலிப்பா, கலித்துறை பாடல் வடிவங்களில் விருத்தப்பாவும் கலந்துவர அமையப் பெற்றிருக்கும். இதன் கதையோட்டம் நாடகத் தன்மைக்கு ஏற்றவாறு அமையப் பெற்றிருக்கும். கட்டியங்காரன்’ எனப்படும் பாத்திரம் நாடகக் கதையையும், நாடகக் கலைஞர்களையும், நாடக நிகழ்வுகளையும் அறிமுகம் செய்து நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் செய்யும். மற்ற இரு முக்கிய கதாப்பாத்திரங்கள் மூத்த பள்ளியும், இளைய பள்ளியும். இருவரும் ஒரே பள்ளனின் இரு மனைவியர். இவர்கள் இடையே நடைபெறும் சண்டையை விளக்கும் 'ஏசல்’ பாடல்கள் இடம்பெறும். இருவரும் வெவ்வேறு சமய சார்புடையவர்கள். தமது சமயம் பற்றியும், கணவன் பற்றியும் இருவரும் நடத்தும் வாக்குவாதமே 'ஏசல்’ எனப்படுகிறது. இறுதியில் ஒற்றுமையாக வாழ இருவரும் உடன்படுவர்.

திருவாரூர்க் கோவில் திருவிழாவின் போது திருவாரூர்ப் பள்ளு மேடை நாடகமாக நடிக்கப்பட்டது என்றும் நாடகம் முடிந்ததும் நாடகக் கலைஞர்கள் நூலாசிரியரின் பரம்பரையினர் வாழும் வீட்டிற்கு வந்து ஆசி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Mukkoodar pallu.jpg

பள்ளு நூல்கள்

  • அகத்தியர் பள்ளு
  • இரும்புல்லிப் பள்ளு
  • கங்காநாயக்கர் பள்ளு
  • கட்டி மகிபன் பள்ளு
  • கண்ணுடையம்மன் பள்ளு
  • கதிரை மலைப் பள்ளு
  • குருகூர்ப் பள்ளு
  • கொடுமாளூர்ப் பள்ளு
  • கோட்டூர் பள்ளு
  • சண்பகராமன் பள்ளு
  • சிவசயிலப் பள்ளு
  • சிவசைல பள்ளு
  • சீர்காழிப் பள்ளு
  • செண்பகராமன் பள்ளு
  • சேரூர் ஜமீன் பள்ளு
  • ஞானப் பள்ளு
  • தஞ்சைப் பள்ளு
  • தண்டிகைக் கனகராயன் பள்ளு
  • திருச்செந்தில் பள்ளு
  • திருமலை முருகன் பள்ளு
  • திருமலைப் பள்ளு
  • திருவாரூர்ப் பள்ளு
  • திருவிடைமருதூர்ப் பள்ளு
  • தென்காசைப் பள்ளு
  • பள்ளுப் பிரபந்தம்
  • பறாளை விநாயகர் பள்ளு
  • புதுவைப் பள்ளு
  • பொய்கைப் பள்ளு
  • மாந்தைப் பள்ளு
  • முக்கூடற் பள்ளு
  • முருகன் பள்ளு
  • வையாபுரிப் பள்ளு

உசாத்துணை

பள்ளு இலக்கியம், தமிழ் இணைய கல்விக் கழகம்

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. புரவலற் கூறி அவன் வாழியவென்று
    அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள்
    எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே

    - உழத்திப்பாட்டு முதலில் அரசனை வாழ்த்தி, அதன் பின் வயலில் செய்யும் தொழில் யாவும் பத்துப் பாடல்களாக பாடப்படுவது.
  2. ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்;
    அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
    பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;

  3. பள்ளு இலக்கியம்


✅Finalised Page