under review

தவம் (கலம்பக உறுப்பு)

From Tamil Wiki

தவம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட கலம்பக நூல்களில் தவம் செய்பவர்களைக் கண்டு அவர்களின் தவத்தை விட பாட்டுடை இறைவனை வணங்குவதே சிறந்தது எனப் பாடுவது.

விளக்கம்

உடலை வருத்தி, புலன்களை அடக்கி தவம் செய்வதைவிட இறைவனைப் பாடி வணங்குதலே அவனை அடைவதற்கான எளிய வழி என்பதைப் பேசுபொருளாகக் கொண்ட கலம்பக உறுப்பே தவம். இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட கலம்பக இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு

திருவரங்கக் கலம்பகம்

காய் இலை தின்றும் கானில்உ றைந்தும் கதிதேடித்
தீயியை , நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள் !
தாயிலும் அன்பன் பூமகள் அன்பன் தநாகப்
பாயன் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே .

காட்டில் வாழ்ந்து , அங்கு கிடைக்கும் காய் , இலைகளை உண்டும் , தீயில் நின்றும் , உலகை வலம் வந்தும் செய்யும் தவத்தை உடையவர்களே ! பூமகளின் அன்பனாகிய எம்பெருமான் தாயைக் காட்டிலும் மிகுந்த அன்பு கொண்டவன் . அத்தகைய , பாம்பணையில் பள்ளிகொண்டுள்ள அரங்கனை , திருவரங்கக் கோயிலுக்குச் சென்ற வணங்குங்கள் என்று தவம் செய்பவர்களுக்கு சொல்லப்படுகிறது.

திருவெங்கைக் கலம்பகம்

கொடியவரை வனத்திருந்து நோற்கி னுந்தோட்
 கொற்றவரை யொத்தவரைத் துறந்து போகிப்
படியவரை மருட்டுதவ வேடந் தாங்கிப்
 படிமுழுது முலாவுகினு மறைக ளெல்லாம்
முடியவரை யறுத்துணர்ந்து புகலி னுந்தீ
 முளரிமலர்க் கரத்தெடுத்த வெங்கை வாணர்
அடியவரை வழுத்தியவ ரடிகள் சூடா
 வவலரையோர் பொருளாக வறிகி லோமே.

யோகம் பயின்று, புலன்களை அடக்கி, ஊசி முனையில் நின்று தவம் செய்தாலும் உடல் நோவதைத் தவிர வேறு பயனுண்டோ? திருநீறணிந்து, ஐந்தெழுத்தை ஓதி, சிவனை வணங்குங்கள்.

திருக்காவலூர் கலம்பகம்

உயிர்ஆம் தயையாளை ஓம்புஅனந்தத் தாளை
அயிரா மறைமொழி யாளை - பயிர்ஆரும்
சிந்துசேர் காவலூர்ச் சேர்ந்தாளைப் பாடினேன்
இந்துசேர் தாள்சேர யான்

உடலைப் பாதுகாத்தல், உறுப்புகளை அடக்குதல், தம்மை வருத்தி இறைவனையே நினைத்திருத்தல் என்பனவற்றைத் தவம் என்று கூறலாம். இவ்வாறு செய்யும் தவத்தின் பயனை அடைக்கல அன்னையை வணங்கினால் எளிதாகப் பெறலாம் என்று இப்பகுதியில் ஆசிரியர் கூறுகின்றார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:37:23 IST