under review

மு. சண்முகம் பிள்ளை

From Tamil Wiki
மு. சண்முகம் பிள்ளை

மு. சண்முகம் பிள்ளை (வித்வான் மு. சண்முகபிள்ளை) தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், தொகுப்பாசிரியர். சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்தார். திருக்குறள் இருக்கைப் பேராசிரியராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. சண்முகம் பிள்ளை கன்னியாகுமரியில் பிறந்தார். தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதலாவது இடம் பெற்றார். 1941-ல் எஸ். வையாபுரிப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னையில் குடியேறினார். எஸ். வையாபுரிப்பிள்ளை பணிபுரிந்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலேயே இரண்டு ஆண்டுக்கள் ஆராய்ச்சி மாணவனாக பயிற்சி பெற்றார். அவர் இறக்கும்வரை (1956) அவருடன் இருந்தார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப் புலத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மு. சண்முகம் பிள்ளை எஸ். வையாபுரிப்பிள்ளையின் மூலமாக பதிப்புத்துறையிலும் அகரமுதலி ஆக்கப் பணிகளிலும் பயிற்சி பெற்றார். சிற்றிலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். அழிந்து போனதாகக் கருதப்பட்ட நாககுமார காவியம் என்ற நூலை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் உதவியால் மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்தார். எஸ். வையாபுரிப்பிள்ளையுடன் இணைந்து சைவ சித்தாந்த மகாசமாஜப் பதிப்புகளைப் பதிப்பித்தார். மர்ரே ராஜம் பதிப்பித்த சங்க இலக்கியத்தை செம்மை நோக்கினார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் 'மலரும் மாலையும்' நூலைத் தொகுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் துறை மூலம் திருக்குறளின் பாட வேறுபாடுகளை ஆராய்ந்தார். சிவராஜ பிள்ளை ஆராய்ந்த தமிழ்ச் சொற்களைப் பற்றிய நூலை வெளியிட்டார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நிகண்டுகளின் வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்தார். மாணிக்கவாசகர் நூலகத்தின் பதிப்புச் செம்மைக்குக் காரணமாக அமைந்தார். தமிழ்-தமிழ் அகரமுதலியின் தொகுப்பாசிரியர்.

நூல் பட்டியல்

  • சங்கத் தமிழர் வாழ்வியல்
  • சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும்
  • தொன்று வா? தோன்று வா?
  • தமிழ்நூல் விவர அட்டவணை
  • திருக்குறள் ஆராய்ச்சி- 1 யாப்பு அமைதியும் பாட வேறுபாடும்
  • நிகண்டுச் சொற்பொருட் கோவை
  • வேதகிரியார் சூடாமணி நிகண்டு
  • அகப்பொருள் மரபும் திருக்குறளும்
  • திருக்குறள் அமைப்பும் முறையும்

உசாத்துணை


✅Finalised Page