under review

நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல்

From Tamil Wiki

நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல் (நீடாமங்கலம் தம்பி) (ஜனவரி 26, 1929- 1963) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

புகழ்பெற்ற தவில் கலைஞர் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை - நாகம்மையார் (முதல் மனைவி) இணையருக்கு ஒரே மகனாக 1929-ல் ஷண்முக வடிவேல் பிறந்தார்.

தந்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவிற்கலையை மகனுக்கு பயிற்றுவிக்க வேண்டாமென எண்ணி பள்ளியில் சேர்த்தார். ஆனால் ஷண்முக வடிவேலுக்கு பள்ளிக்கல்வியில் நாட்டமில்லை. இனிய குரல் வளம் கொண்டிருந்த ஷண்முக வடிவேல் பாடுவதும் வீட்டிலிருந்த வேறு தவிலை வைத்துக்கொண்டு எந்நேரமும் வாசிப்பதுமாக இருந்தார். இவ்விதமாக ஷண்முக வடிவேல் தவிற்கலையை குருவழியாகக் கற்கவில்லை.

தனிவாழ்க்கை

ஷண்முக வடிவேலுக்கு மூத்த சகோதரிகள் ஐவர் - சௌந்தரவல்லி, மங்களாம்பாள், ஜயலக்ஷ்மி, தெய்வயானை, வேம்பு.

மூத்த சகோதரி சௌந்தரவல்லியின் மகள் ரேணுகுஜாம்பாளை ஷண்முக வடிவேல் பிப்ரவரி 13, 1949 அன்று திருமணம் செய்தார்.

இசைப்பணி

மகனது தவில் கலை மீதான தீராத ஆர்வத்தைக் கண்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை தன்னுடன் திருவீழிமிழலை சகோதரர்களுக்கு உடன் வாசிக்க அழைத்துச் சென்றார். பின்னர் தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை, செம்பொன்னார்கோவில் சகோதரர்கள் ஆகியோரது நிகழ்ச்சிகளிலும் ஷண்முக வடிவேல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் தவில் வாசிக்கத் துவங்கினார்.

தந்தையின் மறைவுக்குப் பின் ஷண்முக வடிவேலின் வாசிப்பு மிகவும் சிறப்படைந்தது. அனைத்துக் கலைஞர்களாலும் 'தம்பி’ என்றே அழைக்கப்பட்டார்.

ஷண்முக வடிவேல் சில இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் மற்றும் கஞ்சிராவும் வாசித்திருக்கிறார். சென்னை தமிழிசைச் சங்க விழாவில் காருகுறிச்சி அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்க ஷண்முக வடிவேலுவும் யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்தியும் தவில் வாசித்த நிகழ்ச்சியை வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு வரை வானொலி நிலையம் ஒலிபரப்பியது.

உடன் வாசித்த கலைஞர்கள்

நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல் கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

மதுப் பழக்கத்தால் உடல்நலம் குன்றிய நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல் ஜனவரி 26, 1963 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page