நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- மீனாட்சிசுந்தரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மீனாட்சிசுந்தரம் (பெயர் பட்டியல்)
நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (செப்டெம்பர் 3, 1894- பிப்ரவரி 12, 1949) தவில் இசைக் கலைஞர். முதன்முதலில் தனித்தவில் வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்திய முன்னோடி.
இளமை, கல்வி
மீனாட்சிசுந்தரம் பிள்ளை நீடாமங்கலத்தில் வாழ்ந்த தெய்வானை அம்மாளின் ஒரே மகனாக செப்டெம்பர் 3, 1894 அன்று பிறந்தார்.
திருக்கொல்லம்புதூர் செளந்தரம் அம்மாளுக்கு நான்கு மகன்கள். மூன்று மகள்கள். கோவிந்த பிள்ளை, சிங்கார பிள்ளை, பழனிவேல் பிள்ளை ஆகிய மூவரும் தவில் வித்துவான்கள். ஒரு மகன் கிருஷ்ணபிள்ளை வைர வியாபாரி. மூன்று மகள்களில் தேவயாணி அம்மாள் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தாய். பிறந்த இருபத்தி ஏழு நாட்களில் தாயை இழந்தார். தாயின் தங்கையான கமலாத்தம்மாளிடம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வளர்ந்தார்.
தனிவாழ்க்கை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில்கலைஞர் பசுபதிகோவில் வீரபத்திர பிள்ளையின் மகள்கள் நாகம்மாள் மற்றும் ராஜம்மாளை பிப்ரவரி 10, 1913இல் மணந்துகொண்டார்.
மூத்த மனைவி நாகம்மாள் மூலம் பெற்ற பிள்ளைகள்:
- சௌந்தரவல்லி (கணவர்: நாதஸ்வர வித்வான் சூரியனார்கோவில் நாராயணஸ்வாமி பிள்ளை)
- மங்களாம்பாள் (கணவர்: திருப்பனந்தாள் தங்கப்பா பிள்ளை)
- ஜயலக்ஷ்மி
- தெய்வயானை (கணவர்: நீடாமங்கலம் வேங்கடராம பிள்ளை)
- வேம்பு (கணவர்: நாதஸ்வர வித்வான் திருவீழிமிழலை கோவிந்தராஜ பிள்ளை)
- ஷண்முக வடிவேல் (நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல்)
இளைய மனைவி ராஜம்மாள் வாரிசு:
- ஜயலக்ஷ்மி அம்மாள் (கணவர்: தவில்கலைஞர் நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை)
நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலாம்பாள் வழியாகப் பிறந்த வாரிசு:
இசை வாழ்க்கை
நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாமா சிங்காரம் பிள்ளையிடம் ஐந்து வயது முதல் தவில் கற்றார். சொல்லிக் கொடுத்ததும் கற்றுக் கொள்பவராகவும், நல்ல நினைவாற்றலுடனும் இருந்தார். இன்னொரு மாமா கோவிந்த பிள்ளையிடமும் தவில் கற்றார். ஒன்பது வயதில் உள்ளூர் கச்சேரிகளில் தவில் வாசித்தார். மன்னார்குடி நாராயணசாமி பிள்ளை குழுவில் சேர்ந்து தவில் வாசித்தார்.
1906இல் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை தன் குழுவுக்காக தவில் வாசிப்பவரை தேடிக் கொண்டிருந்தபோது செளந்தர ராஜபிள்ளை, அதிச்சம் ஜெகந்நாத பிள்ளை ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை சேர்த்துக் கொண்டார். பன்னிரெண்டு வயதான மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் தவிலை கழுத்தில் சுமந்து கொண்டு தன் வீட்டிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த மன்னார்குடிக்கு நடந்தே தன்னிடம் வந்ததைக் கண்ட வேணுகோபால் பிள்ளை அவரை உடனே தன் குழுவில் சேர்த்துக் கொண்டார். வேணுகோபால் பிள்ளை ஜதி, லய நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். தன் இறுதிக்காலம் வரை வேணுகோபால் பிள்ளை மீது அளவற்ற குருபக்தி கொண்டிருந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
வேணுகோபால் பிள்ளைக்குக் கச்சேரி இல்லாத சமயங்களில் அனுமதி பெற்று மன்னார்குடி சின்னப்பக்கிரி நாதஸ்வரக் கலைஞருக்குத் தவில் வாசித்தார். வேணுகோபால் பிள்ளை தன் இறுதி நாட்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையிடம் தன் சிறந்த சீடனை ஒப்படைத்துச் சென்றார். அவரிடம் ஒன்றரை ஆண்டுகள் வாசித்த பின், பல கலைஞர்களிடம் தவில் கலைஞராக இருந்திருக்கிறார். வளரும் பருவத்தில் ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தபிள்ளை, வழிவூர் முத்துவீர பிள்ளை, அம்பகரட்டூர் மலைப்பெருமாள் பிள்ளை, அம்மாபேட்டை பக்கிரி பிள்ளை ஆகிய வித்துவான்களிடம் கற்றார்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருவீழிமிழலை சகோதரர்கள் குழுவில் முக்கிய கலைஞராக மூன்றாவது நாதஸ்வரம் எனப் புகழ்பெறும் அளவுக்கு ஒருங்கிணைவோடு முப்பது ஆண்டுகள் வாசித்து வந்தார். ஒரு சமயம் மனவேற்றுமை எழுந்து அக்குழுவில் இருந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை விலக நேரிட்டது. அதன் பின்னர் எந்த நாதஸ்வரக் குழுவிலும் நிரந்தரக் கலைஞராக இருக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார்.
தன் வாசிப்பு வேண்டும் என்பவர்கள் தன்னைத் தனியாக ஏற்பாடு செய்து கொள்ளலாமென்று அதன்படியே பலருக்கும் வாசிக்கத் தொடங்கினார். இவ்விதம் ஒரு குழுவைச் சார்ந்த கலைஞராக அல்லாமல், 'தனித்தவில்' என்றழைக்கப்படும் இம்முறை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
உடன் வாசித்த கலைஞர்கள்
நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை
- செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை
- நாகூர் சுப்பய்யா பிள்ளை
- உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
- திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளை
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
- திருச்சேறை வெங்கடராம பிள்ளை
- மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை
- ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை
- தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை
- திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை
- திருத்துறைப்பூண்டி சொக்கலிங்கம் பிள்ளை
- கீரனூர் சகோதரர்கள்
- திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
- ஆண்டாங்கோவில் கருப்பையா பிள்ளை
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
- திருவாவடுதுறை 'கக்காயி' நடராஜசுந்தரம் பிள்ளை
மாணவர்கள்
பிரபலமான சில மாணவர்கள்:
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
- கூறைநாடு கோவிந்தராஜ பிள்ளை
- திருநாகேஸ்வரம் ரத்தினஸ்வாமி பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை
- ஈமனி ராகவையா
- திருவிழந்தூர் வேணுகோபால பிள்ளை
- கரந்தை ஷண்முகம் பிள்ளை
- கண்டியூர் முத்தையா பிள்ளை
- மிருதங்கவித்வான் கோயம்புத்தூர் ராமஸ்வாமிப் பிள்ளை
- கடவித்வான் ஆலங்குடி ராமச்சந்திரன்
விருதுகள்
- தாலப்பிரவீனா
- தவில் அரசு
- அபினவ நந்தீஸ்வர்
- பாதவஹத்யப்பிரவீன்
- மைசூர் அரண்மனையிலிருந்து டஹ்ங்கத் தோடா பரிசாகப் பெற்றார்.
- எம்பெருமானர் செட்டியாரின் பேரன் சுதுருர் செட்டியாரிடமிருந்து பல பரிசுகள் பெற்றார்.
மதிப்பீடு
"மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் பற்றி மட்டும் பேசினால் போதும்; தவில் வாத்தியத்தின் முழு சரித்திரத்தையும் பேசியதாகும்" என்று ஸர்.சி.பி. ராமஸ்வாமி ஐயர் இவரைப் பாராட்டினார்.
நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நாதஸ்வரக் கலைஞர்களான திருவீழிமலை சகோதரர்களுடன் தவில் வாசிக்கையில் இசை ரசிகர்கள் அவரின் தவிலை மூன்றாவது நாதஸ்வரம் என்று புகழ்ந்தனர்.
மறைவு
தன் மூத்த மகள் சௌந்தரவல்லியம்மாளின் மகளைத் தனது மூத்த மகன் ஷண்முகவடிவேலுவுக்குத் திருமணம் செய்வித்து, அடுத்த நாள் (பிப்ரவரி 12, 1949) அன்று அதிகாலை மூன்று மணிக்கு நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உறக்கத்திலேயே காலமானார்.
இதர இணைப்புகள்
- புகழ்சால் தவிற் கலைஞர்கள்- தமிழ் இணைய பல்கலைக்கழகம்
- Needamangalam Meenakshisundaram Pillai - Sruti Magazine
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
- தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
- Needamangalam Meenakshisundaram Pillai - oldsruti
அடிக்குறிப்புகள்
- ↑ மங்கல இசை மன்னர்கள் நூல் ஆசிரியர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 01:05:46 IST
