under review

தமிழ் விடு தூது

From Tamil Wiki
தமிழ் விடு தூது (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பு, 1964)

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது) மதுரையில் சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துயரைக் கூறி தமிழ்மொழியைத் தூது அனுப்புவதை விவரிக்கும் நூலாகும்.

இந்த நூலின் ஆசிரியர் மற்றும் காலம் பற்றி அறிய முடியவில்லை.

பதிப்புகள்

1930-ல்உ.வே.சாமிநாதையர் தமிழ் விடு தூது நூலை பதிப்பித்தார். தனது முன்னுரையில் "1900-ம் ஆண்டு கும்பகோணத்தில் அன்பர் ஒருவர் கொடுத்த பழந்தமிழ் ஏடுகளின் அடியில் இந்நூல் காணப்பட்டது. அந்தச் சுவடியை படித்துப் பார்த்து அதன் நயத்தை அறிந்து எழுதுவித்தேன். அப்பால், வேறு பிரதிகள் எங்கேனும் கிடைக்குமா என்று பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் இதனையே குறிப்புரையுடன் பதிப்பித்தேன்" என்று குறிப்பிடுகிறார்.

1964-ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தி. சங்குப் புலவர் விளக்கவுரையுடன் பதிப்பு வெளியிட்டது.

அமைப்பு

தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தலைவன் மீது அன்பு கொண்ட தலைவி ஒருத்தி, தலைவனிடம் தூது அனுப்பி மாலை வாங்கி வருமாறு அன்னம் முதலிய 10 பொருள்களில் ஏதேனும் ஒன்றினை தூது அனுப்புவது தூது இலக்கியம் ஆகும். இவ்விலக்கியம் கலி வெண்பாவால் பாடப்படும். தமிழ் விடு தூது நூலில் தூது பெறுபவர் சோமசுந்தரக் கடவுள். தூது விடுபவர் ஒரு பெண். தூதாக அனுப்பப்படுவது தமிழ்மொழி. இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலை கண்ணி. அதே போல் இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி ஆகும். தமிழ் விடு தூது நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.

முக்கிய பொருண்மைகள்

தமிழ் விடு தூது நூலில் இடம் பெரும் முக்கிய பொருண்மைகள்:

  • தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.
  • பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமல் தமிழை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை கூறுதல்.
  • தூது பெறும் தலைவன் சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.
  • தலைவி தன் துயரைக் கூறுதல்.
  • தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்.
தமிழ் மொழியின் பெருமைகள்
  • எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல்நிலை, இடைநிலை, ஈற்றுநிலை, போலி, பதம், புணர்ச்சி என்ற 12 பருவங்களை உடையது
  • அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பாலும் உடையது
  • பிள்ளைத் தமிழ் நூலுக்குரிய பத்துப் பருவங்களை கொண்டது
  • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய செய்யுள் ஈட்டச்சொற்கள் நான்கும்; பெயர், வினை, இடை, உரி ஆகிய செந்தமிழ்ச் சொற்கள் நான்கும்; அகத்திணைகள் ஏழும்; புறத்திணைகள் ஏழும்; எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் என்ற எட்டும்; அணிகள் முப்பத்தைந்தும் கொண்ட மிக்க அழகுடையதாய் உள்ளது.
  • செப்பல் பண், அகவல் பண், துள்ளல் பண், தூங்கல் பண் ஆகிய பண்கள் உள்ளன.
  • ஐந்து வகை இசைக் கருவிகள் வெளியிடும் 103 பண்கள் உள்ளன.
  • வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் ஆகிய ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளது.
  • பெரும் காப்பிய இலக்கியத்திற்குரிய 18 வர்ணனைகளைக் கொண்டுள்ளது.
  • தமிழ்மொழி தன் எல்லையாக மேல் கடல், கீழ்க்கடல், குமரி ஆறு, திருவேங்கடம் ஆகியவற்றைக் கொண்டது போன்றவற்றோடு இன்னும் பலவும் தமிழ்மொழியின் சிறப்புகளாக இந்நூலில் கூறப்படுகின்றன.
இறைவனைப் பற்றி
  • திரு ஆலவாய் என்ற இடத்தில் இருக்கும் செல்வர்
  • தேவியாகிய உமை அம்மையின் ஓர் பாகத்தில் தழைத்து மகிழ்ந்தவர்
  • எட்டுத் தெய்வ யானைகள் சுமக்கும் விமானத்தைக் கொண்ட கோயிலில் எழுந்தருளியுள்ளவர்
  • இந்திரன் வந்து வணங்கும்படி கடம்ப வனத்தில் வாழ்பவன் என இறைவனை பற்றி கூறுவதுடன் திருவிளையாடல் புராணம் கூறும் பல நிகழ்ச்சிகளும் இந்தூலில் கூறப்படுகின்றன.
தூது உரைக்கும் முறைமை

மதுரைக்கு செல்லும் வழிகளைக் கூறி இறைவன் இருக்கும் கோவிலைச் சென்றடைந்தவுடன் தூது உரைக்கும் முறைமையை தமிழ்மொழியிடம் தலைவி கூறும் நயமான பாடல்:

காலைத்திருஅனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து
உருஅனந்த தேவர் உடனே - மருவிஎதிர்
போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்அனுப்பித்
தோற்றரவு செய்து துதித்ததன்பின் - ஆற்றல்
அரிய சிவாகமத்தோர் ஆதிசைவர் தம்பால்
உரிய படையா ஒதுங்கி - அருமையுடன்
மூவர் கவியே முதல்ஆம் கவிஐந்தும்
மூவர்ஆய் நின்றார்தம் முன்ஓதி
(கண்ணி: 243-248)

"காலையில் பள்ளி எழுச்சியில் இறைவனின் முன் அழகு உடைய தேவர்கள் வணங்குவர். அவர்களுடன் சேர்ந்து நீயும் போற்றி வணங்க வேண்டும். வேத ஆகமங்களை ஓதுவோரை முன்னே அனுப்பிப் பின் நீ தோன்றி வணங்க வேண்டும். அரிய ஆற்றல் உடைய ஆதி சைவர்களிடம் உரிய பொருட்களைச் சேர்ப்பிக்க வேண்டும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரங்களையும், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து கவிகளையும் பாட வேண்டும். பின் செய்தியைக் கூறவேண்டும்" என தமிழ்மொழியிடம் தலைவி உரைக்கிறாள்.

உசாத்துணை


✅Finalised Page