under review

கார்(கலம்பக உறுப்பு)

From Tamil Wiki

கார்(மேகம்) கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி மேகத்தைத் தூது விடுவதாக அமையும் உறுப்பு கார் என்று அழைக்கப்படுகிறது. இது மேகம், குளிர் என்ற பெயர்களாலும் வழங்குவது உண்டு.

விளக்கம்

பிரிவுத் துயரால் வருந்தும் தலைவனோ, தலைவியோ, மேகத்தைத் தூதாக விடுப்பதோ, அல்லது மேகத்திடம் தன் துயரைச் சொல்வதோ மேகம் அல்லது கார் என்னும் கலம்பக உறுப்பின் பேசுபொருள்.

எடுத்துக்காட்டு

நந்திக் கலம்பகம்

ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்
    கூடு வருகுதுஎன்று கூறுங்கோள் - நாடியே
நந்திச்சீ ராமன்உடை நல்நகரில் நல்நுதலைச்
    சந்திச்சீர் ஆம்ஆகில் தான் (110)

நில்லாமல் வேகமாக ஓடும் மேகங்களே! என்று தலைவன் மேகத்தை அழைக்கின்றான். மேகங்களே! இராமபிரான் போன்றவன் என் மன்னனாகிய நந்திவர்மன். அவனுடைய நகரம் காஞ்சிபுரம். அந்த நகரில் என் தலைவி வாழ்கிறாள். அவள் அழகிய நெற்றியை உடையவள். என் தலைவியை நீங்கள் கண்டீர்கள் ஆனால் அவளிடம் நான் கூறுகின்ற இந்தச் செய்தியைக் கூறுங்கள். விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன் வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்று கூறுங்கள் என்று தலைவன் மேகத்திடம் வேண்டுகிறான்.

மதுரைக் கலம்பகம்

ஏம வெற்பென்று கயிலாய வெற்பென்று
  மலயாசலத்தென்றும் உறைவார்
கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர்
கூடலிற் சென்று புகலீர்
 தாமரைககண் துயிலும் மாலெனச் சந்தமலி
 சாரலில் துஞ்சு முகில்காள்
மாமதிப் பிஞ்சும் இரைதேர் குயில் குஞ்சும்
 உயிர்வாய் மடுத்து உண்டு ஒழிவதே.

மதுரைச் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி மேகத்தைத் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவிக்கிறாள். மேகங்களே! பொன்னாலான மேருமலைக்கும் கயிலாய மலைக்கும் சமமான தென்று பொதிய மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமான் தடாதகைப் பிராட்டியின் மனம் கவர்ந்தவர். முச்சங்கங்களும் முத்தமிழும் வளர்ந்த பெருமையுடையது மதுரை. சந்தன மரங்கள் மிகுந்த பொதியமலைச் சாரலில் தாமரையில் கண் துயிலும் திருமால் போல மலையில் படியும் மேகங்களே! இந்த பிறைச் சந்திரனும் குயில் குஞ்சுகளும் காதலால் தவிக்கும் என் உயிரைப் போக்குகின்றனவே! இதை அந்தப் பெருமானிடம் சொல்லுங்கள் இந்தப் பிஞ்சும் குஞ்சுமே இப்படி உயிரை எடுக்குமென்றால் இவை பெரிதாக வளர்ந்தால் என்னவெல்லாம் செய்யுமோ? எனக்கு அச்சமாயிருக்கிறதே என்கிறாள் தலைவி.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:26:50 IST