under review

அபிராமிபட்டர்

From Tamil Wiki

அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்; பொ.யு. 19-ம் நூற்றாண்டு) சரபோஜி மன்னரின் காலத்தில் வாழ்ந்த புலவர். சாக்த வழிபாட்டாளர். அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் ஆகியவற்றை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் நன்றி: தினமலர்

அபிராமி பட்டரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தஞ்சைக்கருகில் உள்ள திருக்கடையூரில் 19-ம் நூற்றாண்டில் அமிர்தலிங்க ஐயரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பம் தலைமுறைகளாக தேவி உபாசனையிலும், இசையிலும் ஈடுபட்டு வந்தது. அபிராமி பட்டர் தமிழும், சமஸ்கிருதமும், இசையும் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றார். திருக்கடையூரில் கோவில் கொண்ட அபிராமி அம்மையின் மேல் பக்தி கொண்டு சாக்த யோக (ஶ்ரீவித்யா) முறைப்படி வழிபாடு செய்துவந்தார்.

பின்னாட்களில் அபிராமி அந்தாதி இயற்றப்பட்டபின் சரபோஜி மன்னர் சில கிராமங்களில் வேலி ஒன்றிற்கு எட்டு கலம் நெல் அவரது குடும்பத்திற்கு மானியமாக வழங்கிய செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இன்றும் அபிராமி பட்டரின் வழி வந்தவர்கள் நெல்லைப் பெற்று அபிராமி அம்மைக்கு ஆராதனையும், அன்னதானங்களும் செய்து வருகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் உள்ளிட்ட சில பக்தி இலக்கிய நூல்களை இயற்றினார். அபிராமி அந்தாதி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் முதலாக அமையும் அந்தாதியாக அமைந்த நூல். அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் பரவலாக ஓதப்பட்டும், பாடப்பட்டும் வருகின்றன.

அபிராமி அந்தாதி இயற்றியது பற்றிய தொன்மக் கதை
திருக்கடையூர் அபிராமி அம்மை, அபிராமி பட்டர் சன்னதிகள்

அபிராமி பட்டரை தேவி உபாசனையிலும் பக்தியிலும் தியானத்திலும் ஈடுபட்டு தன்னிலை மறந்த நிலையில் கண்ட மக்கள் அவரைப் பித்துப் பிடித்தவராகவும், தீயதேவதைகளை வழிபடுபவராகவும் கருதினர். தை மாதக் கருநிலவு(அமாவாசை) அபிராமியை வழிபட வந்த சரபோஜி மன்னர் தன் வருகையை அறியாமல் தியானத்தில் மூழ்கியிருந்தவரைப் பற்றிக் கேட்டறிந்தார். அவரைச் சோதிக்க வேண்டி 'இன்று என்ன திதி' என்று கேட்டபோது வழிபாட்டில் மூழ்கியிருந்த பட்டர் 'இன்று பௌர்ணமி' என்று பதில் சொன்னார்.

அபிராமி பட்டர் வாய் தவறி பக்தி மயக்கத்தில் திதியை மாற்றிக் கூறியதற்காக மனம் வருந்தி அம்பிகையின் ஆலயத்தில் அரிகண்டம் ஏறினார். அன்னை தனக்கு ஏற்பட்ட பழியை மாற்றாவிடில் தீயில் விழுந்து உயிர்விடுவதாக உறுதி கொண்டு தரையில் தீமூட்டி, அதற்கு மேலே விட்டத்தில் நூறு கயிறுகளால் கட்டப்பட்ட உரியில் அமர்ந்து பாடல்கள் பாடி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக் கொண்டு வந்தார். 'உதிக்கின்ற செங்கதிர் ' எனத் தொடங்கி அந்தாதியாகப் பாடல்கள் பாடினார். 'விழிக்கே அருளுண்டு' எனத் தொடங்கும் 79-ஆவது பாடல் பாடியதும் வானில் முழுநிலவு தோன்றியது. அபிராமி பட்டர் மேலும் 21 பாடல்களைப் பாடி 100 பாடல்களுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். சரபோஜி மன்னர் அபிராமி பட்டருக்கு மானியங்கள் வழங்கினார்.

அபிராமி அன்னை தன் தொண்டனின் பக்தியை உணர்த்த மன்னரின் கனவில் தோன்றி, தன் காதணியைக் கழற்றி வானில் வீசியதாகவும், அது நிலவாக ஒளிர்ந்ததை மன்னர் கண்டு, பட்டரின் பக்தியை உணர்ந்து நூறு பாடல்களால் அபராமி அன்னையைப் பாடும்படி கேட்டுக்கொண்டதாகவும் சிலரால் கூறப்படுகிறது. கி.வா. ஜகன்னாதன் அபிராமி அந்தாதி விளக்கவுரையில் இதையே குறிப்பிடுகிறார்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமவாசை அன்று அபிராமி பட்டர் விழா நடைபெறுகிறது.

சிறப்புகள்

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி எளிய ஆற்றொழுக்கான நடையில் பக்திச் சுவையுடனும் உருக்கத்துடனும் அமைந்தது. சக்தியின் திருவுருவத்தையும், அருளும் தன்மையையும், ஒன்றாய், பலவாய், உருவாய், அருவாய் விளங்கும் தன்மையும், பட்டரின் இறையனுபவமும் கூறப்படுகின்றன. அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் பரவலாக ஓதப்பட்டும், பாடப்பட்டும் வருகின்றன. அபிராமி அந்தாதியின் சில பாடல்கள் சௌந்தர்ய லஹரியின் பாடல்களுக்கு ஒத்த பொருளில் உள்ளன.

பாடல் நடை

அபிராமி அந்தாதி

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

அபிராமியம்மை பதிகம்

கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!

படைப்புகள்

  • அபிராமி அந்தாதி
  • அபிராமியம்மை பதிகம்
  • கள்ள விநாயகப் பதிகம்
  • அமுதகடேசர் பதிகம்
  • கால சங்காரமுர்ர்த்தி பதிகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Aug-2023, 13:14:44 IST