under review

கதிர் முருகு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 108: Line 108:
* முனைவர் கதிர்முருகு, ஆர்.விவேகானந்தன், நந்தினி நூலகம், முதல் பதிப்பு : 2017
* முனைவர் கதிர்முருகு, ஆர்.விவேகானந்தன், நந்தினி நூலகம், முதல் பதிப்பு : 2017
* [https://marinabooks.com/category/category?authorid=1579-9917-4782-3151&showby=list&sortby=pricelow முனைவர் கதிர்முருகு நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்]  
* [https://marinabooks.com/category/category?authorid=1579-9917-4782-3151&showby=list&sortby=pricelow முனைவர் கதிர்முருகு நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்]  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|06-May-2024, 19:56:03 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:59, 13 June 2024

முனைவர் கதிர் முருகு

கதிர் முருகு (கதி. முருகேசன்) (பிறப்பு: அக்டோபர் 01, 1971) எழுத்தாளர்; உரை நூல் ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கிய நூல்கள் பலவற்றை புதிய உரைகளுடன் பதிப்பித்தார்.

பிறப்பு, கல்வி

கதி. முருகேசன் என்னும் இயற்பெயரை உடைய கதிர் முருகு, அக்டோபர் 01, 1971 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த வேகுப்பட்டி என்ற கிராமத்தில் கதிரேசன் – மீனாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்தார். மிக ஏழ்மையான சூழலில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.

வேகுப்பட்டியில் உள்ள சிவகாமசுந்தரி செந்தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பொன்னமராவதியில் உள்ள வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். பகுதி நேரமாகக் கடைகளில் பணியாற்றிக் கொண்டே கல்வியைத் தொடர்ந்தார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று பி.லிட். (இளங்கலை தமிழ் இலக்கியம்), எம்.ஏ., எம்.பில், பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று சோதிடவியலில் பட்டயம் பெற்றார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பி.எட். பட்டம் பெற்றார். பல்கலைக் கழக மானியக் குழு அளித்த நிதியுதவி மூலம், சென்னைப் பல்கலைக்கழகத்தில், ‘திருவண்ணாமலைத் திருக்கோயில் சமுதாயப் பயன்பாட்டாய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கதிர் முருகு வறுமைச் சூழலால் கடைப் பணியாளர், காய்கறி வியாபாரி, செய்தித் தாள் முகவரின் உதவியாளர், மைக்செட் வடிவமைப்பாளர், வீடியோ கேசட் விற்பனையாளர் எனப் பல பணிகளை மேற்கொண்டார். மணமானவர். மனைவி: சசிரேகா. இரு மகள்கள்.

கல்விப் பணிகள்

கதிர் முருகு, அம்பத்தூரில் உள்ள புனித பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அம்பத்தூர் சூரப்பட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 2002 முதல் ஜூன் 2006 வரை தமிழ் மொழித் துறை மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். 2008 முதல் 2010 வரை ஆவடியில் உள்ள நாசரேத் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 2010 முதல் 2012 வரை வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் (VIT) சென்னை பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 2015 முதல் 2016 வரை முகப்பேரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றினார். மார்ச் 10, 2016 முதல் தான் படித்த மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கதிர் முருகு நூல்கள்
முனைவர் கதிர் முருகு உரை நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

கதிர் முருகு இலக்கிய இதழ்களில், கல்லூரி ஆய்விதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். ‘நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்’, ‘நாட்டுப்புறத் திருவிழா’, ‘திருவண்ணாமலை கிரிவலமும் உடல்நலமும்’ ஆகிய கட்டுரைகள் தாமரை இதழில் வெளியாகின. பல்வேறு ஆய்விதழ்களில், ‘ஆய கலைகளில் மருத்துவக்கலை’, ‘நாட்டுப்புற மருத்துவம் சிறப்புப் பார்வை’, ‘பரிபாடலில் திருப்பரங்குன்றம்’, ‘கோவி. மணிசேகரனின் ’குற்றாலக் குறிஞ்சி’ புதினத்தில் மனித உறவுகள்’ போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதினார். கதிர் முருகு 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

'அருள்நெறி மாணிக்கவாசகர்', 'நாட்டுப்புறப் பண்பாடும் வழிபாடும்', 'பிற்கால நீதி இலக்கிய வரலாறு', 'திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம்', 'சங்கம் மருவிய கால அறநூல்கள்', 'எனக்குள் ஒரு முகம்' போன்ற பல நூல்களை எழுதினார். பல்வேறு இலக்கிய நூல்களுக்கு உரைகள் எழுதினார். முதல் உரை நூல், ’நந்திக்கலம்பகம்’, 2007-ல் சாரதா பதிப்பகம் மூலம் வெளியானது. தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட இலக்கியங்களுக்கு உரை எழுதினார்.

அமைப்புப் பணிகள்

கதிர் முருகு, ‘வேரல் மொழி இலக்கிய ஆய்வு நிறுவனம்' என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் பல இலக்கிய, ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தார்.

முனைவர் கதிர் முருகு வாழ்க்கைக் குறிப்பு நூல்

ஆவணம்

கதிர்முருகுவின் வாழ்க்கை வரலாற்றை ஆர்.விவேகானந்தன் எழுதினார். அந்நூலை நந்தினி நூலகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து 2017-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

கதிர்முருகு நாட்டுப்புறவியல் ஆய்வாளராகவும், புலியூர்க் கேசிகன் வரிசையில் எளிய தமிழில் பல உரைகளை எழுதியவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

ஆய்வுக் கட்டுரை நூல்கள்
  • நாட்டுப்புற வழிபாடும் பண்பாடும்
  • நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்
  • சங்கம் மருவிய கால அற இலக்கியங்கள்
  • அருள்நிறை மாணிக்கவாசகர்
  • சமூக பயன்பாட்டு நோக்கில் திருவண்ணாமலை
  • பிற்கால நீதி இலக்கிய வரலாறு
  • திறனாய்வு நோக்கில் நந்திக்கலம்பகம்
  • சங்கம் மருவிய கால அறநூல்கள்
  • எனக்குள் ஒரு முகம்
உரை நூல்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2024, 19:56:03 IST