under review

திருமுருகாற்றுப்படை

From Tamil Wiki
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் சங்க நூல்களுள் முதலில் வைக்கப்படுவது திருமுருகாற்றுப்படை[1]. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளில் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. ஆற்றுப்படை நூல்களில் ஒன்றாகிய இதன் ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த கணக்காயனார் மகனார் நக்கீரர். 'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல்லுக்கு 'வழிப்படுத்தல்' என்று பொருள். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் (நச்சினார்க்கினியர் உரை). புலவரை ஆற்றுப்படுத்தும் நூல் ஆகையால் இது புலவராற்றுப்படை என்னும் வகைமையுள்ளும் வைக்கப்படுகிறது.

காலம்

தொடக்கக் காலத்தில் வெறியாட்டு கொள்ளும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று -"முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்" (அகம்:22) பாடல் காட்டுகிறது[2].

இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தி. இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்ற கருத்தும் இருக்கிறது. எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதாகும். இது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது.

நூல் அமைப்பு

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாடுவதாக அமைந்துள்ளது. முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு[3]

என்ற அழகிய உவமையுடன் தொடங்குகிறது. உலகமெல்லாம் உவகை கொள்ளுமாறு இளங்கதிர் கடலில் தோன்றியதுபோல என்று இந்த உவமைக்குப் பொருள். இளஞாயிறு முருகனுக்கும், நீலக்கடல் மயிலுக்கும் உவமையாகின்றன.

ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை வேறுபடுகிறது. பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை போன்ற பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன. திருமுருகாற்றுப்படை இறைவன் அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது.

நக்கீரர் ஆற்றுப்படை நூலுக்கும் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர், விறலி, புலவர் எனஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஆற்றுப்படை நூல்கள் அமைவது வழக்கம். திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை உரைகள்

திருமுருகாற்றுப்படை - ஆறுமுக நாவலர் உரை
திருமுருகாற்றுப்படை - ஆறுமுக நாவலர் உரை

திருமுருகாற்றுப்படை நூலுக்கு அமைந்த பழமையான உரைகள் ஐந்து.

  1. நச்சினார்க்கினியர் உரை[4]
  2. கவிப்பெருமாள் உரை
  3. பரிமேலழகர் உரை
  4. பரிதியார் உரை
  5. பழைய உரையாசிரியர் உரை

இந்த ஐந்து உரைகளையும் தொகுத்துக் காசிமடம் வெளியிட்டுள்ளது. இவை (1959-ம் ஆண்டு), திருப்பனந்தாள் ஆதீனம் வெளியிட்ட திருமுருகாற்றுப்படை உரை வளம் (ஐந்து பழைய உரைகள்: நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர், கவிப்பெருமாள், பரிதி) என்ற நூலில் இடம் பெற்றுள்ளன:

நச்சினார்க்கினியர் உரை

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் திருமுருகாற்றுப்படைக்கும் உரை எழுதியுள்ளார். இவர் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

பழைய உரை

திருமுருகாற்றுப்படை பழைய உரை எஸ். வையாபுரிப் பிள்ளையின் விரிவான ஆராய்ச்சி முன்னுரையுடன் செந்தமிழ் இதழில் 1943-ல் வெளிவந்தது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்கினியார் இவ்வுரையை மேற்கோள் காட்டிவிளக்குவதால் பழைய உரையின் காலம் 13-ம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.

பரிமேலழகர் உரை

திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை என்னும் பெயரில் ஒரு நூல் வெளிவந்துள்ளது[5]. இந்த நூலைத் திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்டுள்ளது. பல அரிய தமிழ் நூல்களை வெளியிட்ட சைவ சித்தாந்த மகாசமாஜம், பல ஆண்டுகளுக்கு முன், பரிமேலழகர் உரை என்ற பெயரோடு திருமுருகாற்றுப்படைக்குப் பழைய உரை ஒன்றினை வெளியிட்டது[6]. இதனை இயற்றியவர் பரிமேலழகர் அல்ல என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், பத்துப்பாட்டு மூன்றாம் பதிப்பில், அடிக்குறிப்பாக இவ்வுரையைச் சேர்த்து 'வேறுரை’ என்று குறிப்பிட்டுள்ளார். பரிமேலுழகர் பெயரால் வழங்கிவரும் இந்தப் பழையவுரை அடிதோறும் பதவுரை கூறிக் கீழே அருஞ் சொல்விளக்கம், வினைமுடிபு, இலக்கணக் குறி்ப்பு ஆகியவற்றைத் தருகிறது. இவரது உரையில் உபநிடதம், கல்லாடம் என்னும் சைவ நூல், முதலானவை குறிப்பிடப்படுகின்றன. முருகனைக் குறிக்க சுப்பிரமணியன் என்னும் சொல்லைக் கையாளுகிறார். 'நால் வேறு இயற்கை' எனத் திருமுருகாற்றுப்படையில் வரும் தொடருக்கு சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சயம் என்பனவற்றைக் காட்டி விளக்குகிறார். இந்த உரையை,

அரிமேல் அழகுறூஉம் அன்பமை நெஞ்சப்
 பரிமே லழகன் பகர்ந்தான்-விரிவுரைமூ
 தக்கீரிஞ் ஞான்று தனிமுருகாற் றுப்படையாம்
 நக்கீரன் நல்ல கவிக்கு

என்ற வெண்பா குறிப்பிடுகிறது.

உரையாசிரியர் உரை

திருமுருகாற்றுப்படைக்கு உரையாசிரியர் உரை’ என்ற பெயருடன் பழைய உரை கிடைத்தது. பரிமேலழகர் உரையுடன் இந்த உரை பெரிதும்ஒத்துள்ளது. இதனை மதுரைத் தமிழிச்சங்க வெளியீடாக (1943) ஆராய்ச்சி அறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஆராய்ச்சி முன்னுரையுடன் பதிப்பித்துள்ளார். இவ்வுரையின், சிறப்பியல்பைப் பின்வருமாறு வையாபுரிப் பிள்ளை எழுதுகிறார்:

"இஃது ஒரு சிறந்த பழைய உரையாகும். யாவரும் அறியக் கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப் பெற்றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆற்றுப்படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்."

இவைதவிர வேறு இரண்டு பழைய உரைகளும் கிடைத்துள்ளன. வே. ரா. தெய்வ சிகாமணிக் கவுண்டர், கவிப் பெருமாள் உரையையும் பரிதி குறிப்புரையையும் கண்டெத்து வழங்கியுள்ளார்.

கவிப்பெருமாள் உரை

இவ்வுரை அடிகளின் பொருள் தொடர்பை வரையறுத்துக் கூறும் பொழிப்புரையாக அமைந்துள்ளது. கீழே விளக்கமும் இலக்கணக் குறிப்பும் தரப்பட்டுள்ளன. இவ்வுரையைப் பின்வரும் வெண்பா குறிப்பிடுகிறது:

வண்டமிழ்தேர் கீரன் வளமறையாய்ச் சேந்தன்மேல்
 தண்டமிழ்ஆற் றுப்படையாத் தானுரைத்தான் -ஒண்டமிழின்
 தெய்வக் கவிப்பெருமாள் தேன்போல் உரைசெய்தான்
 கைவந்த நூன்முறைமை கண்டு.

பரிதி உரை

இவ்வுரை அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறும் குறிப்புரையாகும். இப்போது கிடைக்கின்ற உரைகளில் காலத்தால் இது முற்பட்டதாக இருக்கலாம். தேவையான இடங்களில் மிகச்சுருக்கமாய் இலக்கண விளக்கம் தருகின்றது. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் திறனை இவ்வுரை முழுதும் காணலாம். இந்த உரையைப் பின்வரும் வெண்பா பாராட்டுகின்றது:

நக்கீரர் தாம்செய்த நன்முருகாற் றுப்படைக்குத்
 தக்கவுரை சொன்ன தகுதியான் - மிக்குலகில்
 பன்னூல் அறிந்த பரிதி மறைப்புலவன்
 தொன்னூல் அறிவால் துணிந்து.

இவர்களுக்குப்பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர் போன்றோரின் உரைகளும் வெளிவந்துள்ளன.

பதிப்பு வரலாறு

இந்நூலை முதன்முதலில் 1834-ல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார். 1851-ல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. உ.வே. சாமிநாதையர் அவர்களின் 1889-ம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது. இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
    கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
    பாலை கடாத்தொடும் பத்து.

    இதில் முருகு எனக் குறிப்பிடப்படுவது திருமுருகாற்றுப்படை
  2. களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
    வள நகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து
    உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
    முருகாற்றுப்படுத்த உரு கெழு நடுநாள்

    - அகநானூறு 22 -

    வெறிக்களத்தை நன்கு அலங்கரித்து, பூமாலை சூட்டி, வளம்பொருந்திய வீடே எதிரொலிக்கப் பாடி, பலி கொடுத்து,அழகிய செந்தினையைக் குருதி கலந்து தூவி,முருகனை வரவழைத்த நாள்

  3. புலவர் பெருமான் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
  4. திருமுகாற்றுப்படை உரை - சரசுவதி மகால் நூலகம் நச்சினார்க்கினியர் உரை இந்நூலில் இடம் பெற்றுள்ளது
  5. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 63
  6. திருமுருகாற்றுப்படை - தமிழ் இணையப் பல்கலைக்கழகம்


✅Finalised Page