under review

அற்புதத் திருவந்தாதி

From Tamil Wiki

To read the article in English: Arputha Thiruvandhadhi. ‎

அற்புதத் திருவந்தாதி
அற்புதத் திருவந்தாதி

அற்புதத் திருவந்தாதி என்னும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் உள்ள ஒரு பக்தி இலக்கிய நூல். இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப் பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது.

நூல் அமைப்பு

அற்புதத் திருவந்தாதி அந்தாதி முறையில் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு. இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது.

உள்ளடக்கம்

இவ்வந்தாதி சைவ நெறியைப் பற்றியும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைப் பற்றியும் கூறுகிறது. சிவபெருமானின் திரு உருவச் சிறப்பு, திருவருள் சிறப்பு, இறைவனின் குணம் ஆகியவற்றை விரிவாக இந்நூல் பேசுகிறது.

இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் அமைந்திருக்கின்றன. அம்மையார் இறைவனை ’நீ எனக்கு உதவி செய்யலாகாதா’ என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள்ளன. ’இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை’ என்று மகிழ்ச்சியடையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு தூற்றுவது போலும் போற்றும் பாக்களும் (நிந்தா ஸ்துதிகளும்) இடம்பெற்றுள்ளன.

சில பாடல்கள்:

பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்பது இடர். (1)
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனும் -சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்
கன்பறா தென்னெஞ்சு அவர்க்கு. (2)
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள் (3)

உசாத்துணை


✅Finalised Page