under review

அபிராமி அந்தாதி

From Tamil Wiki
திருக்கடையூர் அபிராமியம்மை நன்றி:மாலைமலர்

அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மையின்மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த பக்தி இலக்கியம். பக்திச்சுவையும் கருத்தாழமும் கொண்டது. இதன் பாடல்கள் தமிழ்நாட்டில் பரவலாக பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருபவை.

ஆசிரியர்

அபிராமி அந்தாதியை இயற்றியவர் அபிராமி பட்டர்(1675–1728). இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தில் திருக்கடையூரில் வாழ்ந்தவர். அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மனமுருகி சக்தி வழிபாட்டில் மூழ்கி பித்தனைப் போல் தோற்றமளித்தவர். சரபோஜி மன்னரிடம் தை அமாவாசை தினத்தன்று அன்றைய திதி பௌர்ணமி எனக் கூறினார். அவரது சொல்லை மெய்ப்பிக்க அபிராமியம்மை தன் காதணியை வானில் வீசி முழு நிலவு தோன்றச் செய்தாள் எனத் தொன்மக்கதை கூறுகிறது. நூறு கயிறுகளால் கட்டப்பட்ட அரிகண்டம் ஏறி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டே வர 79-ஆவது பாடலில் அன்னை நிலவைத் தோன்றச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

பார்க்க: அபிராமி பட்டர்.

நூல் அமைப்பு

அபிராமி அந்தாதி 100 பாடல்களில் அந்தாதித் தொடையில் அமைந்தது. விநாயகப் பெருமானுக்கான காப்புச் செய்யுளுக்குப்பின் 'உதிக்கின்ற செங்கதிர்' எனத் தொடங்கி 'நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' என்று நூறாவது பாடல் முடிகிறது. 'விழிக்கே அருளுண்டு' என்ற 79-ம் பாடலில் வானில் நிலவு தோன்றியதாக தொன்மக்கதை கூறுகிறது.

திரிபுரசுந்தரியாய், பராசக்தியாய் அபிராமி அம்மையை வழிபட்ட தன்மை பாடல்களின் மூலம் அறிய வருகிறது. மேல் இரண்டு கைகளில் வலது இடமாய் பாசம் அங்குசம் தரித்து, கீழ் இரண்டு கைகளில் வலம் இடமாய் கரும்பு வில்லையும் மலர் கணையையும் தரித்து, சிவபெருமானுடன் திகழ்பவளாக , அனைத்தையும் கடந்த பரம்பொருளாக அன்னையின் தன்மை கூறப்படுகிறது. சிவனும், சக்தியும் சொல்லும், பொருளும் போல பிரிக்க முடியாத, ஒன்றையொன்று நிரப்பும் தெய்வங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. ஒன்றாக, பலவாக உருவம் கொண்டாலும், அவை கடந்த அருவ வடிவமாகவும், ஐம்பூதங்களாக இருந்தாலும் அவற்றுக்கு அப்பாலுள்ள சக்தியாகவும் இருக்கும் பராசக்தியின் தன்மை கூறப்படுகிறது.

தில்லை, சீர்காழி, திருவெண்காடு, காஞ்சி, மதுரை ஆகிய திருத்தலங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. அம்மை திருஞான சம்பந்தருக்குப் பாலூட்டியதும், காஞ்சியில் ஈசனைக் குழையத் தழுவியதும், இருநாழி நெல் கொண்டு அறம் வளர்த்ததும், மதுரையில் கடம்ப வனத்தில் எழுந்தருளியிருப்பதும் என பல புராணக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

திருவுருவத் தியானத்தோடு அபிராமி அன்னையின் நாமங்கள் பல வகைகளில் கூறப்பட்டுள்ளன: 'அண்டமெல்லாம் பூத்தவள்', 'அணிக்கு அழகு', 'அம்புயாதனத்தம்பிகை', 'சகலகலா மயில்', 'ஒளிநின்ற கோலங்கள் ஒன்பதும் உறைபவள்', 'ஞாலமெலாம் பெற்ற நாயகி', 'பூதங்களாகி நிறைந்த அம்மை', 'புவனம் பதினான்கையும் பூத்தவள்', 'மாத்தவள்', 'பாலினும் சொல் இனியாள்', 'கறைகண்டனுக்கு மூத்தவள்' , 'இசை வடிவாய் நின்ற நாயகி', மற்றும் பல.

அன்னையிடம் பிறவாமையையும், உலக இன்பங்களை நினையாமையையும், அவளன்றி வேறொன்றையும் நினையாமையையும் வரங்களாகக் கேட்கிறார்.

சிறப்புகள்

அபிராமி அந்தாதி பக்திச் சுவையும், உருக்கமும், கருத்துச் செறிவும் நிறைந்த பக்தி இலக்கியம். இயற்றப்பட்ட காலம் முதல் பரவலாக ஓதப்பட்டும், பாடப்பட்டும் வருகிறது. ஶ்ரீவித்யை வழிபாட்டைப் பற்றிய குறிப்புகளும் விரவி வருவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் போன்ற சாக்த நூல்களிலும் அபிராமி அந்தாதியிலும் ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன.

மொழிவதுன் செப முத்திரை பாணியின்
முயல்வதெங்கு நடப்பன கோயில்சூழ்
தொழிலருந்துவது முற்றுமுன் ஆகுதி
துயில்வணங்கல் களிப்பன யாவுநீ
யொழிவருங்களி என்செயல் யாவையு
முனது நன்செய் பரிச்செயலாகவே
யழிவரும் பதம் வைத்தருள் பேரொளி
யளிவிளைந்து களிப்பெரு நாதமே
       (சௌந்தர்ய லகரி 28, தமிழில் கவிராச பண்டிதர்)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
( அபிராமி அந்தாதி, 10)

பாடல் நடை

மணியே, பிணிக்கு மருந்தே

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதில் உறைபவளே

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

நான் அறிவது ஒன்றும் இல்லை

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

உசாத்துணை


✅Finalised Page