மலைபடுகடாம்
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை[1]) என்னும் ஆற்றுப்படை நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. நவிர மலையின் தலைவனான நன்னன் சேய் நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. 583 அடிகளால் ஆன இப்பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
நன்னனிடம் பரிசு பெற்று வந்த கூத்தன் ஒருவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு கூத்தனை அம் மன்னனிடம் சென்று பரிசு பெறும் வகையில் வழிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
மலையில் அருவிநீர் விழுகின்ற பொழுது இனிய ஓசையைக் கடாம் என்று சிறப்பித்துக் கூறுவதால் மலைபடுகடாம் என்னும் பெயர் என்றும் யானையை மலையாகவும், அதன் மத நீரை அருவியாகவும் கற்பனை செய்து புலவர் பாடியமையால் மலைபடுகடாம் என்னும் பெயர் என்றும் இருவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை என்னும் வகைமையை சேரும்.
உள்ளடக்கம்
நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந்நூலின் பாடல்களில், அக்காலத்து இசைக்கருவிகள் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் உள்ளன.
நூல் அமைப்பு
- கூத்தர் பலவகை வாத்தியங்களைப் பையிலிட்டு எடுத்துச் செல்லுதல் (1-13)
- அவர்கள் கடந்து வந்த மலை வழி (14-18)
- பேரியாழின் இயல்பு (19-37)
- பாணரும் விறலியரும் சூழ இருந்த கூத்தர் தலைவனை அழைத்தல் (38-50)
- 'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல் (51-65)
- கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல் (66-94)
- வழியினது நன்மையின் அளவு கூறுதல் (95-144)
- கானவர் குடியின் இயல்பு (145-157)
- வழியிலுள்ள சிற்றூர்களில் நிகழும் விருந்து (158-169)
- நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள் (170-185)
- மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல் (186-192)
- பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும் எனல் (193-196)
- பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை (197-202)
- கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லவேண்டும் விதம் (203-210)
- காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடத்தல் (211-218)
- பாசி படிந்த குளக் கரைகளைக் கடந்து செல்லுதல் (219-224)
- காரி உண்டிக் கடவுளைத் தொழுதல் (225-232)
- மலைக் காட்சிகளில் ஈடுபடின், வழி தப்பும் என்று அறிவுறுத்தல் (233-241)
- இரவில் குகைகளில் தங்குதல் (242-255)
- விடியற்காலத்தில் செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல் (256-258)
- வழியில் மேற்கொள்ளவேண்டும் முன் எச்சரிக்கைகள் (259-270)
- குறவரும் மயங்கும் குன்றத்தில் செய்யவேண்டுவன (271-277)
- வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவிபுரிதல் (278-291)
- மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல் (292-344)
- நன்னனது மலை வழியில் செல்லும் வகை (345-360)
- குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி (361-375)
- அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள் (376-389)
- புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து இட்டுச் செல்லுதல் (390-393)
- நன்னனுடைய பகைவர் இருக்கும் அரு நிலங்கள் (394-403)
- கோவலரது குடியிருப்பில் பெறும் உபசாரம் (404-420)
- நாடுகாக்கும் வேடர் திரள்களின் செய்கை (421-425)
- மாலை சூடி, நீர் அருந்தி, குளித்துச் செல்லுதல் (426-433)
- புல் வேய்ந்த குடிசைகளில் புளிங் கூழும் பிறவும் பெறுதல் (434-448)
- நன்னனது தண் பணை நாட்டின் தன்மை (449-453)
- உழவர் செய்யும் உபசாரம் (454-470)
- சேயாற்றின் கரைவழியே செல்லுதல் (471-477)
- நன்னனது மூதூரின் இயல்பு (478-487)
- மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல் (488-496)
- அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம் (497-529)
- முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல் (530-538)
- கூத்தர்கள் நன்னனைப் போற்றுதல் (539-543)
- நன்னன் கூறும் முகமன் உரை (544-546)
- நாளோலக்கத்திற்கு அழைத்துச் செல்லுதல் (547-549)
- நன்னனது குளிர்ந்த நோக்கம் (550-560)
- நன்னனது கொடைச் சிறப்பு (561-583)
என்று 583 வரிகளில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது.
உரை நூல்கள்
- மலைபடுகடாம் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் - உ.வே. சாமிநாதையர் - சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம் , 1912[2]
- பொ.வே.சோமசுந்தரனார் உரை - கழக வெளியீடு
உசாத்துணை
- கூத்தராற்றுப்படை - தமிழ் இணைய பல்கலைக்கழகம்
- மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
- மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை - கரந்தை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட இலக்கிய இதழ் தமிழ்ப் பொழில் வெளிவந்த கட்டுரை - 1943
இதர இணைப்புகள்
- ஆற்றுப்படை
- பாணாற்றுப்படை
- புலவராற்றுப்படை
- விறலியாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
அடிக்குறிப்புகள்
- ↑ வச்சணந்திமாலை உரை என்னும் 13-ம் நூற்றாண்டு நூல் திருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது.
- ↑ மலைபடுகடாம் மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Nov-2023, 09:38:11 IST