under review

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

From Tamil Wiki
Revision as of 20:09, 13 January 2024 by ASN (talk | contribs)

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) (2007), தமிழ் மொழி வளர்ச்சிக்கான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மொழிப் பிரிவின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி நிறுவனம். மத்திய அரசு, அக்டோபர் 12, 2004 அன்று தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், செம்மொழித் தமிழாய்வை வளர்க்கும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை நிறுவியது.

தோற்றம்

இந்திய அரசு, அக்டோபர் 12, 2004 அன்று தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது. ஜூலை 2005-ல், தமிழ்மொழி மேம்பாட்டுக்கான மையத் திட்டம் (Central Plan Scheme for Classical Tamil) மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம் (CIIL) ஒப்படைக்கப்பட்டது. 2006 மார்ச் முதல் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்ற பெயரில் செயல்பட்டது.

ஆகஸ்ட் 18, 2007-ல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. ஜனவரி 21, 2009 அன்று, தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10-ன் கீழ் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இந்நிறுவனம், ஏப்ரல் 2022 முதல், சென்னை பெரும்பாக்கத்தில் சொந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

பொயு 600-க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்துவதையும், செம்மொழித் தமிழாய்வை வளர்ப்பதையும் முக்கிய நோக்கமாக் கொண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிறுவனத்தின் தலைவர். பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி துணைத்தலைவர். பேராசிரியர் இரா. சந்திரசேகரன் இந்நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆட்சிக்குழு, நிதிக்குழு மற்றும் கல்விக்குழுவால் நிறுவனத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணிகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கீழ்காணும் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வருகிறது.

  • பல்துறை சார்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல்.
  • தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து ஆராய்தல்.
  • பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்.
  • இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல்.
  • திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளல்.
  • உலக அளவில் ஆய்வுக் களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்துதல்.
  • பழந்தமிழ் நூற்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதி வழங்குதல்.
  • தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குதல்.
  • செம்மொழித் தொடர்பான முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்.
  • செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோர்க்கு விருதுகள் வழங்குதல்.
  • செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துதல்.

முதன்மைத் திட்டப் பணிகள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் கீழ்காணும் திட்டங்களை முதன்மைத் திட்டப் பணிகளாக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு

தொன்மைக் காலம் முதல் பொயு ஆறாம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும் மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரைமேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம். இறையனார் களவியலுரை, ஐங்குறுநூறு (மருதம், நெய்தல், குறிஞ்சி) ஆகிய நூல்களுக்கான செம்பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

41 செவ்வியல் நூல்கள்

பொயு ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கீழ்காணும் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால், தமிழ்ச் செவ்வியல் நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கணம்

எட்டுத்தொகை நூல்கள்

பத்துப்பாட்டு

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

பிற நூல்கள்

பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்

41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பில் தமிழ் மூலம், அதன் ஒலிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு, கலைச்சொல் அகரமுதலி, முதற்குறிப்பகராதி ஆகியவை இடம்பெறும். இத்திட்டத்தின் வாயிலாகத் திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு செவ்வியல் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்

வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்று முறையில் தமிழ் இலக்கணம் எழுதப்பட்டுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூலாக வெளியிடப்படும். வரலாற்று முறையில் இலக்கணம் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் செய்திகள் தொகுக்கப்பெறும் பொழுது இலக்கியங்கள், உரைநடைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மொழிநடைகளும் கருத்தில் கொள்ளப்பெறும். இவ்வாய்வு பழந்தமிழ் இலக்கியக் காலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய மூன்று காலப் பகுப்புகளைக் கொண்டிருக்கும்.

தமிழின் தொன்மை – ஒரு பன்முக ஆய்வு

தமிழ்ச் செவ்வியல் நூல்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாட்டுக் கூறுகளையும், வாழ்க்கை முறைகளையும் வெளிக்கொணரும் வகையில் பன்முக ஆய்வுகளை நிகழ்த்துதல் இத்திட்டத்தின் நோக்கம். ஆய்விற்குத் துணையாக விளங்கும் கருவிநூல்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்

வட்டாரம், தொழில், இனம் சார்ந்த தமிழ் வழக்காறுகளை வரலாற்றுமுறையில் தொகுத்து வகைப்படுத்தி அகராதி உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம். சமகால வட்டார வழக்குகளைச் செவ்வியல் இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படுகின்றன. அகராதிகளில் பதிவு செய்யப்படாத நூறாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்பட்டு வருகின்றன. தமிழர்களின் நெல்வகைகள், ஆடுமாடு வகைகளுக்கு வட்டாரம் சார்ந்த சொல் வழக்குகள் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழும் பிறமொழிகளும்

தமிழ் மொழியை இலக்கியம், மொழியியல், பண்பாடு ஆகிய கூறுகளின் நோக்கில் பிற மொழிக் குடும்பங்களோடு ஒப்பிட்டு ஆராய்தல் இத்திட்டத்தின் நோக்கம். உலகளாவிய மொழிக் குடும்பங்களோடும், இந்திய மொழிகளோடும் ஒவ்வொரு மொழிக் குடும்ப மக்களின் வாழ்க்கை முறையோடும் தமிழை ஒப்பிட்டு ஆராய்வது இத்திட்டத்தின் நோக்கம்.

பழந்தமிழ் ஆய்விற்கான மின்நூலகம்

அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு உலகளாவிய தமிழ் ஆய்வாளர்கள் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் மின்நூலகம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. செம்மொழி நிறுவன வெளியீடுகள் வடிவமைக்கப்பட்டு இத்திட்டத்தின் வாயிலாக வெளியிடப்படும்.

இணையவழிச் செம்மொழியைக் கற்பித்தல்

தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பயின்றுவரும் மொழியாட்சியைப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், நயம்பாராட்டுதல் ஆகிய திறன்களைக் கற்போர் அடைய உதவுதல் என்பதனை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணையம் வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைத்தப்பட்டுள்ளது.

பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்

செவ்வியல் நூல்களுக்கான தரவகம் உருவாக்குதல், இலக்கண, இலக்கியக் கல்வி, இயற்கை மொழி ஆகியவற்றிற்குப் பயன்படும் மென்பொருள்களை உருவாக்குதல் என்பதனை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. 41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற் பொருள்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நூற்களைப் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் அறிய, தொழில்நுட்ப வழிமுறைகள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பழந்தமிழ்க் காட்சிக் குறும்படங்கள்

தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நூலகம்

செம்மொழி நூலகத்தில் 20,000 அரிய நூல்களும் பழந்தமிழ் ஆய்விற்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும் ஓலைச்சுவடிகளும் இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

இணையதளம்

இந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் இந்நிறுவனத்தின் விரிவான நோக்கங்களும் செயற்பாடுகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

உதவித்தொகைகள்

முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை

செம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.12,000/-த்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000/- வழங்குகிறது.

முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகை

முனைவர் பட்டம் பெற்றபின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு நிறுவனம் மாத உதவித்தொகையாக ரூ.18,000/-த்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ரூ.30,000/- வழங்குகிறது.

குறுகிய காலத் திட்டப் பணிகள்

பழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது.

செம்மொழித் தமிழ் விருதுகள்

செம்மொழித் தமிழாய்விற்குப் பங்களிப்பை வழங்கிய, வழங்கிவரும் ஆய்வாளர்களுக்கு, தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் அறிஞர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

செம்மொழித் தமிழ் இணைச் சொற்களஞ்சியத் தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ் மரபிற்கே உரிய அகரமுதலியை அடிப்படையாகக் கொண்டு, செம்மொழித் தமிழ் இணைச் சொற்களஞ்சியத் தொகுப்பினை உருவாக்கி வருகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.