under review

நீலகேசி

From Tamil Wiki
நீலகேசி

நீலகேசி: (பொ.யு. 7-ம் நூற்றாண்டு / 10-ம் நூற்றாண்டு) தமிழில் உருவான ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று. தமிழில் தோன்றிய முதல் தர்க்க நூல் இது எனக் கூறப்படுகிறது. பௌத்த சமயத்தின் பெருமை கூறும் குண்டலகேசிக்கு மாற்றாக, சமண சமயத்தின் பெருமை பேசும் நீலகேசி எழுதப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

பெயர்

பல சுவடிகளில் இந்நூல் நீலகேசித்திரட்டு என்று கூறப்பட்டிருந்தமையால் இது ஒரு பெருநூலின் சுருக்கம் என்று ஆய்வாளர் பலர் கூறிவந்தனர். ஆனால் இந்நூல் அமைப்பில் ஒரு முழுநூலாகவே தெரிகிறது என்றும், திரட்டு என்பது சுவடித்திரட்டை குறிப்பது என்றும், இந்நூலின் பெயர் நீலகேசியே தான் என்றும் ஆய்வுப்பதிப்பை உருவாக்கிய அ.சக்கரவர்த்தி நயினார் (பிரின்ஸ் அ. சக்கரவர்த்தி) குறிப்பிடுகிறார். பவானந்தம் பிள்ளை பதிப்பித்த யாப்பெருங்கல விருத்தியுரையில் இந்நூலின் பெயர் குறிப்பிடப்படும்போதெல்லாம் நீலம், நீலகேசி என்று மட்டுமே உள்ளது என்பதை ஆதாரமாகச் சொல்கிறார்.

'கேசி' என்பதற்கு அழகிய கூந்தலை உடையவள் என்பது பொருள். 'நீலகேசி' என்பதற்கு 'அழகிய கருங்கூந்தலை உடையவள்' என்று பொருள் கொள்ளப்படுகிறது. நீலகேசி சமணசமயத்தில் பரவலாக காணப்படும் பெயர்.

ஆசிரியர்

நீலகேசியின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவர் சமண அறிஞர் என நூலின் உள்ளடக்கம் காட்டுகிறது.

பதிப்பு

  • நீலகேசியை ஓலைச் சுவடிகளில் இருந்து சமய திவாகர வாமன முனிவர் உரையுடன் முதன் முதலில் பதிப்பித்தவர் கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் அ. சக்கரவர்த்தி நயினார்.
  • 1936-ல் வெளிவந்த இப்பதிப்பை 1984-ல் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம் நிழல்படப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
  • 1964-ல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரை புதிய உரை எழுதச் செய்து நீலகேசி விளக்கவுரை என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது.
  • அ.சக்கரவர்த்தி நயினார் முதல்பதிப்புக்கு எழுதிய நீண்ட ஆய்வு முன்னுரையை கா.அப்பாத்துரை தமிழில் நீலகேசி உரை என்னும் பெயரில் மொழியாக்கம் செய்து நூலாக்கினார். (அம்மொழியாக்கம் பிழைகளும் விடுபடல்களும் கொண்டது என குற்றம்சாட்டப்படுகிறது. )

காலக்கணிப்பு

நீலகேசியின் காலத்தை கணிக்க கீழ்க்கண்ட வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை அ.சக்கரவர்த்தி நயினார் முதல்பதிப்புக்கு எழுதிய விரிவான முன்னுரையில் தொகுத்தளிக்கிறார்.

  • நூலாசிரியர் இந்நூலில் தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் ஆகிய மூன்று தமிழ்நூல்களையே மேற்கோளாகக் குறிப்பிடுகிறார். இம்மூன்றுநூல்களையுமே சமணநூல்களாகக் கொள்ளும் வழக்கம் சமணர்களிடம் உண்டு. ஆகவே இந்நூல் எழுதப்பட்டபோது இம்மூன்று நூல்கள் மட்டுமே இருந்தன என்று கொள்ளலாம்
  • சங்கரர் முதலியோரின் கொள்கைகளையோ, பிற கொள்கைத்திரட்டு (சம்கிரக) நூல்களில் பேசப்பட்டுள்ள கொள்கைகளையோ நூலாசிரியர் அறிந்திருக்கவில்லை. ஆகவே நூலாசிரியர் அவர்களுக்கு முந்தைய காலத்தவர் என்று கொள்ளப்படலாம்
  • இந்நூல் புத்தமதத்துக்கு அடுத்தபடியாக ஆசீவகத்தை எதிர்க்கிறது. ஆனால் ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் உருவான தேவார திருவாசகங்களில் பிறமதங்கள் கண்டிக்கப்படும்போது ஆசீவகம் குறிப்பிடப்படுவதில்லை. வேதநெறிக்கு எதிரான எல்லா கொள்கைகளையும் மறுத்த சைவக்குரவர்கள் ஆசீவகம் இருந்திருந்தால் மறுக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அக்காலகட்டத்தில் சம்ஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்ட சமயக்கொள்கைத் தொகுப்பு நூல்களிலும் ஆசீவகம் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இந்நூல் ஆசீவகம் தமிழகத்தில் வலுவாக இருந்த காலத்தில் உருவானது. தேவார திருவாசக காலகட்டத்தில் ஆசீவகம் வழக்கொழிந்துவிட்டது
  • நீலகேசி ஐந்தாம் செய்யுளில் ஆசிரியர் தன்னுடைய மெய்யறிவு தேவரிடமிருந்து நேரிடையாகக் கற்றது என்று குறிப்பிடுகிறார். தேவர் என்று தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படுபவர் திருவள்ளுவர், ஆகவே இந்நூலாசிரியர் திருவள்ளுவரின் மாணவராக இருந்திருக்கலாம்.

இக்காரணங்களால் நீலகேசி பொயு ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தையதாகவே இருக்கமுடியும் என்று மதிப்பிடப்படுகிறது.

பிற்கால ஆய்வாளர்களில் கமில் சுவலபில் இந்நூல் பத்தாம் நூற்றாண்டைச் சேந்தது என்று குறிப்பிடுகிறார்.[1] பொ.யு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞர் தர்மகீர்த்தியின் சிந்தனைகளுக்கான மறுப்பு இந்நூலில் உள்ளது என்பதனால் அவருக்குச் சமகாலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று லி.சிவக்குமார் கருதுகிறார்.

உரை

இந்நூலுக்கு திவாகர வாமன முனிவர் உரை எழுதியிருக்கிறார்.

தொன்மப் பின்னணி

நீலகேசியின் கதை உரையாசிரியராலேயே குறிப்பிடப்படுகிறது. நூலில் விரிவான செய்திகள் இல்லை

ஆய்நீல உண்கண் அவளாயடங்காமை செய்யும்
பேய்நீல கேசி பெரியோன் அறங்கொண்ட பின்னைத்
தீநீல உள்ளம் திரிந்தேறு திருவத் தளாய்
மாஞால மெல்லா மறமாற்றிய மாட்சி யளாய்
தேவன் னுரைப்பத் தெளிந்தேன் பிற்தெளிந்த எல்லாம்
மாவென்று கொண்டேன் மடனேவலியாக நின்று
நாவல் புலவர் அவைநாப்பண்ணி நாட்ட லுற்றேன்

என்று நீலகேசி அக்கதையை குறிப்பிடுகிறது.

இக்கதையின் நான்கு வடிவங்கள் உள்ளன.

இரத்தின கரண்டகம்

இரத்தின கரண்டகம் என்ற வடமொழி நூலில் உள்ள கதை இது. ஜினதத்தன் என்ற வணிகன் மகளாக பிருகுகச்சம் என்ற ஊரில் பிறந்த நீலியை சாகர தத்தன் என்பவன் சமணராக வேடமிட்டு மணந்து கொண்டான். ஒருநாள் பிட்சு ஒருவனுக்கு ஊனுணவு ஆக்கி அளிக்குமாறு வீட்டினர் கட்டளையிட்ட போது உயிர்க்கொலை செய்ய விரும்பாத நீலி புத்தத் துறவியின் தோல் மிதியடியில் ஒன்றை சமைத்து உணவிட்டாள். அது கண்டுபிடிக்கப்பட்டபோது அவள் குடும்பத்தினர் அவள் கற்பின் மீது பழி சுமத்தினர். அப்போது நகரின் கோட்டைவாயில் அடைபட்டுப் போக, கற்புடைய பெண்கள் மட்டுமே அதைத் திறக்க முடியும் என்ற மரபுபின்படி அக்கதவை நீலி சென்று எளிதாகத் திறந்தாள். அவள் மீது இருந்த பழி நீங்கியது.

பலாலய நீலி கதை

வடக்கில் பாஞ்சால நாட்டில் புண்டர வருத்தனம் என்னும் நகரில் உள்ள சுடுகாடான பலாலயம் என்ற இடத்தில் கோயில் கொண்டிருந்த காளிக்கு அவ்வூர் மக்கள் பலி கொடுத்து வழிபட்டனர். அதை முனிசந்திரர் என்ற சமண முனிவர் தடுத்தமையால் கோபம் கொண்ட காளி நீலி என்ற நீலகேசியிடம் முறையிட்டாள். நீலகேசி முனிசந்திரரை துன்புறுத்த முயன்று, அவர் அருளால் அடங்கி, சமணத்துறவியாக மாறி, பிற மதத்தவரை வென்றாள்.

பெரியபுராணக் கதை

சேக்கிழார் பெரிய புராணத்தில் சொல்லும் பழையனூர் நீலி கதை. ஒரு வணிகன் தன் மனைவியைப் புறக்கணித்து வேசியரிடம் தன் செல்வத்தை எல்லாம் தொலைத்தான். ஆதரவற்ற அவன் மனைவி தன் பெற்றோரிடம் சென்று இருந்துவந்தாள். பொருளிழந்த வணிகன், தன் மனைவியைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். வழியில் அவள் அணிகலன்களைப் பறித்துக் கொண்டு அவளையும் குழந்தையையும் பாழும் கிணறு ஒன்றில் தள்ளிக் கொன்றான். பாழும் கிணற்றில் விழுந்து இறந்த அந்தப் பெண் அது முதல் பேயாகத் திரிந்தாள். அவளே நீலி.

பின்னொரு சமயம் மேலும் பொருளீட்டுவதற்காக அந்த வணிகன், அந்தப் பேய் இருந்த இடத்தின் வழியாகச் சென்றான் அவனுக்கு ஒரு முனிவர் துணையாக இருந்து ஒரு வாளைப் பரிசளித்திருந்தார். இப்போது அந்தப் பேய் மனித உருவில் கைக்குழந்தையுடன் அவனைப் பின்தொடரலாயிற்று. முனிவரின் வாள் காரணமாக அவள் அவனை நெருங்க முடியவில்லை. அது பேய் என்பதை அறிந்த வணிகன் விரைந்து பக்கத்திலுள்ள பழையனூருக்குள் ஓடினான். அந்தப் பேய்ப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவ்வூர்ப் பெருமக்களான வேளாளர் எழுபதின்மரிடம் அவனை இட்டுச் சென்றாள். மனைவியாகிய தன்னையும் தன் குழந்தையையும் அவன் கைவிட்டு வேசியிடம் செல்கிறான் என்றும், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனை ஊரார் தூண்ட வேண்டும் என்று அவள் முறையிட்டாள்.

வணிகன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறினான். அவர்கள் முன் வாதாடுவது பெண் அல்ல, பெண் உருவம் கொண்ட மாயப் பேயே என்றும் விடாமல் எடுத்துரைத்தான். வேளாளர்கள் அவன் கூறிய கதையை நம்பவில்லை. அவனுக்குத் தீங்குவராமல் காப்பதாக உறுதி அளித்தனர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவள் பழிவாங்கும் செயலுக்கு முனிவர் தந்த மந்திர வாள் தடையாக இருந்தது. அந்த வாளால் அவன் தன்னைக் கொன்று விடுவான் என்று வேளாளரிடம் முறையிட்டு அந்த வாளை அவனிடமிருந்து அகற்றினாள் நீலி. இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து இரத்தத்தைக் குடித்துவிட்டு பழையபடியே பேயாக மாறிச் சென்றுவிட்டாள். இச்செய்தி கண்ட வேளாளர் தங்கள் தவற்றை உணர்ந்து வருந்தி தங்கள் உறுதிமொழி தவறாது தீக்குளித்து இறந்தனர்.[2]

(பார்க்க பழையனூர் நீலி கதை)

கள்ளியங்காட்டு நீலி கதை

குமரிமாவட்ட சிறுதெய்வங்களில் நீலகேசி அம்மன் புகழ்பெற்றது. (உதாரணம் இட்டகவேலி நீலகேசி அம்மன்) நீலகேசி சமண மதம் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னரே தமிழ்நிலத்தில் இருந்த தொன்மையான நாட்டார் தெய்வமாக இருக்கலாம். சமணம் அத்தெய்வத்தை உள்ளிழுத்துக்கொண்டிருக்கலாம். அல்லது சமண சமயத்தின் காவல்தெய்வங்களில் ஒன்று தமிழக நாட்டார்மரபின் தெய்வ உருவகம் ஒன்றுடன் கலந்து இத்தொன்மம் உருவாகியிருக்கலாம். பழையனூர் நீலி கதைக்குச் சமானமான கதை கள்ளியங்காட்டு நீலி கதை என்னும் பெயரில் குமரிமாவட்டத்திலும் வழங்கப்படுகிறது.

உள்ளடக்கம்

குண்டலகேசி, நீலகேசி, அஞ்சனகேசி, காலகேசி போன்ற நூல்கள் தர்க்க நூல்களாகும். இந்திய மரபில் உபநிடத காலம் முதல் தர்க்கநூல்களை அமைப்பதற்கு ஒரு மரபு உள்ளது. புழக்கத்திலுள்ள ஒரு கதையின் நீட்சியாக ஒரு தர்க்கநூலை அமைப்பார்கள். நீலகேசியும் அவ்வாறே அமைந்தது.

நீலகேசி திருவாலங்காடு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊரில் வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரது அருளாற்றலால் நீலகேசியாகத் தோற்றம் கொண்டு, அவரிடமே, சமண ஆகமங்களைக் கற்று. நாடெங்கும் சென்று சமண அறத்தை நிலை நாட்ட உறுதி பூணுகிறாள். அவ்வாறே, பிற சமயத்தாரிடம் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள்.

சமண, பௌத்த சமயங்கள் மட்டுமன்றி ஆசீவகம், சாங்கியம், வைசேடிகம், வேத மதம், லோகாயதம் போன்ற மதங்களின் கொள்கைகளும் இந்த நூலின் வாதத்தில் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன.

நூல் அமைப்பு

நீலகேசியில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை: 894. இவை விருத்தப்பாக்களில் அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்து சருக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.

  • தரும உரைச் சருக்கம்
  • குண்டலகேசி வாதச் சருக்கம்
  • அருக்க சந்திர வாதச் சருக்கம்
  • மொக்கல வாதச் சருக்கம்
  • புத்தவாதச் சருக்கம்
  • ஆசீவக வாதச் சருக்கம்
  • சாங்கியவாதச் சருக்கம்
  • வைசேடிக வாதச் சருக்கம்
  • வேதவாதச் சருக்கம்
  • பூதவாதச் சருக்கம்

இலக்கிய இடம்

'நீலகேசியில் சமயவிளக்கம் இடம்பெற்ற அளவுக்கு இலக்கியச் சிறப்பு இடம்பெறவில்லை' என்று மு. வரதராசன் தன் தமிழிலக்கிய வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். மு.அருணாசலமும் காவியச்சுவை அற்ற சமயநூல் என்று இந்நூலை குறிப்பிடுகிறார். நீலகேசி பற்றிய பொதுவான இலக்கிய மதிப்பீடு இதுவே. ஆனால் அக்காலகட்ட தத்துவ விவாதங்களின் சித்திரத்தை நீலகேசி அளிக்கிறது. அதில் எதிர்தரப்பாகச் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைக் கொண்டு தமிழ்நாட்டில் நிலவிய மதக்கருத்துக்களையும், தத்துவக் கருத்துக்களையும் ஆய்வாளர் தொகுத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக சாங்கியம், வைசேஷிகம், ஆசீவகம், பூதவாதம் (பொருள்வாதம்) போன்ற தொன்மையான தத்துவக் கொள்கைகளையும் அறிய நீலகேசி மூலநூலாக உதவுகிறது. 'வடமொழிப் பயிற்சி இல்லாத தமிழர்கள் பல மத தத்துவங்களையும் தமிழ் மொழியில் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமய திவாகரமாக (சூரியனாக)த் திகழ்கிறது' என்று க.பூரணசந்திரன் கருதுகிறார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page