under review

காசிக் கலம்பகம்

From Tamil Wiki

காசிக் கலம்பகம் (பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு) குமரகுருபரரால் இயற்றப்பட்ட சிற்றிலக்கியம். கலம்பகம் என்ற இலக்கிய வடிவில் காசியைப் பற்றி பாடியுள்ளதால் காசிக் கலம்பகம் என்னும் பெயர் பெற்றது.

ஆசிரியர்

காசிக் கலம்பகத்தை இயற்றியவர் குமரகுருபரர். குமரகுருபரர் தில்லி சுல்தான்களின் காலத்தில் வாழ்ந்தவர். காசிக்கு யாத்திரை சென்ற காலத்தில் சுல்தான் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த நிலத்திலே குமரகுருபரர் குமாரசுவாமி மடம் அமைத்தார். காசி நகரின் பெருமையைக் கலம்பகமாகக் குமரகுருபரர் பாடியுள்ளார்.

நூல் அமைப்பு

கலம்பகத்தின் இலக்கணத்திற்கேற்ப காசிக் கலம்பகம் பல வகை மலர்களால் இணைக்கப் பெற்ற மாலை போன்று பல வேறுபட்ட பாக்களாலும், பாவனைகளாலும் அமைந்துள்ளது. நூலிலுள்ள முதலாவது பாடல் விநாயகர் துதியாகவும் அடுத்து வரும் பாடல்கள் காசி விஸ்வநாதரின் சிறப்புக்களையும், காசியின் தலமகிமையையும் கூறுகின்றன. தூது என்னும் பகுதியிலே தலைவிக்காகத் தோழி இறைவனிடம் குருகினைத் தூதனுப்புகின்றமை வர்ணிக்கப்படுகின்றது. இறைவனின் வீரமும், அருளும் பாடப்படுகின்றன.

மதங்கியார், பிச்சியார், கொற்றியார் என்னும் உறுப்புகள் காசிக் கலம்பகத்தில் அமைந்திருக்கின்றன. மதங்கி என்பவள் வாள் சுழற்றி ஆடுபவள். பிச்சி யென்பவள் சிவ வேடம் புனைந்து வருபவள். கொற்றியார் வைணவ வேடம் பூண்டவள். இப்பகுதியில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளைப் பாடல்கள் சிலேடையாகக் கூறுகின்றன. இவை தவிர அராகம், அம்போதரங்கம் , தாழிசை, சுரதகம், புயவகுப்பு, மடக்கு, மறம், குறம், சம்பிரதம், சித்து , களி ஊர், அம்மானை, களி, ஊசல், தூது, கைக்கிளை பாணாற்றுப்படை என்னும் உறுப்புகளும் காசிக் கலம்பகத்தில் இடம் பெறுகின்றன.

கடவுள் வாழ்த்து

விநாயகப் பெருமானை வேண்டிய பின் அகல்விழியன்னை (விசாலாக்ஷி) சமேதராகக் கோயில் கொண்டிருக்கும் விஸ்வநாதப் பெருமானை வாழ்த்துகிறார். கடல் சூழ்ந்த நிலமகளுக்கு அணிகலனாக விளங்கும், மேகம் பொழியும் காசியில் விஸ்வகர்மா செய்த, விண்ணைத் தொடும் விமானத்தின் கீழ் சிற்றிடையும் பெரிய கண்களையும் கொண்ட விசாலாக்ஷி அம்மையோடும் சடாமுடியில் கங்கையுமாகவீற்றிருக்கும் விஸ்வநாதப் பெருமானை வாழ்த்துகிறார் குமரகுருபரர்.

பாடல் நடை

பிச்சியார்

சிவ வேடம் பூண்டு, சூலமேந்தி வரும் பிச்சியார் காசியின் பெருமையைப் பாடுகிறார்.

 காணும் காணுநதிக ளெல்லாம் புனற்கங்கையே
          அங்குள்ள தெய்வம் யாவையும்
 தாணு எங்கள் அகிலேசரே மற்றைத்தலங்கள்
          யாவும் தடமதிற் காசியே
 பூணும் ஆசை மற்றொன்றே உடல்விடும்
          போதுநன் மணிகர்ணிகைப் பூந்துறை
 பேணுமாறு பெற வேண்டும் அப்புறம்
          பேயோடு ஆடினும் ஆடப் பெறுமே.

( காணும் நதிகள் எல்லாம் கங்கையாகுமா? அந்த நதிக்கரையிலிருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஸ்தாணு (சிவன்) ஆகுமா? மற்றைத் தலங்கள் எல்லாம் காசிக்கு ஈடாகுமா?என் உயிர் காசியிலுள்ள மணிகர்ணிகையில் போக வேண்டும் என்பதே என் ஆசை . இங்கு தானே விஸ்வநாதர் இறப்பவர்களின் செவியில் ப்ரணவ மந்திரத்தை உபதேசிக்கிறார்! இந்தப் பேறு கிடைத்தால் சிவனைப் போல் பேயோடு ஆடினாலும் கவலையில்லை.)

களி

       சிலர்க்கு முக்திச் சரக்கறையைத்
       திறந்து கொடுத்து அனந்தகோடிப்
   பிள்ளைகள் பெற்றுடைய பெருமனைக்
       கிழத்திக்கே குடும்பம் பேணுகென்னா
   உள்ளபடி இருநாழி கொடுத்துஅதில்
       எண்நான்கு அறமும் ஓம்புகென்றார்
   அள்ளல் வயற்காசி ஆண்தகையார்
       பெருந் தகைமை அழகிதாமே.

 (சிவன் தன்னை அண்டி வந்த அடியார்களுக்கெல்லாம் முக்தி என்ற பண்டாரத்தையே (சரக்கறை-பண்ட அறை) திறந்து விடுகிறார். வாரி வாரி வழங்குகிறார். ஆனால் அனந்தகோடிப் பிள்ளைகளைப் பெற்ற உலகநாயகியான விசாலாக்ஷி அம்மைக்கோ குடும்பம் நடத்தக் கேவலம் இரு நாழி நெல் மட்டும் கொடுக்கிறாரே. அது மட்டுமா அந்த இரு நாழி நெல்லில் 32 தருமங்களையும் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறாரே! இது என்ன நியாயம்)  

வஞ்சப் புகழ்ச்சியாக சிவனின் அருளையும் அம்மையின் அறத்தையும் இகழ்வது போலப் புகழ்கிறார்.

ஊசல்

தொடங்காமே பணிமலருந் தூவாமே நல்கும்
     கடங்கால் களிற்றுரியார் காசிவளம் பாடி
விடங்கான் றகன்றுகுழை மேற்போய்க் குடங்கைக்
    கடங்காத வுண்கணீ ராடுகபொன் னூசல்
அம்பொன்மலர்க் கொம்பன்னீ ராடுகபொன் னூசல்.

(களிற்றின் தோல் போர்த்திய சிவனின் புகழ்பாடி ஆடுக பொன்னூஞ்சல்)

தூது(குருகு, கிளி,அன்னம்)

குருகை விடுத்தாள் எனக்குருகே கூறாய்
   சுகத்தை விடுத்தாள் என்று
அருகு வளருஞ் சுகமே சென்றுரையாய்
    நிறைநீர் தெளிந்து பால்
பருகும் அ(ன்)னமே அ(ன்)னம் விடுத்தபடி
    சென்றுரையாய் படிவர் உளத்து
உருகு பசும் பொன்மதில் காசியுடையார்
    வரித்தோ லுடை யார்க்கே.

குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல்.(குருகு- வளையல்).இவள் வளையல்கள் அணிவதை விட்டு விட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதே போல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம்- கிளி. இவள் தன் தேக சுகத்தை விட்டு விட்டாள் என்றும் சொல்லலாம்.

அடுத்ததாக அன்னத்தை தூது விடுக்கிறாள் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னம் நீரைப் பிரித்துப் பாலை மட்டுமே உண்ணும்.(அன்னம்-உணவு) பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன் பொருட்டு விட்டு விட்டாள் என்று சொல். அன்னத்தை தூதாக விடுத்தாள் என்று சொல் என்கிறாள்.
அம்மானை

கலைமதியின் கீற்றணிந்த காசியகி லேசர்
சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனர்கா ணம்மானை
சிலைமதனைக் கண்ணழலாற் செற்றனரே யாமாகின்
மலைமகட்குப் பாகம் வழங்குவதே னம்மானை
வழங்காரோ அப்பாலு மாலானா லம்மானை.

மூன்று பெண்கள் அம்மானை ஆடியபடியே பாடுகின்றனர்.

(முதலாமவள்:பிறையை அணிந்த காசி விஸ்வநாதர் கரும்பு வில்லை ஏந்திய மன்மதனைத் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் இரண்டாமவள்:மன்மதனை அழித்தபின்னர், மலைமகளுக்கு உடலில் பாதியை ஏன் அளித்தார்?மூன்றாமவள்: அந்தப்பக்கம் மால் (திருமால், மயக்கம்) இருப்பதால் (மலைமகள் திருமாலின் சகோதரி)

உசாத்துணை

காசிக் கலம்பகம், சென்னை நூலகம்

காசிக் கலம்பகம்-தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page