under review

மங்கலவள்ளை

From Tamil Wiki

மங்கலவள்ளை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயர்ந்த குலத்துப் பெண்ணை ஒன்பது வெண்பாக்களினால் பாடுவது மங்கலவள்ளை

ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல
மங்கையைப் பாடுவது மங்கல வள்ளை
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 828

மாசில் குலமகளை வகுப்பு வெண்பாவினால்
வருபொரு ளுரைத்தலாய் ஒன்பதொன்ப
தாகப் பாடின் மங்கல வள்ளை
                    - பிரபந்த மரபியல் - 13

முத்துவீரியமும், வெண்பாப் பாட்டியலும் ஒன்பது வெண்பா, ஒன்பது வகுப்பு(ஒரு பாவகை) கொண்டு உயர்ந்தமகளிரைப் பற்றிப் பாடுவது மங்கல வள்ளை என இலக்கணம் உரைக்கின்றன,

மேற்குலத்திற் பிறந்த மின்னாளை வெண்பா
ஒன்பதாலும் வகுப்பொன்பதினாலும்
வழுத்துவது மங்கல வள்ளை யாகும்.
                                        - முத்து வீரியம் 1111

கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பான்என் றிசை
                                   - வெண்பாப்பாட்டியல் 54

கம்பராமாயணத்தில் அயோத்தியின் கொடையாளர் இல்லத்தில் பெண்களின் மங்கல வள்ளை(உலக்கைப் பாடல்கள்) பாடல்கள் ஒலிப்பதாக ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. நெல் குத்தும்போது மாண்புடைய குலப்பெண்களைப் போற்றும் பாடல்களைப் பாடியிருக்கலாம்.மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணம், சுண்ணம் இடிக்கும்போது புகழ்மிக்க ஆடவனின் புகழைப் பாடும் பாடல் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

தினைச்சி லம்புவ தீஞ்சொல் இளங்கிளி
நனைச்சி லம்புவ நாகிள வண்டு பூம்
புனைச்சி லம்புவ புள்ளினம் வள்ளியோர்
மனைச்சி லம்புவ மங்கல வள்ளையோ.
                பால காண்டம், நாட்டுப் படலம் 29

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page