under review

கையறுநிலை

From Tamil Wiki

To read the article in English: Kaiyarunilai. ‎


கையறுநிலை : துயரில் செய்வதறியாது இருக்கும் நிலை. இறப்பின் துயரை அல்லது இழப்பின் துயரை வெளிப்படுத்தும் இலக்கிய கருப்பொருள். புறப்பாடல்களில் பேசுபொருளாகும் துறைகளில் ஒன்று. தமிழின் சங்ககால இலக்கியங்களில் தலைவனோ தலைவியோ மறைந்தபின் பாடும் இரங்கல் கையறு நிலை என்னும் துறையை சார்ந்தது. கையறுநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்றும்கூட.

கையறுநிலை, இலக்கணம்

கை என்னும் சொல் ஆகுபெயராய் அதன் செயலைக் குறிக்கிறது. தலைவனை இழந்து செயலற்று நிற்பது 'கையறுநிலை’. கை என்னும் சொல் தமிழில் செயல் என்னும் பொருளேற்றம் கொள்ளும். செயலற்ற நிலை, செய்வதறியா நிலை என பொருள் படுகிறது கையறுநிலை எனும் சொல்லாட்சி.

தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத்தார் முதலானோர் செயலற்று மிகவருந்தியமை கூறும் புறத்துறை என்று எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ்ப்பேரகராதி பொருள் அளிக்கிறது.

மறைந்தோர் பொருட்டு அவர்களின் உற்றார் அடையும் துயர்நிலை. 'கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்’ என்று தொல்காப்பிய வரையறையை பேரகராதி அளிக்கிறது.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் கையறுநிலையின் நான்கு நிலைகளை வரையறை செய்கிறது

இளிவே இழவே அசைவே வறுமையென

விளியில் கொள்கை அழுகை நான்கே

புறப்பொருள் வெண்பா மாலை

புறப்பொருள் வெண்பா மாலை கையறு நிலைக்கு இரண்டு வரையறைகளை அளிக்கிறது

  • 'செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசோர்ந்தன்று’ என்னும் வரியில் கழலணிந்த மன்னன் மாய்ந்தபோது அவனைச்சேர்ந்தவர் செய்வதறியாது துயருறுதல் கையறுநிலை என்னும் வரையறை உள்ளது.
  • 'கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன' என்னும் புறப்பொருள் வெண்பா மாலை வரி மறைந்தவனின் புகழை பெருந்துயருடன் எடுத்துரைப்பதும் கையறுநிலையே என வரையறை செய்கிறது.
பன்னிரு பாட்டியல்

“வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின கற்றோர் உரைப்பது கையறு நிலையே" என்று பன்னிரு பாட்டியல் கையறுநிலையை வரையறை செய்கிறது. கையறு நிலை என்பது கைவிடப்பட்ட நிலை, துயருற்ற நிலை என்னும் பொருளிலும் சங்கப்பாடல்களில் கையாளப்படுகிறது. ’காலையும் பகலும் கையறு மாலையும்’ என்று அள்ளூர் நன்முல்லை எழுதிய குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

கையறுநிலை பாடல்கள்

கையறுநிலை என்னும் துறைக் குறிப்புடன் புறநானூற்றில் 41 பாடல்கள் உள்ளன.

வடக்கிருந்தோரைக் கண்டு பாடியவை
  • சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது[1]
  • பாரி துஞ்சியபின் கபிலர் வடக்கிருந்து பாடியது[2]
  • பிசிராந்தையார் வடக்கிருந்ததைப் பொத்தியார்[3] கண்ணகனார்[4] பாடியவை.
  • கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்ததைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்[5] பொத்தியார்[6] பாடியவை.
இறந்த அரசனை எண்ணிப் பாடியவை
  • பாரியை இழந்த கபிலர்[7]
  • சோழன் கரிகாற் பெருவளத்தானை இழந்த கருங்குழல் ஆதனார்[8]
  • சோழன் நலங்கிள்ளியை இழந்த ஆலத்தூர் கிழார்[9]
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இழந்த மாறோக்கத்து நப்பசலையார்[10]ஆடுதுறை மாசாத்தனார்[11] ஆகியோர்
  • அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார்[12]
  • அதியமான் நெடுமான் அஞ்சியை இழந்த ஔவையார்[13]
  • வேள் எவ்வியை இழந்த வெள்ளெருக்கிலையார்[14]
  • வெளிமானை இழந்து பெருஞ்சித்திரனார்[15]
  • நம்பி நெடுஞ்செழியனை இழந்து பேரெயின் முறுவலார்[16]
  • ஆய் அண்டிரனை இழந்து குட்டுவன் கீரனார்[17] உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் [18] ஆகியோர்
  • ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை இழந்து குடவாயிற் கீரத்தனார்[19] தொடித்தலை விழுத்தண்டினார்[20] ஆகியோர்.

இவை தங்களைப் பேணிய அரசனை இழந்த புலவர்கள் பாடியவை.

மாண்ட வல்லாளனை எண்ணி வருந்தியவை
  • மீளியாளன் ஆனிரை தந்து அரிது செல் உலகுக்குச் சென்றனன். பாண! செல்லும் வழியில் கள்ளி நிழல் தரும் பந்தலின் கீழ் நடுகல் ஆயினன். ஆற்றங்கரைக் கம்பத்தில் ஏற்றப்பட்ட விளக்கு காற்றில் அவிந்து நிற்பது போல் அவன் நடுகல் உள்ளது. அதற்கு மயில் பீலி சூட்டிச் செல்லுங்கள். - வடமோதங்கிழார்[21]
  • ஆநிரை தந்தவன் கல்லாயினான். அவனது வீட்டு முற்றத்தில் அவன் மனைவி மயிர் கொய்த தலையோடு நீரில்லாத ஆற்றுமணலில் கிடக்கும் அம்பி போலக் காணப்படுகிறாள். - ஆவூர் மூலங்கிழார்[22]
  • பாண! ஒருகண் மாக்கிணை முழக்கிக்கொண்டு செல்லும்போது, வழியில், ஆனிரை மீட்பதில் வெள்ளத்தைத் தடுக்கும் கற்சிறை போல விளங்கியவனின் நடுகல் இருக்கும். அதனைத் தொழுது செல்லுங்கள். - மதுரைப் பேராலவாயார்[23]
  • ஆநிரை தந்து, ஆநிரை மீட்டுப் பாணர்களைப் பேணிய அவனுக்குப் பெயர் பொறித்துக் கல் நட்டு மயில் பீலி சூட்டி வழிபடுகின்றனர். - உறையூர் இளம்பொன் வாணிகனார்[24]
  • கோவலர் வேங்கைப் பூமாலை சூட்ட நடுகல் ஆயினன். - சோணாட்டு முகையலூர்ந் சிறுகருந்தும்பியார்[25]
  • நவி (கோடாரி) பாய்ந்துகிடக்கும் மரம் போல வாள் பாய்ந்து கிடப்பவனைப் பாடியது. - கழாத்தலையார்[26]

சிற்றிலக்கியங்கள்

தமிழின் சிற்றிலக்கியங்கள் என்னும் இலக்கியத்தொகுப்பில் ஒரு வடிவமாக கையறுநிலை குறிப்பிடப்படுகின்றது. 96 வகை சிற்றிலக்கியங்களில் கையறு நிலையும் ஒன்று

கையறுநிலை பேசுபொருளாகக்கொண்ட தனிப்பாடல்களும் ஏராளமாக உள்ளன.

நாட்டார் மரபு

நாட்டார் மரபில் ஒப்பாரி என்னும் பாடல் வடிவம் கையறுநிலைக்கு நிகரானது.

புத்திலக்கியம்

நவீன இலக்கியத்தில் இரங்கற் பா என்னும் வடிவம் கையறுநிலையை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக இரங்கல் இலக்கியம் என்னும் வகைமையில் அடக்கலாம்.

அடிக்குறிப்புகள்

  • புறநானூற்றுப் பாடல் எண்கள்

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:54 IST