under review

முக்கூடற்பள்ளு

From Tamil Wiki
முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு : சிற்றிலக்கியங்களில் பள்ளு வகையச் சேர்ந்தது. திருநெல்வேலிக்கு வடகிழக்கே முக்கூடலில் கோவில் கொண்ட அழகர் மீது பாடப்பட்டது. பள்ளு நூல்களில் மக்களால் விரும்பிப் பயிலப்பட்டு வந்தது.

ஆசிரியர்

முக்கூடற்பள்ளு நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் எனக் கருதப்படுகிறது. 'வேளான் சின்னத் தம்பி' என்றும் அழைக்கப்பட்டார். டி.கே.சிதம்பரநாத முதலியார் இதன் இரண்டாம் பதிப்பின் (1949) முன்னுரையில், முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் யார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை எனக் குறிப்பிடுகிறார்.

பெயர்க்காரணம்

தென்பாண்டி நாட்டில் சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகிய இரு நதிகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்பட்டது. முக்கூடற் பள்ளு என்பது இடத்தால் பெற்ற பெயர். முக்கூடல் இன்று சீவலப்பேரி எனக் அழைக்கப்படுகிறது. பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி. 12- ஆம் நூற்றாண்டில் கட்டிய ஏரி ஸ்ரீவல்லபன் ஏரி எனப்பெயர் பெற்றது. இதனால் இவ்வூர் சீவலப்பேரி என வழங்கப்படுகிறது.

இங்கு மூவேந்தர் கல்வெட்டுக்களுடன் கூடிய தொன்மையான கோவிலில் கோயில் கொண்ட திருமால் 'அழகர்' என்றும் 'செண்டு அலங்காரர்' என்றும் அழைக்கப்படுகிறார். முக்கூடற்பள்ளு இந்த தெய்வத்தின் மேல் பாடப்பட்டது.

காலம்

இந்நூலின் காலம் கி.பி. 17-ம் நூற்றாண்டு. காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார், திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் ஆகிய செல்வர்கள் முக்கூடற் பள்ளில் பாராட்டப்பட்டுள்ளனர். இவர்களின் காலம் பொ.யு. 1676 முதல் பொ.யு. 1682 வரை என்பதால் முக்கூடற் பள்ளு நூலின் காலத்தை 17-ம் நூற்றாண்டு என்று கணக்கிடலாம்.

நூல் அமைப்பு

பள்ளு நூல்களுக்கே உரிய இலக்கணமாக ஒரு பள்ளனும் அவனது மனைவியர் இரு பள்ளியரும் முக்கியமான பாத்திரங்கள். மூத்தவள் (முக்கூடற்பள்ளிபள்ளி) முக்கூடலைச் சேர்ந்தவள் , வைணவத்தைப் பின்பற்றுபவள். சைவத்தைப் பின்பற்றும் இளைய பள்ளி (மருதூர்ப் பள்ளி) திருப்புடைமருதூரைச் சேர்ந்தவள். பள்ளன் அழகக் குடும்பன். பள்ளியர் இருவரும் தத்தம் ஊர் வளம் பாடுதல், மழை வேண்டுதல், பெருமழை பெய்தல், மூவாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தல், விளைச்சல், அறுவடை, பள்ளன் இளைய பள்ளியுடன் மோகங் கொள்ளுதல், மூத்த பள்ளி பண்ணையாரிடம் புகார் கூறல், பண்ணையார் பள்ளனை ஏசல், இரு பள்ளியர்களுக்குமான பூசல், பள்ளியர் இருவரும் தமக்குள் சமாதானமாதல், பள்ளன் உடல் தேறுதல் மற்றும் மங்கல வாழ்த்துடன் முடிகிறது இந்நூல்.

மேடையில் நடிக்க ஏற்ற வகையில் நாடகமாகப் பாடப்பட்டதால் நடிக்கப்பட்டும் வந்தது.

அறியவரும் செய்திகள்

அறுவடை நெல் பங்கீடு

அடியார்க்குச் சோறிடும் தினச்சத்திரம் பெரியநம்பி அய்யங்காருடைய திருமாளிகைச் செலவு, ஏழு திருப்பதிகள், காவை வடமலையப்பப் பிள்ளையன் மடம் முதலியவற்றிற்கு நெல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆடித் திருநாளுக்கு 1000 கோட்டைகள், பங்குனித் திருநாளுக்கு 1000 கோட்டைகள் மண்டகப்படி (திருவிழாக்காலங்களில் செய்யும் செலவு), சாத்து (கடவுளுக்கு மாலை முதலியன அணிவித்தல்) வகைகளுக்கு 1000 கோட்டைகள், நா வாணர்களுக்கும் மறையவர்களுக்கும் (அந்தணர்) 4000 கோட்டைகள், தினப்பூசைக்கு 8000 கோட்டைகள் (முக்.பள். 141-149). இவ்வாறாக வயல் வேளாண்மை முடிந்து நெல் பங்கிட்ட முறை விளக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள்

அழகரை வழிபட்டதோடு பள்ளர்கள் பூலா உடையார், கரையடிச் சாத்தான், புலியூர் உடையார், செல்லி ஆகிய தெய்வங்களையும் வழிபட்டனர். பூலா உடையாருக்குப் பொங்கல் இட்டுத் தேங்காயும் கரும்பும் நிறைய படைத்தனர். குமுக்கா உடையார் அய்யனுக்குக் குங்குமத்தையும் சந்தனத்தையும் கலந்து சாத்திப் போற்றினர். கரையடிச் சாத்தானுக்குக் காப்புக் கட்டி ஏழு செங்கிடாய்களை வெட்டிப் பலியிட்டனர். புலியூர் உடையார் ஏற்றுக் கொள்ளுமாறு சேவலைச் சாத்திர முறைப்படி பலியிட்டனர். சாராயத்தையும், பனையில் இருந்து இறக்கும் கள்ளையும் வடக்குவாசல் செல்லி உண்ணுமாறு வைத்தனர். பள்ளர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். பண் பாடிப் போற்றினர். கூத்தாடித் தொழுதனர். அழகரின் திருநாமங்களை ஏத்தினர்.

விதை வகைகள்

முக்கூடற்பள்ளு உழவுத் தொழிலை மையமாக வைத்துப் பாடப்பட்டது. உழவுத் தொழிலுக்கு அடிப்படையான வித்து (விதை), மாடு, ஏர் ஆகியன பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றின் வகைகளும் இங்கே கூறப்பட்டுள்ளன. இவை பழங்கால வேளாண்மைக் கலைச் சொல்லாக விளங்குவதை அறிய முடிகிறது. சீரகச் சம்பா, நெடுமூக்கன், மூங்கிற் சம்பா, கருங்குறுவை, புனுகுச் சம்பா, பூம்பாளை முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நெல்விதை வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன (முக்.பள்.109).

மாட்டு வகைகள்

மாட்டுவகைகளுக்கும் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடைக் கொம்பன், குத்துக் குளம்பன், கூடு கொம்பன், மயிலை, மட்டைக் கொம்பன், கருப்பன், மஞ்சள்வாலன், வெள்ளைக்காளை முதலிய இருபதுக்கும் மேலான பல்வகை மாடுகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன (முக்.பள். 110).

பாடல் நயம்

மழைக்குறி

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே
கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே
மழை தேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே
போற்று திருமாலழகர்க்கேற்ற மாம்பண்ணைச்
சேரிப் பள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே

பள்ளியர் பூசல்

மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப் பொன்னின் மாயமாம் - பனி
மலையேறிப் போனான் உங்கள் மத்தன் அல்லோடி
காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால் - அன்று
கடலேறிப் போனான் உங்கள் கண்ணன் அல்லோடி
வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி
புலிபோல் எழுந்து சிசுபாலன் வையவே - ஏழை
போல நின்றான் உங்கள் நெடுநீலன் அல்லோடி

சிறப்புகள்

பள்ளு சிற்றிலக்கிய வகையில் மக்களால் விரும்பப்பட்டதும், பயிலப்பட்டும் வந்த நூல் முக்கூடற்பள்ளு. எளிமையான சந்தமும், அங்கதம், நூலில் விரவி வரும் வரலாறு, வாழ்வியல், சமூகச் செய்திகள் காரணமாக முக்கியமான நூலாகிறது. பள்ளிகளின் பூசலில் சிவனையும், திருமாலையும் பழிப்பது போல் தோன்றினாலும் வஞ்சப் புகழ்ச்சியாக தெய்வங்களில் சிறப்பையே கூறுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page