under review

மதங்கம்

From Tamil Wiki

மதங்கம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. மதங்கி என்பவள் ஆடல் பாடல் கலைகளில் வல்லவளான இளம் வயதுப் பெண். மதங்கி இரண்டு கைகளிலும் மிருதங்கத்தை வாசித்தோ அல்லது வாளைச் சுழற்றியபடியோ ஆடும் நடனத்தைப் புகழ்ந்து கூறுவது. இதனை மதங்கியார் என்றும் வழங்குவர்.

விளக்கம்

மதங்கியார் என்போர் இசையுடன் பாடுவதில் சிறந்தவர்கள். கூத்து ஆடுவதிலும் வல்லவர்கள். இவர்கள் மன்னனைப் புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவது வழக்கம். மத்தளம் வாசித்துக்கொண்டே ஆடுவதும் உண்டு. இத்தகைய மதங்கியார் பிரிவைச் சார்ந்த ஒரு பெண் தன் இரண்டு கைகளிலும் வாளை ஏந்திக் கொண்டு சுழன்று ஆடுகின்றாள். அவ்வாறு ஆடும் மதங்கியார் பெண்ணின் அழகை ஒருவன் புகழ்ந்து பாடுகிறான். இந்தப் பொருளுடன் அமைந்த கலம்பக உறுப்பு மதங்கியார் எனப்படுகிறது.

எடுத்துக்காட்டு

நந்திக் கலம்பகம்

பகைஇன்றிப் பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்ஆண் மையும்பாடி நன்றுஆடும் மதங்கிக்குத்
தகையும்நுண் இடைஅதிரத் தனபாரம் அவற்றோடு
மிகைஒடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ

நந்திவர்மனின் புகழ் பாடி ஆடும் மதங்கியாரின் அழகு கூறப்படுகிறது.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசைதகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. 32

ஞான சம்பந்தர் பகழ் பயின்று ஆடிக் காட்டும் மதங்கியின் மேல் மையல் கொண்டதைப் பாடுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:25:37 IST