under review

முதுகாஞ்சி

From Tamil Wiki

முதுகாஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இளமையைப் போற்றும் மக்களுக்கு முதியோர் இளமை நிலையாமை குறித்து அறிவுரை கூறுதல் முதுகாஞ்சி (தொல்காப்பியர் கூறும் காஞ்சித்திணையின் ஓர் துறை).

தொல்காப்பியம்

கழிந்தோர்; ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்’
(தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப., 77)

என முதுகாஞ்சி பற்றி மொழிகிறது. இதற்கு, ‘‘அறிவான் மிக்கோர்; அல்லாதார்க்குச் சொன்ன முதுகாஞ்சியும்’’ என உரை வகுத்தார் இளம்பூரணர். முதுகாஞ்சி வீடுபெறுதற்கு வழி கூறுவது என நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். இப்பொருள் குறித்த 30 பாடல்கள் கொண்டது முதுகாஞ்சி.

முதுகாஞ்சி என்பது முதுமையை மொழிதல் - பிரபந்த தீபம் நூற்பா 89

கழறு இளமை ஒரீஇ அறிஞர் இளமையுறு அறிவின் மாக்கட்கு அறைதல் முதுகாஞ்சி - பிரபந்த தீபிகை நூற்பா 30

எடுத்துக்காட்டு

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி, முதுகாஞ்சித் துறையில் பொருத்தமுற அமைந்த இலக்கியம். மதுரைக்காஞ்சி தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனுக்கு நிலையாமை அறிவுறுத்தற் பொருட்டு பாடப்பட்டுள்ளது. உடல், செல்வம், இளமை இவற்றின் நிலையாமையை உணர்த்தி வீடுபேறு அடைதற்கு வழிகாட்டுவதாக அமைகிறது.

‘‘இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்
பொருது, அவரைச் செரு வென்றும்
இலங்கு அருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்தோங்கிய விழுச் சிறப்பின்
நிலம் தந்த பேருதவிப்
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்!’’

          (மதுரைக்காஞ்சி : 55 – 60)

என்று நூலின் தொடக்கத்திலிருந்தே ‘முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பலாவர்’ என்ற கருத்தை முன்னிருத்துகிறது.காஞ்சித்திணை உலகத்து நிலையாமை கூறி வீடு பேற்றையடைய வழி கூறுகின்றது.

உசாத்துணை

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை-முனைவர் சேதுராமன், திண்ணை-நவம்பர் 2010

கருவி நூல்கள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page