under review

திருக்காவலூர் கலம்பகம்

From Tamil Wiki
திருக்காவலூர் கலம்பகம்

திருக்காவலூர் கலம்பகம், வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட ஒரு சிற்றிலக்கியம். திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள தெய்வமான அடைக்கல அன்னையைப் புகழந்து இந்நூல் எழுதப்பட்டது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த முன்னோடிக் கலம்பக நூலாக இந்நூல் அறியப்படுகிறது. இதன் காலம் பொ.யு. 17 -ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி.

நூல் தோற்றம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொள்ளிடம் என்ற ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஊர் ஏலாக்குறிச்சி. அவ்வூரில் அடைக்கல அன்னைக்கு ஆலயம் ஒன்றை அமைத்தார் வீரமாமுனிவர். அக்காலக்கட்டத்தில் அப்பகுதியில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தரங்கம்பாடியிலிருந்து வந்த லூத்தரேனிய சபையினர் பட்டினியைத் தீர்த்து மக்களைத் தங்கள் வசப்படுத்தினர். மக்கள் பலரும் கத்தோலிக்கச் சபைப் பிரிவிலிருந்து லுத்தரேனிய சபைப் பிரிவிற்கு மாறினர். அவர்களைத் தக்க வைக்க வீரமாமுனிவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அதனால் பஞ்சம் தீர்க்க அன்னையிடம் வேண்டினார். அன்னையின் அருளால் மழை பொழிந்தது. பஞ்சம் அகன்றது. மக்கள் பலரும் அன்னையைத் தொழுது மீண்டும் கிறிஸ்தவ மதம் திரும்பினர். பஞ்சத்திலிருந்து காத்த அன்னைக்கு அடைக்கல மாதா என்று பெயரிட்டார் வீரமாமுனிவர். அன்னை காவலாக இருந்து மக்களைக் காத்ததால் தெய்வத் திருக்காவல் மிகுந்த ஊர் என்ற பொருளில் திருக்காவலூர் என்ற பெயரைச் சூட்டினார் என்பது தொன்மம்.

வீரமாமுனிவர், அடைக்கல அன்னையின் பெருமையையும், இறைவனின் சிறப்பையும் கூறுவதற்காக திருக்காவலூர் கலம்பகம் நூலை இயற்றினார்.

பிரசுரம்/வெளியீடு

திருக்காவலூர் கலம்பகம் பொ.யு. 1843-ல் அச்சிடப்பட்டு வெளியானது.

நூல் அமைப்பு

திருக்காவலூர் கலம்பகம் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, துறை, தாழிசை, விருத்தம் முதலிய பல வகைப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளது. 100 பாடல்களைக் கொண்டுள்ளது. அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. கலம்பக உறுப்புகள் 18 என்றாலும் சில கலம்பக நூல்களில் 18-க்கும் மேற்பட்ட உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் திருக்காவலூர் கலம்பகத்தில் காப்புச் செய்யுள் நீங்கலாக புயவகுப்பு, தவம், காலம், இடைச்சி, மறம், கைக்கிளை, வண்டு, குறம், இரங்கல், தழை, அம்மானை, சமூக உல்லாசம், சித்து, சம்பிரதம், தென்றல், ஊசல், பாண் மதங்கு, தூது, வலைச்சி என 20 உறுப்புகள் இம்பெற்றுள்ளன. அவற்றுள் பிற கலம்பக நூல்களில் இடம் பெறாத ‘சமூக உல்லாசம்’ என்ற புதுவகை உறுப்பை வீரமாமுனிவர் கையாண்டுள்ளார். விவிலியத்தின் தாக்கம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

நூலின் சிறப்பு

திருக்காவலூர் கலம்பகம், கிறிஸ்தவ சமயம் சார்ந்த முன்னோடிக் கலம்பக நூலாகக் கருதப்படுகிறது. முதல் பெண்பாற் கலம்பக நூலாகவும் இந்நூல் அறியப்படுகிறது. பிற கலம்பக நூல்களில் சிற்றின்பச் செய்திகள் இடம் பெற்றிருக்க, திருக்காவலூர்க் கலம்பகம் பேரின்பச் செய்திகளைக் கொண்ட நூலாக அமைந்துள்ளது.

உசாத்துணை

வீரமாமுனிவர் படைப்புகள்: விகடன் இதழ் கட்டுரை


✅Finalised Page