under review

நாக குமார காவியம்

From Tamil Wiki
நாககுமார காவியம்

நாக குமார காவியம்: (பொ.யு. 12/பொ.யு. 15) தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. சமண சமயத்தைச் சார்ந்தது. தமிழ் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என பிரிப்பது வழக்கம். நாககுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. இது நாகபஞ்சமியின் கதையைச் சொல்கிறது. சம்ஸ்கிருதத்தில் மல்லிசேனர் எழுதிய நாகபஞ்சமி கதா என்னும் நூலின் வழிநூலாக கருதப்படுகிறது.

மதம்

ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி மூன்று மட்டுமே சமண சமயம் சார்ந்தவை. மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் பௌத்த சமயச் சார்புடையவை. ஆனால், ஐஞ்சிறு காப்பியங்களான உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம் நீலகேசி, சூளாமணி என ஐந்துமே சமண சமயம் சார்ந்தவை.

ஆசிரியர்

நாககுமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஒரு சமண முனிவர் எழுதியது என்பது மட்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

காலம்

நாக குமார காவியத்தின் காலம் பொயு 12--ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இதன் காலம் பற்றிய கருத்துக்களை மு. சண்முகம் பிள்ளை முதற்பதிப்பின் முன்னுரையில் இவ்வாறு தொகுத்துச் சொல்கிறார்

  • ஆய்வாளர் திருமணம் கே. செல்வகேசவராய முதலியார் எழுதிய 'கம்பநாடர்’ என்னும் நூலில் தமிழில் தண்டியலங்காரம் தோன்றுவதற்கு முன்னரே காவியங்கள் ஏற்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அவை எல்லாம் பெரும்பாலும் வடமொழிக் காப்பியங்களின் போக்கைப் பின்பற்றியவை. ஆகவே தண்டியலங்காரம் தோன்றிய பொயு 12 -ம் நூற்றாண்டுக்கு முந்தைய நூல் நாககுமார காவியம்.
  • ஐஞ்சிறு காவியங்களுள் யசோதர காவியமும் நாககுமார காவியமும் பழைய உரைக்காரர்கள் எவராலும் மேற்கோளாக எடுத்தாளப்படவில்லை. பொயு.14-ம் நூற்றாண்டில் காவிய நூற்பாடல்களைத் திரட்டித் தந்துள்ள 'புறத்திரட்'டில் இவ்விரு காவியங்களிலுள்ள செய்யுள்கள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே, நாககுமார காவியம் போன்ற சமணச் சிறுகாப்பியங்கள் பொயு 14 -ம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியவை
  • எஸ். வையாபுரிப் பிள்ளை இந்நூலுக்கு மூலநூலாக 15 -ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்னும் காவிய மொழியாக்கத்தை குறிப்பிடுகிறார். ஆகவே நாககுமார காவியம் 16 -ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார்.
  • பொயு 10 அம் நூற்றாண்டில் புட்பதந்தர் என்பவர் சம்ஸ்கிருத அபப்பிரம்ஸ (மருவு) மொழியில் எழுதிய நாககுமார சரிதத்தை அடியொற்றி வடமொழி, கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் ஜைன ஆசிரியர்களால் அச்சரிதம் தனி நூலாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தமிழ்நூலும் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என்றும் பொயு 10 நூற்றாண்டுக்குப்பின் பொயு 12 நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் மு.சண்முகம் பிள்ளை கருதுகிறார்.

பதிப்பு

அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்தார். 'அச்சில் வாரா அருந்தமிழ் நூல்’ என்ற வரிசையில், 1973-ல், சென்னைப் பல்கலைக் கழகம் இந்த நூலை வெளியிட்டது. ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களுக்கு இக்காவியப் படியைத் தந்தவர் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள தச்சாம்பாடியைச் சேர்ந்த சமணப் பேரறிஞர் ஜெ.சின்னசாமி நயினார் அவர்கள்.

இந்நூல் பிழையற பதிப்பிக்கப்படவில்லை. மு.சண்முகம் பிள்ளைக்கு ஜெ.சின்னச்சாமி நயினார் 21-11-1972ல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். ’அந்நூலை 20 ஆண்டுகட்கு முன் கிலமடைந்ததோர் ஏட்டுப் பிரதியிலிருந்து படிவம் எடுத்தேன். அக்கதை தமிழிலும் இல்லை. சமஸ்கிருத நூற்பயிற்சியும் எனக்கில்லை. புண்ணியாஸ்ரவ கதையைக்கொண்டு முதற் சருக்கத்திற்குக் குறிப்புரை எழுதினேன். இடையில் வேறோர் செம்மையான கதை (கையெழுத்துப் பிரதி)யைக் கொண்டு பொழிப்புரை வரைந்தேன். இரண்டும் ஏட்டுப் பிரதியில் இல்லை, என் முயற்சிதான். அம் முதற் சருக்கத்திற்கும் சமஸ்கிருத நாககுமார காவியம் பயின்றவர்களைக் கொண்டு செப்பஞ் செய்து விடலாமென விட்டு விட்டேன். அரும்பதவுரையை நீக்கி அதற்கும் பொழிப்புரை வரைந்து வெளியிடலாம்."

22-11-1972 ல் எழுதிய இன்னொரு கடிதத்தில் "நாககுமார காவியமும் யானே ஏட்டுப் பிரதியிலிருந்து படியெடுத்தேன். கதைப் போக்கைக் கொண்டு ஊகமாகத் திருத்தியுள்ளேன். வேறு பிரதியொன்றை இயன்றவரை முயன்று தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த பிரதியும் மிகப் பழுதடைந்த பிரதியாதலின் கை தவறிப் போயிற்று" என்று சின்னசாமி நயினார் குறிப்பிடுகிறார். மு.சண்முகம் பிள்ளை 'இவர்கள் படியெடுத்த மூல ஏட்டுப் படியாகிலும் கிடைத்தால் விளங்காத பகுதிகளை மேலும் ஊன்றி ஆய்ந்து நோக்கலாம் என்று கருதினேன். அதனைப் படி செய்தவரிடமேகூட அஃது இன்று இல்லை’ என்று நாக குமார காவியம் முதற்பதிப்பின் முன்னுரையில் கூறுகிறார்.

ஆகவே மூலச்சுவடிகள் முழுமையாக இன்னும் கண்டெடுக்கப்படவில்லை என்பதும், கிடைக்காத பகுதிகள் பலவாறாக ஊகித்து எழுதப்பட்டுள்ளன என்பதும் தெரியவருகிறது.

உரை

நாக குமார காவியத்துக்கு ஜே.சின்னச்சாமி நயினார் உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதாமல்விட்ட பகுதிகளை மு.சண்முகம் பிள்ளை உரை எழுதி நிறைவு செய்து நூலாக்கினார்.

வங்காரம் அப்பாண்டை ராஜன் நாககுமார சரிதத்துக்கு விரிவான உரை எழுதியிருக்கிறார்.

முதல்நூல்கள்

இருபத்துநான்கு தீ்ர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் 'ஸ்ரீபுராணம்’என்னும் மணிப்பிரவாள நடையிலுள்ள தமிழ் நூலில் நாககுமார காவியத்தின் தோற்றுவாயாகத் தரப்பட்டுள்ள சிரேணிக மகாராசனின் வரலாறு காணப்படுகிறது. இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் பகுதியாகிய ஸ்ரீ வர்த்தமான புராணத்தில் சிரேணிக மகாராசன் விபுலகிரி சிகரத்தில் உள்ள சமவசரண மண்டலத்தில் ஸ்ரீ வர்த்தமானரைத் தொழுது போற்றியமையும், அங்குக் கௌதம சுவாமியிடம் தன் முன்னைப் பிறப்புத் தொடர்பினை வினவியறிந்ததும் சொல்லப்பட்டிருக்கிறது. சிரேணிக மகாராசனின் தேவியாகிய சேலினியைப் பற்றியும் குறிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீபுராணம் என்னும் தமிழ் நூல் வடமொழியில் கி.பி.9-ம் நூற்றாண்டில் தோன்றிய 'மகாபுராண'த்தைப் பெரிதும் தழுவிச் செல்கிறது. பழங்கன்னடத்தில் பொயு 997-ல் இயற்றப்பட்ட 'சாமுண்டராய புராண’மும் வடமொழி மகாபுராணத்தைப் பின்பற்றி எழுந்ததேயாகும். நாககுமாரன் சரிதம் இந்த மூலநூல்களில் இருந்து உருவானதாக இருக்கலாம் என எஸ்.வையாபுரிப் பிள்ளை சொல்கிறார்.

ஆனால் 'நாககுமார சரிதம்' என்பது 'பஞ்சமி சரிதம்', 'நாககுமார கதை' என்னும் பெயர்களாலும் பிற மொழிகளில் இயற்றப்பட்டுள்ளது. பொயு 10 அம் நூற்றாண்டில் புட்பதந்தர் என்பவர் சம்ஸ்கிருத அபப்பிரம்ஸ (மருவு) மொழியில் நாககுமார சரிதத்தை விரிவாக எழுதினார். அதை அடியொற்றி சம்ஸ்கிருத மொழியில் மல்லிசேனர் எழுதிய நாககுமார சரிதம் ’நாகபஞ்சமி கதை' என்றும் குறிப்பிடுகிறது. தாரசேனர் இயற்றிய வடமொழிக் கவிதையாலான நாககுமார சரிதம் ஒன்றும் உள்ளது. இராமச்சந்திர முமுட்சு வடமொழியில் எழுதிய 'புண்ணியாஸ்ரவ கதையிலும்' இச்சரிதம் இடம் பெற்றுள்ளது. பாகுபலி கவி என்பவர் கன்னட மொழியில் நாககுமார சரிதம் இயற்றியுள்ளார். இதுதவிர இரத்னாகரகவி எழுதிய நூல் ஒன்றும் கன்னடத்தில் உள்ளது. நாககுமார காவியம் இந்நூல்களில் இருந்து தோன்றியதாக இருக்கலமென மு.சண்முகம் பிள்ளை கருதுகிறார்.

பொதுவாக, தமிழ் நாககுமார காவியத்தின் முதல் நூல் வடமொழியில் மல்லிசேனர் எழுதிய நாக பஞ்சமி கதையினை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. ’சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்’ என்று இந்நூல் குறிப்பிடுவதிலிருந்து இந்தக் கதை நாகபஞ்சமிக் கதையின் வழிநூலே என்றும், நாகபஞ்சமி காவியம் என அழைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரியவருகிறது.

நூல் அமைப்பு

நாக குமார காவியம், 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையைக் கூறுகிறது. காப்புச்செய்யுள் தனியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சருக்கத்தின் அளவையும் உள்ளடக்கத்தையும் சொல்லும் இரண்டு பாடல்கள் நூலின் இறுதியில் அமைந்துள்ளன.

முதற்சருக் கந்தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்
இதனிரண் டாவதன்னில் ஈண்டுமுப் பத்துநான்காம்
பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்
விதியினா னான்குதன்னில் நாற்பத்து மூன்றுதன்றே.
இன்புறு மைந்து தன்னி விரட்டித்த பதின்மூன் றாகும்
நன்புறக் கூட்ட வெல்லா நான்கைநாற் பதின்மாற
வன்பினற் றொகையின் மேலே வருவித்தீ ரைந்தாகும்
இன்புறக் கதையைக் கேட்பாரியல்புடன் வாழ்வ ரன்றே

சருக்கங்களுக்கு எண்களே அளிக்கப்பட்டுள்ளன, பெயர்கள் தரப்படவில்லை. வடமொழி நூலான நாகபஞ்சமியும் அவ்வாறே அமைந்துள்ளது. இக்காவியம் விருத்தப்பாவில் அமைந்தது.

கதை

விபுல மலையிலுள்ள சமவசரணத்திற்குத் தன் சுற்றத்தாரோடு வந்து வணங்கிய சிரேணிக மகாராசன் கௌதம முனிவரை வணங்கித் தருமங் கேட்கிறான். தரும தத்துவங்களைக் கேட்டபின், அம் முனிவரிடம் 'பஞ்சமி கதை’யினை உரைக்க வேண்டுகிறான். கௌதமர் சிரேணிக மகாராசனுக்குச் சொல்வதாகவே நாககுமாரக் காவியக் கதை அமைந்துள்ளது.

நாககுமாரன் வாழ்க்கைக்கதை இக்காவியத்தின் 26-ம் பாடலுடன் தொடங்குகிறது. நான்காம் சருக்கம் வரையில் நாககுமாரனின் வீரதீரச் செயல்களும், காதல் களியாட்டங்களும் சிறப்பிக்கப்படுகின்றன. இறுதிச் சருக்கமான ஐந்தாம் சருக்கம் நாககுமாரனின் முற்பிறப்பு வரலாற்றையும், பஞ்சமி விரத நோன்பையும், அதனால் விளையும் பெரும் பயனையும், துறவு நிலையையும் எடுத்துரைக்கின்றது.

நாககுமாரன் அரசகுல மங்கையரையும் பிறரையும் திருமணம் செய்துகொள்கிறான். வீரச் செயல்களைப் போலவே இன்பம் அனுபவிப்பதிலும் நாகலோக வாசிகள் போலக் காணப்படுகிறான். நாககுமாரன் பின்னர் சமணமுனிவர்களிடம் தருமம் கேட்டு, ஞான நன்னிலை பெறுகிறான். இறுதியில் தன் மகன் தேவ குமாரனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொள்கிறான். நாககுமாரன் துறவுடன் செயவர்மாவின் துறவு (78), சோமப்பிரபனின் துறவு (107) முதலியனவும் இக்காவியத்துள் இடம் பெறுகின்றன.

பாடல் நடை

வர்த்தமானரை வாழ்த்தி இயற்றப்பட்டிருக்கும் பாடல்கள் சொற் சுவையும், கவிச்சுவையும் கொண்டதாக விளங்குகின்றன.

கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே
காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே
பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே
தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே
செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே
அறவன்நீ கமலன்நீ ஆதி நீயே
ஆரியன்நீ சீரியன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
எரிமணிநற் பிறப்புடைய ஈசன் நீயே
இருநான்கு குணமுடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே
சீர்வர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே

- போன்ற பாடல்களில் வரும் அருக வழிபாடு, கவிஞரின் சமய உணர்வுக்குச் சான்றாக உள்ளது.

அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்
மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்
திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே!

- என்ற அறவுரைப் பாடலுடன் 'நாககுமார காவியம்’ நிறைவு பெறுகிறது.

இலக்கிய இடம்

நாககுமார காவியம் சமணசமயக் கருத்துக்களைச் சொல்வதாக அமைந்துள்ள போதிலும் காவியத்தின் முதற்பகுதி கதைத்தலைவனின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் சொல்வதாக அமைந்துள்ளமையால் காவியத்தன்மை கொண்டதாக உள்ளது. காவியச்சுவையில் சீவக சிந்தாமணியுடன் ஒப்பிடத்தக்கது. ஆனால் பாடல்களின் நடை பல்வேறு காலகட்டங்களுக்குரிய வகையில் மாறிவருவதிலிருந்து இந்நூலில் இடைச்செருகல்களும் திருத்தங்களும் நிறையவே இருக்கலாம் என ஆய்வாளர் கருதுகிறார்கள்.

உசாத்துணை


✅Finalised Page