under review

சித்து (கலம்பக உறுப்பு)

From Tamil Wiki

சித்து கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. சித்தர்கள் தங்கள் சித்து விளையாட்டைப்பற்றியும் மற்ற உலோகங்களைப் பொன்னாக்குவதையும் கூறுவது.

விளக்கம்

இரசவாதம் செய்யும் வல்லமையுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக் கொள்வது சித்து என்னும் கலம்ப உறுப்பின் இலக்கணம். இதில் இரசவாதம் சம்பந்தமான பொருள் தோன்றுவதோடு நூலின் பாடுபொருளும் தோன்றும்படி அமைக்கப் பெற்றிருக்கும். பாடுபொருளும் சித்துக்கான பொருள்களும் சிலேடையாக அமைக்கப்படுவதும் உண்டு. இச் செய்யுட்களில் 'அப்பா' அல்லது 'தம்பி' போன்ற விளிகள் பயின்று வரும்.

எடுத்துக்காட்டு

மதுரைக் கலம்பகம்

குரும்பை வெம்முலை சேர்மது ரேசர்பொற் கோபு ரத்திற் கொடிகட்டு சித்தர்யாங்
கரும்பை முன்புகல் லானைக் கிடுஞ்சித்தர் கையிற் செங்கல் பசும்பொன்ன தாக்கினே
மிருந்த வீடும் வறும்பாழ தாமவர்க் கெடுத்துக் கொட்டிலும் பொன்வேய்ந்திடச்செய்தே
மருந்த னந்தமக் கோதன மேயப்பா ஆட கத்துமற் றாசையவ் வையர்க்கே. (57)

மதுரைக் கோவிலின் செங்கல்லைப் பொன்னாக்கியதாகவும், பாழாக நின்ற கோவிலைத் தன் மருந்தால் பொன்வேய்ந்திடச் செய்ததாகவும் சித்தன் கூறுகிறான்.

மறைசைக் கலம்பகம்

புன்ப வந்தொலைத் தாண்டரு ளீசர்வாழ்
   பொன்மலிந்த மறைநகர்ச் சித்தரே,
மின்பு றும்மணிக் கன்னல்வில் வாங்கிடு
   மேந்த லுக்கயம்பொற்சுக மாக்கினோம்,
வன்பு றும்மயிலூர்கந்த வேளுக்கு
   மருவத் தாரமுன் மாதங்க மாக்கினோ,
மன்பு றுங்கரி யோனுக்குந் தாரமபொன்
   னாககினோஞ் சித்தளவில வண்ணமே. (28)

சிவனின், கந்தவேளின் புகழைக் கூறி அவர்களின் கோவில்களின் பகுதிகளைப் பொன்னாக்கியதாக சித்தர்களால் கூறப்படுகிறது.

திருவருணைக் கலம்பகம்

விந்தை யணிமழுவா ருமைபங் காளா
    விளங்கருணைச் சித்தர்யாம் விளம்பக் கேளா
காரத்தை யெமக்கிடுஞ் சத்தை யேகோ
    கனகமெனக் காட்டிடுவோங் கரியோ ருக்குத்
தாரத்தைப் பொன்னாக வமைத்தோந் தம்பீ
    தாம்பரமும் பொன்னாகச் சமைத்தோ மிந்தப்
பாரத்தை யாரறிவா ரயனா கத்தைப்
    பசும்பொனிற மாகவுமே பாலித் தோமே. (39)

திருவண்ணாமலைச் சித்தர்கள் திருமாலின் பீதாம்பரம் முதலியவற்றைப் பொன்னாக்கியதாக சிவனிடம் குறிப்பிடுதல். அயானாகம் என்னும் இரும்பும் நாகமும் கலந்த கலவையைப் பொன்னாக்கினர்.

இப்பாடலில் சிலேடை பயின்று வருகிறது.

தாரம்-மனைவி, வெண்கலம்

தம் பீதாம்பரம் - (தம்+பீதாம்பரம்) (தம்பீ+தாம்பரம் தாம்பரம்-தாமிரம்)

அயனாகம்- (அயன் +ஆகம் பிரம்மனின் உடல் ) (அயன் +நாகம் -இரும்பும் நாகமும் கலந்த கலவை)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 18:34:19 IST