சம்பிரதம்
சம்பிரதம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. மாய வித்தைகள் செய்வதில் வல்லவர்கள் தங்கள் மாய வித்தையைப் புகழ்ந்து கூறுவதாக வரும் கலம்பக உறுப்பே சம்பிரதம்.
விளக்கம்
சம்பிரதம் கலம்பகத்தின் உறுப்புகளில் ஒன்று. சம்பிரதம் என்றால் மாயம் என்று பொருள். இந்திர சால வித்தை என்றும் கண் கட்டு வித்தை என்று கூறப்படுகிறது. மாய வித்தை காட்டுபவர்கள் தாங்கள் செய்யும் வித்தைகளைப் பற்றி பொது மக்களிடம் சொல்வது சம்பிரதம். தன் வித்தைகளுடன் நூலின் பாட்டுடத் தலைவனையோ, பாடு பொருளையோ பாடும் வழக்கமும் உண்டு.
எடுத்துக்காட்டு
நந்திக் கலம்பகம்
வட்டன்றே நீர்இதனை மிகவும் காண்மின்
மற்றைக்கை கொட்டினேன் மாவின் வித்துஒன்று
இட்டுஅன்றே பழம்பழுப்பித்து உண்ணக் காண்மின்
இவைஅல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று
அட்டுஅன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி
அவனிநா ராயணன் பாராளும் கோமான்
குட்டன்றே மழை நீரைக் குடங்கை கொண்டு
குரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின் றேனே
(நந்.கலம்பகம் - 68)
நந்திக் கலம்பகத்தில் மாயவித்தை காட்டுபவன் " மக்களே! இதை நன்றாக உற்றுப் பாருங்கள். என் கையில் உள்ள மண் உருண்டையில் ஒரு மாங்கொட்டையை வைக்கிறேன். அதை உடனே செடியாக முளைக்க வைப்பேன். பின்பு அதில் மாம்பழங்கள் பழுக்கச் செய்வேன். அதை உங்களுக்கு உண்ணவும் தருவேன். இது கூடப் பெரிய வித்தை அல்ல. இன்னொன்றையும் செய்வேன்.
நந்திவர்மன் தெள்ளாறு என்ற இடத்தில் பகைவர்களுடன் போர் செய்து அவர்களை அழித்தான். அவன் மண் உலகத் திருமால் போன்றவன். உலகை ஆளும் மன்னர்களுக்கு எல்லாம் மன்னன். அவன் நாட்டில் ஊருணிகள் உள்ளன. அந்த ஊருணியிலுள்ள நீரை மட்டும் அல்லாது மேகம் பொழியும் மழை நீரையும் என் உள்ளங்கையில் அடக்கி விடுவேன். அது மட்டும் அல்ல. கடல் நீர் முழுவதையும் குடித்து விடுவேன். இதுவும் எனக்கு ஒரு பெரிய செயல் அல்ல" என்று மாய வித்தை செய்பவன் தன் திறமையைக் கூறியபடியே நந்திவர்மனையும் பாடுகிறான்.
மாய வித்தைக்காரன் தன் வித்தைகளைப்பற்றிக் கூறுவதால் இது சம்பிரதம்.
திருவருணைக் கலம்பகம்
பரவைபொ ருக்கெழவுங் ககனம்வ டுப்படவும்
பரிதிவ டக்கெழவு நிருதிகு ணக்குறவும்
இரவுப கற்படவும் பகலிர வொத்திடவு
மெளிதினி யற்றிடுவோ மிவைசில வித்தைகளோ
அரவம ணிப்பணியா னனலகி ரிப்பெருமா
னருணகி ரிக்கிணையா வவனித லத்திடையே
கருதிம னத்தினிலே சிறிதுநி னைத்தளவே
கதியைய ளித்திடுமோர் பதியுமு ணர்த்துவமே. (55)
இரவைப் பகலாக்குவேன், பகலை இரவாக்குவேன் என வித்தைக்காரன் பாடுகிறான்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 18:32:31 IST