under review

முத்தொள்ளாயிரம்

From Tamil Wiki

முத்தொள்ளாயிரம் (பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டு) தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூல் . முத்தொள்ளாயிரம் அகம், புறம் என இரு பாடுபொருள்களாலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். இந்திய அரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று. இந்நூலின் 130 பாடல்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றன. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஆசிரியர்

முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் பெயர் தெரியவரவில்லை.

மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் -பின்னரும்
ஆதிரையா னாதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி யுலகு (முத். பா.1)

என்ற கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஆதிரையான் என்று சிறப்பிக்கப்படும் சிவபெருமானைப் பாடுவதால் இதன் ஆசிரியர் சைவ சமயத்தவர் என்று புலனாகிறது. முத்தொள்ளாயிரத்தின் காலம் பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் முன்பகுதி என எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

பதிப்பு

முத்தொள்ளாயிரத்தை முதன்முதலில் தனி நூலாக இரா.இராகவய்யங்கார். 1905-ல் பதிப்பித்தார். இப்பதிப்பில் 110 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பின்வந்த பதிப்பாசிரியர்கள் பலரும் இதனையே பின்பற்றி 110 பாடல்களைப் பதிப்பித்தனர். டி.கே.சி தம் பதிப்பில் 99 பாடல்களை மட்டுமே உரையுடன் பதிப்பித்தார். 1946-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பித்த ந. சேதுரகுநாதன் 130 பாடல்களைப் பதிப்பித்துள்ளார்.

நூல் அமைப்பு

புறத்திரட்டு நூலிலிருந்து முத்தொள்ளாயிரத்தின் நூற்றெட்டு வெண்பாக்கள் ( கடவுள் வாழ்த்து-1 சேரனைப் பற்றி -22 சோழனைப் பற்றி-29 பாண்டியனைப் பற்றி-56 ) கண்டெடுக்கப்பட்டன. முத்தொள்ளாயிரம் என்ற முழுநூல் மூவேந்தர்கள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு முந்நூறு பாடல்களாக மொத்தம் தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து. தொள்ளாயிரம் என்பது ஒருவகை சிற்றிலக்கியமாகும். தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கிய வகை எண் செய்யுள் என்று பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் இலக்கிய வகையின் ஓர் உட்பிரிவாயிருக்கக் கூடும் . ‘வச்சத் தொள்ளாயிரம்’, ‘அரும்பைத் தொள்ளாயிரம்’ முதலான நூல்களைப் பற்றி உரையாசிரியர்களின் உரைவழி அறிய முடிகின்றது.

ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே
சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும். (இலக்கண விளக்கப் பாட்டியல், நூ.88)
ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை
யிசைத்து மெண்ணாற் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைசொலல்
எண்செய்யு ளாகு மன்றே (பிரபந்த தீபிகை, நூ.14)

பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் என்ற இலக்கிய வகையில் பல பிரிவுகள் உண்டென்பதும் பத்து பாடல்கள் முதல் ஆயிரம் பாடல்கள் வரை பாடப்படும் எண் செய்யுள்கள் பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர்பெறும் என்பதும் பெறப்படுகின்றது. அப்படிப் பாடப்படும் எண் செய்யுள்களில் தொள்ளாயிரம் எண்ணிக்கை அமைய, பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடும் ஒரு மரபின் அடிப்படையின் முத்தொள்ளாயிரம் பாடப்பட்டது. 'ஆயிரம் வரை' எனக் குறிப்பிடப்பட்டதால் சேரன், சோழன்,பாண்டியருக்கும் 300 பாடல்கள் இருந்திருக்கக் கூடும் என எண்ணப்படுகிறது. இலக்கண விளக்கப் பாட்டியல் எண் செய்யுள் நூற்பாவிற்கு எழுதியுள்ள உரையில், “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட்சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விளக்கங்களை மேற்கோள் காட்டிப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் எண் செய்யுள் எனும் இலக்கிய வகையே முத்தொள்ளாயிரம் என விளக்கமளிக்கிறார் எஸ். வையாபுரிப் பிள்ளை. (இலக்கிய தீபம், பக். 178-79) 'ஆயிரம் வரை' எனக் குறிப்பிடப்பட்டதால் சேரன், சோழன்,பாண்டர் ஒவ்வொருவருக்கும் 300 பாடல்கள் இருந்திருக்கக் கூடும் என எண்ணப்படுகிறது. மன்னர்களின் புகழ், நாடு, நகர், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், பகைப்புலம் பழித்தல், வெற்றி என்ற பகுதியில் அமையும் பாடல்கள் அனைத்தும் புறம் சார்ந்த நிலையிலும், கைக்கிளை சார்ந்த பாடல்கள் அனைத்தும் அகம் சார்ந்த நிலையிலும் அமைந்துள்ளன. உலா போந்த மூவேந்தர்களைக் கண்டு, பருவப் பெண்கள் காமுற்றதாகப் முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

பாடல் நடை

பாண்டியன்

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு (60)

(நகர் வலம் வந்த பாண்டியன் மேல் நாயகி கொண்ட காதலால் உடல் முழுதும் பசலை படர்ந்தது. தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக் கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா? ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள் தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால் உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்தது ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை அறுத்துத் தண்டித்தது போன்றது.)

சேரன்

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ, - புள்ளினம் தம்
கைச் சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கௌவை உடைத்து அரோ
நச்சிலை வேல் கோக் கோதை நாடு

(பொருள் சேறு நிறைந்த பொய்கைகள் சேர மன்னன் நாட்டில் மிகுதி. அப்பொய்கைகளில் அரக்கு நிறம் கொண்ட செவ்வல்லி மலர்கள் பூத்துள்ளன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டது என்று எண்ணின. தம் குஞ்சுகளைத் தீயிலிருந்து காப்பாற்ற நினைத்துத் தம் கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து அவற்றை அணைத்துக் கொண்டன. இந்த ஆரவாரம் தவிர, மக்கள் துயர் மிகுதியால் செய்யும் ஆரவாரத்தை, சேரநாட்டில் காண்பது அரிது.)

சோழன்

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னோ
சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49

(சோழன் பிறந்த நாள் வருகின்றது. அது ரேவதி விண்மீன் சந்திரனோடு கூடி நிற்கும் நல்ல நாள். அரண்மனைக்குப் பரிசிலர் வருகின்றனர். வருவோர்க்கெல்லாம் உயர்ந்த பரிசிலை வாரி வழங்குகின்றான் சோழன். ஆம்! அந்தணர் வந்தனர்; அவர்கள் ஆவையும் பொன்னையும் வாங்கிச் சென்றனர். நாவன்மை மிக்க புலவர்கள் வந்தனர்; அவர்கள் மந்தர மலைபோல் உயர்ந்த களிறுகளைப் பெற்றுத் திரும்பினர். இங்ஙனம் மனிதரெல்லாம் பரிசு பெற்றுத் திரும்பிய நாள், சோழன் அரண்மனையில் இருந்த சிலந்திப்பூச்சிக்கு மட்டும் சோக நாளாயிற்றாம்! ஆம்! அது தானே கட்டிக் கொண்டு வாழ்ந்த தன் வீடாகிய கூட்டை இழந்து விட்டது!)

பண்பாட்டுச் செய்திகள்

'மன்னிய நாண்மீன்', 'ஆதிரையான்' (1) 'தென்னன் திருஉத்திராட நாள்' (7) என்ற குறிப்புகளை நோக்கும்போது அஸ்வினி முதலான 27 விண்மீன்கள் பற்றிய அறிவு அன்று தமிழர்க்கு இருந்தது என அறிகிறோம்.

பெண்கள் குங்குமச் சாந்தினை அணிந்தனர் (9). கணவனை இழந்த பெண் எரி மூழ்கி இறக்கும் வழக்கம் இருந்தது (19). நீரில் நின்று தவம் செய்தனர் (25). உலக்கை கொண்டு குற்றும்பொழுது பாடல் இசைத்தல் உண்டு (34). வேட்டுவர்கள் பறவைகளைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தனர் (35), முதலான செய்திகள் இதனுள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page