under review

நீலகேசி அம்மன்

From Tamil Wiki
நீலகேசி அம்மன், முடி
வெங்கானூர் நீலகேசி

நீலகேசி அம்மன் : கன்யாகுமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் வழிபடப்படும் ஒரு நாட்டார்த்தெய்வம். இத்தெய்வத்தின் பல வடிவங்கள் புழக்கத்திலுள்ளன. இத்தெய்வத்தின் ஒரு வடிவம் சமணச் சார்புடையது என ஊகிக்கப்படுகிறது.

பின்னணி

நீலகேசி தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. இது ஏழாம் நூற்றாண்டு அல்லது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமணக் காவியம். இந்தக் கதையில் கணவனால் கொல்லப்பட்ட ஒரு பெண் பேயாகி, சமணமுனிவர் ஒருவரால் நல்வழிப்படுத்தப்பட்டு, ஞானசபைகளில் மறுதரப்புகளை வென்று சமண மதத்தை நிலைநாட்டுகிறாள். இக்கதை பழையன்னூர் நீலி கதை, கள்ளியங்காட்டு நீலி கதை என்னும் பெயர்களில் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு நாட்டார்க்கதையை சமணம் எடுத்தாண்டிருக்கலாம். அல்லது சமணத் தெய்வம் ஒன்று தமிழ்நாட்டு நாட்டார்த்தெய்வமாக ஆகியிருக்கலாம். பார்க்க நீலகேசி காப்பியம்

நீலகேசி தொன்மங்கள்

வெங்கானூர் நீலகேசி அம்மன்
நீலகேசி அம்மன்

பழைய தெற்குதிருவிதாங்கூர், இன்றைய கன்யாகுமரி மாவட்டம் (தமிழ்நாடு) திருவனந்தபுரம் மாவட்டம் (கேரளம்) பகுதிகளில் நீலகேசி அம்மன் வழிபடப்படுகிறார். நீலகேசி அம்மன் ஆலயங்கள் எல்லாமே முடிப்புரை என்று வழங்கப்படுகின்றன. அம்மனின் முடி (தலையணி) மட்டுமே அங்கே தெய்வமாக வைத்து வழிபடப்படுகிறது.

நீலகேசி அம்மன் ஆலயங்களில் நீலகேசியாக வேடமிட்டு வந்து பெருவண்ணான், குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆடுகிறர்கள். தென்னங்குருத்தோலை மற்றும் கமுகுப்பாளையால் உருவாக்கப்பட்ட அணிகளும் ஆடைகளும் அணிந்து முகத்தில் வண்ணம்பூசி வந்து தீப்பந்தங்களுடன் ஆடும் நீலகேசி அம்மன் ஆட்டம் பழங்குடித்தன்மை கொண்டது.

திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்கானூர் நீலகேசி அம்மன் ஆலயம் புகழ்பெற்றது. கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயமும் புகழ்பெற்றது (பார்க்க இட்டகவேலி நீலகேசி அம்மன்)

நீலகேசி தெய்யம்

நீலகேசித் தெய்யம் என்னும் தொல்தெய்வம் கேரள நாட்டார் வழிபாட்டில் உள்ளது. மனிதர்கள் தெய்வ வேடமிட்டு வந்து ஆடும் தொன்மையான கலை தெய்யம் எனப்படுகிறது. எனவே நீலகேசி தொல்தமிழர் வழிபாட்டுத் தெய்வமாக கருதப்படுகிறது. கெந்த்ரோன் பாட்டு என்ற கர்ப்பபலி சடங்கில் நீலகேசி தெய்யம் ஆடப்படுகிறது. நெற்றியில் பனையோலையாலான சுட்டி, தலையில் தலைப்பாளி எனப்படும் கமுகுப்பாளையாலான விரிந்த கூர்ந்தல் அல்லது மணிமுடி போன்ற அமைப்பு, இடையில் தென்னையோலைக் குருத்தால் ஆன சுற்றும்கெட்டு, பட்டம், கொம்போலக்காது, முகத்தில் சிவப்புச்சாயம் ஆகியவை இந்த தெய்யத்தின் தோற்றம். வலக்கையில் ஒரு மணி இருக்கும். பொதுவாக சிறுவர்களே இந்த தெய்யத்தை கட்டுகிறார்கள். (விஷ்ணுநம்பூதிரி கேரள நாட்டாரியல் அகராதி)

நீலகேசிப்பாட்டு

நீலகேசிப்பாட்டு வடகேரளத்தில் தெய்யம் வேடமிடும் மலையன், பெருவண்ணான், வேலன் ஆகிய சாதிகளால் பாடப்படுவது. நீலகேசிப்பாட்டின் கதை. நீலகேசி என்னும் ஒரு பெண்பேய் மலைக்குறவன் ஒருவனை எரித்த சுடலையில் இருந்து தீ எடுத்துக்கொண்டு வந்து செஞ்சாவூர் என்னுமிடத்திலுள்ள மாமரத்தில் வைத்தாள். அவள் மாயத்தால் ஒரு முல்லைப்பள்ளி (முல்லைக்கொடியாலான ஆசிரமம்) கட்டினாள். அங்கே அவள் மாயச்சூதும் சதுரங்கமும் ஆடினாள். அவளுடன் சூதாட சென்று தோற்ற தரியரையன் என்பவனின் தலையை கொய்தாள். குடலை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டாள். அதே வடிவில் அவள் கைலாயம் சென்று தன் தந்தையாகிய சிவனை கண்டாள். நீராடிவரும்படி சிவன் சொன்னார். அவள் நீராடியதுமே தேவதையாக மாறினாள். அதன்பின் அவள் உலகத்துக்கு வந்து பல இடங்களில் கோயில்கொண்டு அருள் செய்தாள்.

இந்தக் கதைக்கு இருக்கும் புராணத்தொடர்புகளை ஆய்வாளர் விஷ்ணுநம்பூதிரி குறிப்பிடுகிறார். தரியரையன் என்ற பேரில் சுட்டப்படுவது தாரகாசுரன் (தாரிகாசுரன்) ஆக இருக்கலாம். தாருகவதம் செய்த கொற்றவை கதை இக்கதையில் இணைந்துள்ளது. பெண்பேய் ஒன்று தேவதையாக ஆன கதை சமண மதத்தின் நீலகேசி என்னும் தொன்மத்தின் சாயல்கொண்டது.

பையன்னூர் பாட்டு

பையன்னூர் பாட்டு எழுதியவர் எவரென தெரியாத ஒரு நாட்டார் காவியம். மலையாள இலக்கியங்களை சேகரித்தவரும், முதல் மலையாள அகராதியை உருவாக்கியவருமான டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் இக்கதையை சேகரித்துப் பதிவுசெய்தார். 103 செய்யுள் பகுதிகள் கொண்டது அது. ஒவ்வொரு பகுதியிலும் எட்டு அடிகள் உள்ளன. தொடக்கத்தில் அஞ்சடி என்ற பேரில் ஐந்து செய்யுட்கள் உள்ளன.

பையன்னூர் பாட்டின் கதை இது. நீலகேசி என்னும் பெண்மணி பிச்சை எடுத்து அலையும் துறவியாக எழிமலைக்கு அருகே உள்ள கச்சில் என்னும் நகருக்கு வந்தாள். நம்புசெட்டி என்னும் வணிகன் அவளை மணந்தான். அவர்களுக்கு நம்புசாரி அரன் என்னும் மகன் பிறந்தான். மகன் பிறந்ததில் மகிழ்ந்து நம்புசெட்டி பையன்னூர் என்னும் ஊரில் ஒரு விருந்தளிக்க அதை அறிந்த நீலகேசியின் உடன்பிறந்தவர்கள் அங்கே வந்தனர். அவர்களில் ஒருவன் ஆலய மதிலில் ஏறி அமர்ந்தான். அவனை நம்புசெட்டி பிரம்பாலடித்தமையால் பூசல் மூண்டது. நீலகேசியின் உடன்பிறந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். நீலகேசி மீண்டும் பிச்சையெடுக்கும் துறவியாக ஆனாள். நம்புசெட்டியின் மகன் கப்பல் வணிகனாக ஆனான். நீண்டகாலம் கழித்து நீலகேசி திரும்பி வந்தாள். அவள் தனக்கு ஒரு விருந்து அளிக்கும்படி கோரினாள். மகன் அவ்விருந்துக்குச் செல்ல ஒப்புக்கொண்டான். அவ்வளவுதான் இக்காவியத்தில் இன்று கிடைக்கும் கதை.

இக்கதைக்கும் பிற நீலகேசி கதைகளுக்கும் தொடர்பில்லை என்று விஷ்ணுநம்பூதிரி கருதுகிறார். ஆனால் இந்தக் கதைகளிலெல்லாம் நீலகேசி பிக்குணியாகச் சொல்லப்படுவது கருத்தில்கொள்ளத்தக்கது.

பழையன்னூர் நீலி கதை

பழையன்னூர் நீலி கதை நீலகேசி காவியத்தில் வரும் கதைக்கு அணுக்கமானது ( பார்க்க பழையன்னூர் நீலி கதை)

கள்ளியங்காட்டு நீலி கதை

கள்ளியங்காட்டு நீலி கதையும் நீலகேசி காப்பியத்தில் வரும் கதையும் ஏறத்தாழ ஒன்றே ( பார்க்க கள்ளியங்காட்டு நீலி கதை)

பஞ்சவன்காட்டு நீலி கதை

குமரிமாவட்டத்தில் புழக்கத்திலுள்ள பஞ்சவன்காட்டு நீலி கதையும் நீலகேசி காப்பியத்தின் கதைக்கு அணுக்கமானது (பார்க்க பஞ்சவன்காட்டு நீலி கதை)

நீலி

நீலகேசி என்னும் பெயரே பின்னர் நீலி என்று சுருங்கியிருப்பது நீலகேசி கதைகள் நீலி கதை என அறியப்படுவதில் இருந்து தெரியவருகிறது. பஞ்சவன்காட்டு நீலி, கள்ளியங்காட்டு நீலி ஆகிய தெய்வங்களின் கதைகள் நீலிப்பாட்டு என்னும் கதைப்பாடலாக வில்லுப்பாட்டு வடிவில் பாடப்படுகின்றன. நீலியாட்டம் என்னும் பெயருடன் இக்கதைகளுடன் இணைந்து தலையில் குடங்களுடன் ஆடும் வழக்கமும் உண்டு.

உசாத்துணை

நீலகேசி தெய்யம் காணொளி


✅Finalised Page