under review

சிறுபாணாற்றுப்படை

From Tamil Wiki
சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியில் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் கொண்டது.

நூல் அமைப்பு

  • சிறுபாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்)
  • விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்)
  • பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்)
  • சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்)
  • உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்)
  • வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்)
  • வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்)
  • பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்),
  • மானம் பேணும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்)
  • நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்)
  • வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்)
  • அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்)
  • நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்)
  • தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்)
  • ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்)
  • வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்)
  • விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்)

என்று 269 அடிகளில் சிறுபாணாற்றுப்படை இயற்றப்பட்டிருக்கிறது.

நூல் சிறப்பு

சிறுபாணாற்றுப்படை ஓலைச்சுவடி
சிறுபாணாற்றுப்படை ஓலைச்சுவடி - டாக்டர் உ.வே.சா. நூலகம், சென்னை

ஓய்மானாட்டு நல்லியக்கோடன் புகழ் பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக் காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது, "மூவேந்தர்களின் தலை நகரான வஞ்சியும் உறையூரும் மதுரையும் முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவருக்கு வாரி வழங்கும் வன்மை எந்த அரசுக்கும் இல்லை. மாஇலங்கை ஆண்ட ஓவிய மன்னர் குலத்து வந்த நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இவர்களைவிட அதிகமாகக் கொடை தரும் வள்ளல் குணம் உடையவன்" என்று கூறுகிறார். கொடை கொடுப்பதில் கடையெழு வள்ளல்கள் பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை (84-111) ஆகிய 28 வரிகளில் காணலாம்.

சிறுபாணாற்றுப்படையில் உவமை

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல

என்ற உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இறங்கும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பது இவ்வரிகளின் பொருள். அதனைத் தொடர்ந்து, மலையிலிருந்து இறங்கிய நீர், காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமைகள் நிறைந்துள்ளன.

பாணனின் வறுமை

சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது. தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறான். இத்தகைய பாணனின் வறுமையை[1],

திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி

என்ற பாடல் வரிகள் பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை சொல்வதன் மூலம் விவரிக்கிறது. பாணன் வீட்டு சமையல் அறையில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. கண்விழிக்காத நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் பசி பொறுத்துகொள்ள முடியாத குட்டியும், அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாயும் உள்ள ஏழ்மையான வீடு பாணன் வீடு. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் அடுப்பில் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பை சொல்லும்போது, மேல்கூரை இடிந்து விழுவது போல் உள்ளது, கரையான் பிடித்த சுவர், வீடெல்லாம் புழுதி, புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறும், வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் உணவு சமைக்கிறாள். இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர். இப்படிப்பட்ட வறுமை பாணர் சமூகத்தில் பரவலாக இருந்திருக்கிறது. அதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற வள்ளல்களும் இருந்துள்ளனர் என்று சிறுபாணாற்றுப்படை காட்டுகிறது.

உரைகள்

நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் சிறுபாணாறுப்படைக்கு நான்கு உரையாசிரியர்கள் உரை எழுதிப் பதிப்பித்துள்ளனர்:

  • வை.மு.கோ
  • வி. கந்தசாமி முதலியார்
  • மு. பி. பாலசுப்பிரமணியன்
  • பொ. வே. சோமசுந்தரனார்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page