under review

களி (கலம்பக உறுப்பு)

From Tamil Wiki

களி கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. மதுவின் மயக்கத்தில் களியேற்றத்தில் பாடப்படுவது அல்லது கள்ளை சிறப்பித்துக் கூறுவது.

விளக்கம்

கள் முதலிய போதை தரும் பொருட்களை அருந்துபவர்கள் (களியர்கள்) குடியை உயர்த்திப் பேசுவதோ அல்லது மயக்கத்தில் தாறுமாறாகப் பேசுவதோ களி என்னும் உறுப்பின் இலக்கணம்.

எடுத்துக்காட்டு

திருவருணைக் கலம்பகம்

தனையிருக்கு மறைதுதிக்கு மருணை நாதன்
    சரணமலர் புகழ்களியேஞ்சக்ர பூசை
வினையிருக்கு மவர்க்கெளிதோ வரிதா னையோ
    விதிவசத்தால் விவரமற்ற விதஞ்சொல் வேனே
பனையிருக்க நெடியகஞ்சா விருக்க வீணே
    பச்சையா லிலைதுயின்றான் பனையன் றேளி
யனையிருக்கப் பணிதுயின்றான் மதுவாந் தெய்வ
    வாழிவிட்டுப் பாற்கடன்மீ தழுந்தி னானே. (44)

அருணைநாதனை யந்திரமெழுதி பூசித்தல் கள் குடியராகிய எம்மால் முடியுமா? திருமால் பனைமரக் கள்ளும் , கஞ்சா செடியும் இருக்க பச்சை ஆலிலையில் துயின்றான். மீன்கள் பல் இருக்க பாற்கடலில் உறங்கினான்- என்று கள், கஞ்சா முதலியவற்றை உயர்த்திப் பேசப்படுகிறது.

காசிக் கலம்பகம்

சோதி யொன்றிலொரு பாதி சக்தியொரு
   பாதி யும்பரம சிவமெனத்
தொகுத்து வைத்தவவி முத்த நாயகர்
 துணைப்ப தம்பரவு களியரேம்
ஓதி யோதி ளைப்பர் வேத
 முணர்த்து தத்துவ முணர்கிலார்
உணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ
 ருண்மை வாசக முணர்த்துகேம்
ஏதி னாலற மனைத்தி னும்பசு
 வினைப்ப டுத்தனல் வளர்த்திடும்
யாக மேயதிக மென்ப தன்பர்த
 மிறைச்சி மிச்சிலதி லிச்சையார்
ஆதி யாரறிவ ரதுகி டக்கமது
 வருந்தி லப்பொழுதி லேபெறற்
கரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ
 ததும றுத்தவிர வில்லையே.

யாகம் முதலிய செய்யும் அந்தணர்களும் இறைச்சி, மது முதலியவற்றை விரும்பார். அவர்கள் கள்ளால் கிடைக்கும் பரம சுகத்தை அறிந்திலாதவர்கள் என கள்குடியை உயர்த்திப் பேசுகின்றனர் களியர்கள்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:26:00 IST