under review

கலம்பகம் (இலக்கியம்)

From Tamil Wiki
Revision as of 01:03, 28 December 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கலம்பகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலம்பகம் (பெயர் பட்டியல்)

கலம்பகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதும் பாடப்படுவது கலம்பகம் . இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படுவது.

கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல் நந்திக் கலம்பகம்.

தோற்றமும் வளர்ச்சியும்

சங்க நூல் பெரும்பாணாற்றுப்படையில்

பல்பூ மிடைந்த படலைக் கண்ணி (174)

(பல் = பல; பூ = பூக்கள்; மிடைந்து = கலந்து)

என்று ஓர் அடி வருகின்றது. பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகிறார். பல்வேறு பூக்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுவது போலப் பல்வேறு உறுப்புக்களைக் கலந்து இயற்றிய நூல் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது. பல்வேறு பூக்களால் ஆன மாலை கலம்பகம் எனப்படுகிறது. அதுபோலப் பல்வேறு உறுப்புக்களைக் கலந்து இயற்றிய நூல் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது எனலாம்.

கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகள் பல தொல்காப்பியத்தில் இடம் பெறக் காணலாம். அம்மானை, ஊசல், காலம், வண்டு, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், தூது என்ற கலம்பக உறுப்புகள் தொல்காப்பிய அகத்துறை சார்ந்தவை. மறம், புயம் போன்றவை தொல்காப்பியப் புறத்துறை சார்ந்தவை. இதிலிருந்து பின்னர் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியிருக்கலாம்.

இலக்கணம்

நவநீதப் பாட்டியல், 'கலந்து பாடுவது கலம்பகம்' என வகுக்கிறது. கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100- க்கு அதிகமாகவும், 50-க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன. பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் போன்ற இலக்கண நூல்கள் தேவர்க்கு (இறைவனுக்கு) நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்களுக்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்களுக்கு முப்பது என்று பாட்டுடைத்தலைவர்களுக்கேற்ப பாடப்படும் பாடல்களின் வரையறையை அளிக்கின்றன[1]. பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இதில் அமைய வேண்டிய யாப்புகளின், உறுப்புகளின் இலக்கணத்தைக் கூறுகிறது.[2]கலம்பக இலக்கிய வகையின் இலக்கணம் கூறும் வேறு பாட்டியல் நூல்கள் பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், பிரபந்த தீபிகை ஆகியவை.

கலம்பக உறுப்புகள்

கலம்பக இலக்கிய வகையின் பல உறுப்புகளின் கருக்கள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் பல கலம்பக உறுப்புகள் அகத்துறைகளாகவும் புறத்துறைகளாகவும் காட்டப்பட்டுள்ளன.

Kalambakam.jpg

இலக்கண நூல்கள் கலம்பகத்துக்கு பதினெட்டு உறுப்புகளைச் சுட்டுகின்றன. இந்த உறுப்புகளிடையே நூல்களில் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக வந்து

என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் அமைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.

எல்லாக் கலம்பக நூல்களிலும் மேற்கூறிய 18 உறுப்புகள் காணப்படவில்லை. சில நூல்களில் பதினெட்டுக்கும் குறைவான உறுப்புகளே உள்ளன. வேறு சில நூல்களில் பதினெட்டுக்கும் அதிகமான உறுப்புகள் காணப்படுகிறன

மேலே சுட்டிய உறுப்புகளின் மேலாகக் கலம்பக இலக்கியங்களில் வெவ்வேறு புதிய பொருள்களும் பாடு பொருளாகக் கொள்ளப்பட்டு உள்ளன. இலக்கண விளக்கப் பாட்டியலுரையில் "காலத்தான். மருவிய பிச்சியார், கொற்றியார் முதலியனவும் கொள்க (பாட்.52)" என்ற குறிப்புத் தரப்பட்டுள்ளது. பிச்சியார், கொற்றியார் என்பவற்றைப் போலவே வலைச்சியார், இடைச்சியார், கீரையார், யோகினியார் என்னும் பொருள்கள் எழுந்துள்ளன. இந்த உறுப்புக்களில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளை அமைத்துப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்

புயவகுப்பினைப் போலவே சிலர் திருவடி வகுப்பும் பாடியுள்ளனர். இவற்றிற்கு மேலும் ஆற்றுப் படை, பள்ளு, சிலேடை, வெறிவிலக்கு என்பவற்றையும் கலம்பக உறுப்புகளாக சில நூல்கள் கொண்டுள்ளன. இவை தவிரவும் வேறு சில உறுப்புகளும் கலம்பக நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. அனந்த கிருஷ்ணையங்கார் இயற்றிய திருப்பேரைக் கலம்பகம் 26 உறுப்புகளைக் கொண்டது.

தமிழின் முதல் கலம்பக நூல் நந்திக் கலம்பகம்.

பெயரமைதி

கலம்பகங்கள் தெய்வங்களையும் அரசர்களையும் சான்றோர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக்கொண்டு தோன்றியுள்ளன. எனினும் பக்தியெழுச்சியின் காரணமாகத் தெய்வங்களின் மேல் பாடப்பெற்ற கலம்பக இலக்கியங்களே மிகுதி. இறைபக்தி பாடு பொருளாக அமைந்த கலம்பகங்கள் மேல் தெய்வப்பெயர் சுட்டுவதை விடத் தலப்பெயர் சுட்டுவதே வழக்கமாக காணப்படுகிறது.தெய்வங்களைக்குறித்து எழுந்த கலம்பகங்களுக்கு தெய்வங்கள் கோவில்கொண்ட ஊரின் பெயரே அமைகிறது ( மதுரைக்கலம்பகம், திருவரங்கக்கலம்பகம்) . தெய்வத்தின்பெயர், அரசர் பெயர், ஞானியோர், மற்றும் தலங்கள் பற்றியும் பாடப்பெறும் கலம்பகங்கள் அந்தந்த நூலின் தலைவர் பெயருடன் சேர்த்துக் கூறப்படுகின்றன

முனிவரைத் தேவரைப் போல வைத்துப் பாடியதற்கு எடுத்துக்காட்டாக மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைபாடிய அம்பலவாணதேசிகர் கலம்பகம் விளங்குகிறது. இதில் 100 பாடல்கள் உள்ளன.

கலம்பக நூல்கள்

  • அருணைக் கலம்பகம்

உசாத்துணை

கலம்பகம்-தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்

  1. நூறு தேவர், தொண்ணூற்றைந்து பார்ப்பார்க்கு,
    அரசர் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபஃது,
    ஐம்பான் வைசியர்க்கு, ஆறைந்து சூத்திரர்க்கு
    என்ப இதன் இயல்புணர்ந்தோரே
    - பிரபந்த மரபியல்

  2. சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு
    முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
    அம்மனை ஊசல் யமகம் களி மறம்
    சித்துக் காலம் மதங்கி வண்டே
    கொண்டல் மருள் சம்பிரதம் வெண்டுறை
    தவசு வஞ்சித்துறையே இன்னிசை
    குறம் அகவல் விருத்தம் என வரும்
    செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம்
    ஆதி யாக வரும் என மொழிப

    (பன்னிரு பாட்டியல் 213 - தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 264)

இதர இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:38 IST