under review

மதுரைக் காஞ்சி

From Tamil Wiki

சங்கத் தொகை நூலான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று மதுரைக் காஞ்சி. சங்ககால மதுரை, அதன் மக்கள், தமிழர்களின் வாழ்க்கைமுறை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன.

நூல் பற்றி

மாங்குடி மருதனார் இந்நூலை இயற்றினார். புலவரும், போர்வல்லவருமான பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மதுரைக் காஞ்சின் பாட்டுடைத் தலைவன். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள நூல்களுள் 782 அடிகள் கொண்ட மதுரைக் காஞ்சியே நீளமான நூல். நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதற்காகப் பாடப்பட்டது. வாழ்க்கையின் நிலையாமையை மன்னருக்கு எடுத்துக் கூறுவதாய்அமைந்துள்ளது.

சிறப்புப் பெயர்கள்

  • பெருகு வளமதுரைக் காஞ்சி
  • கூடற்றமிழ்
  • காஞ்சிப் பாட்டு

நூலின் வழி அறியவரும் செய்திகள்

  • பாண்டிய நாட்டையும், மதுரைத் தலை நகரையும் வாழ்த்திப்பாடப்பட்டுள்ளது. இது தமிழகத்தையும், தமிழகத்து பேரூர்களையும் பாராட்டும் அளவு சிறப்பு பெற்றது.
  • தமிழகத்தின் இயற்கை வளங்கள், ஐந்நில அமைப்பு, பேரூர்களின் பண்புகள், அப்பேரூர்களின் அரண்கள், அரசர் தெரு முதலான தெருக்கள், கோயில்கள், அங்காடி வீதிகள், கடற்றுறைகள் பற்றிய செய்திகள் உள்ளன.
  • அரும் பொருட்கள், நகர் மக்கள், அவர்கள் மேற்கொண்டிருந்த தொழில்கள், தொழில் நுட்பங்கள், அமைச்சர், அறங்கூற,வையத்தார் இயல்புகள், ஆடவர், பெண்டிர் பண்புகள், ஊரில் எழும் ஒலிகள், ஓங்கிப் பறக்கும் கொடிகள் பற்றிய செய்திகள் உள்ளன.
  • தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பற்றிய வர்ணனைகள் உள்ளன.
  • தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றிய வர்ணனைகள் உள்ளன.
  • போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் மருதனார் பாடியுள்ளார்.
  • மதுரையின் பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் செய்திகள் உள்ளன.
  • ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள், குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம், மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவையும் பாடப்பட்டுள்ளன.

பாடல் நடை

  • மதுரைக்காஞ்சி: 19-23: பாண்டியனின் முன்னோர்கள் பற்றி

பொய்யறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு
நல்லூழி அடிப்படாரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர்

  • மதுரைக்காஞ்சி: 489-92: அறங்கூறு அவையத்தார்கள் பற்றி

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோலன்ன செம்மைத்தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவை

  • மதுரைக்காஞ்சி: 496-9: காவிதி மக்கள் அறிமுகம்

நன்றும் தீதும் கண்டாய் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள்

  • மதுரைக்காஞ்சி: 197-205: நெடுஞ்செழியனின் பண்புகள்

உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே;
முழங்குகடல் எணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழுகலையே;
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழி நமக்கெழுக வென்னாய் ; விழுநிதி
ஈதல் உள்ள மொடு இசை வேட்குவையே

  • மதுரைக்காஞ்சி: 235-7: நிலையாமை

கரைபொருது இரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே , உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே

  • போரின் கொடுமையை விளக்குதல்

நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக

  • நாளங்காடி அல்லங்காடி

நாளங்காடி அல்லங்காடி
மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

உசாத்துணை


✅Finalised Page