under review

சிலேடை அணி

From Tamil Wiki

கவிஞர்கள் தாங்கள் பாடுகின்ற பாடலில் பெரும்பாலும் ஒரு பொருளையே அமைத்துப் பாடுவர். சில நேரங்களில் ஒரே பாடலில் இருவேறு பொருள் அமையுமாறும் பாடுவர். தமிழில் ஒரு சொல் பல பொருள் உணர்த்துவதும் உண்டு. அதே போல ஒரு சொல்தொடரும் வெவ்வேறு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்ற வகையில் அமையும்போது பல பொருள் தருவது உண்டு. இத்தகைய சொற்களையும் தொடர்களையும் கவிஞர்கள் ஒரு பாடலில் அமைத்து இரு வேறுபட்ட பொருள்களைப் பாடத் தலைப்பட்டதன் விளைவாகவே சிலேடை அணி தோன்றியது. இதனை இரட்டுற மொழிதல் என்று கூறுவர். இரண்டு பொருள்பட மொழிதலால் இவ்வாறு கூறப்பட்டது.

ஒரு வகையாக நின்ற சொற்றொடர் பல வகையான பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை என்னும் அணி. தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி
தெரிதர வருவது சிலேடை ஆகும் (தண்டி, 76)

என்று வகுக்கிறது

விளக்கம்

எடுத்துக்காட்டு

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம் (காளமேகப் புலவர்)

பொருள் : இப்பாடல் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் பொருந்துமாறு,இரு பொருள் படுமாறு அமைந்துள்ளது.

வாழைப்பழம்- நஞ்சிருக்கும்(நைந்திருக்கும்), தோலுரிக்கும்( தோலை உரித்தால்தான் உண்ண முடியும், எனவே தோலை உரிக்கும்). சிவன் தலைமேல் இருக்கும்( சிவனுக்கு முழுக்காட்டு செய்யும் பஞ்சாமிர்தத்தில் வாழைப்பழம் இருக்கும். எனவே சிவன் முடியில் இருக்கும்). பற்பட்டால் மீளாது (வாயிலிட்டுக் கடித்தால் வாழைப்பழம் மீளாது, வயிற்றுக்குள் சென்று விடும்).

பாம்பு- நஞ்சிருக்கும்( பாம்பில் விஷம் உண்டு). தோலுரிக்கும் (பாம்பு தன் சட்டையை உரிக்கும்). சிவன் மேல் ஆபரணமாய் இருக்கும். பாம்பின் பல் நம்மேல் பட்டால் உயிர் மீளாது.

என பாம்பு , வாழைப்பழம் இரண்டுக்கும் பொருந்துமாறு அமைந்ததால் இப்பாடலில் அமைந்தது இரட்டுர மொழிதல் அல்லது சிலேடை அணியாகும்.

சிலேடை அணியின் வகைகள்

சிலேடை அணி செம்மொழிச் சிலேடை என்றும், பிரிமொழிச் சிலேடை என்றும் இரு வகைப்படும்.

செம்மொழிச் சிலேடை

ஒரு சொற்றொடரில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல் அப்படியே நின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும்.

ஓடுமிருக்கும் அதனுள்வாய் வெளுத்தி ருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .

தேங்காய்:

ஓடும் தனக்குள் ஓட்டை உடையது! உள்ளே வெண்மையாய் தேங்காயைக் கொண்டிருக்கும் அனைவாராலும் விரும்பப்படும் குலையாய் தொங்குவதற்கும் அது கோணாது

நாய்:

சிலசமயம் ஓடும். சிலசமயம் இருந்த இடத்தில் நிற்கும். அதன் வாயில் உட்புறம் வெண்மையாய் இருக்கும் அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)

இப்பாடலில் சொற்கள் பிரிக்கப்படாமல் உள்ளபடியே இரு பொருள் தருமாறு அமைந்தமையால் இது செம்மோழிச் சிலேடை

பிரிமொழிச் சிலேடை

ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறுவேறு வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

எடுத்துக்காட்டு

தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய,
எள்ள அரிமா னிடர்மிகுப்ப, உள்வாழ்தேம்
சிந்தும் தகைமைத்தே, எங்கோன் திருவுள்ளம்
நந்தும் தொழில்புரிந்தார் நாடு

பொருள்

அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனைப் பகைக்காது அவன் திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.

அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனைப் பகைத்தவர்களின் நாடு.

தள்ளா+இடம், தா+மரை, உள்+வாழ் எனப் பிரிந்து ஒரு பொருளையும், பிரியாது மற்றோரு பொருளையும் தருவதால் இது மரை மலரைப் பொருந்தவயாகிறது.

உசாத்துணை

சிலேடை அணி, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page