under review

கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை

From Tamil Wiki
கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை

கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை (ஏப்ரல் 17, 1932 - 1987) நாதஸ்வரக் கலைஞர்.

பிறப்பு, கல்வி

புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையின் மகன் நடராஜசுந்தரம் பிள்ளைக்கும் காமாக்ஷி அம்மாளுக்கும் மகனாக ஏப்ரல் 17, 1932 அன்று ராஜரத்தினம் பிள்ளை பிறந்தார். வேணுகோபால் பிள்ளையின் மறைவுக்குப் பின் அவரது மைத்துனர் கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை அக்குடும்பத்தை பராமரித்து வந்தார்.

ராஜரத்தினம் பிள்ளைக்கு ஐந்து வயதில் கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளை வாய்ப்பாட்டு கற்பித்தார். மூன்று ஆண்டுகளுக்கு பின் நாதஸ்வரமும் கற்பித்தார். பின்னர் ராஜரத்தினம் பிள்ளையைத் தன் சீடர் திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளையிடம் மேற்பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

தனிவாழ்க்கை

ராஜரத்தினம் பிள்ளைக்கு வீராஸ்வாமி என்ற தம்பியும் முல்லையம்பாள் (கணவர்: கும்பகோணம் நவநீதம் பிள்ளை), இந்திரா (கணவர்-தாய்மாமன்- தாராசுரம் நாராயணஸ்வாமி பிள்ளை - நாதஸ்வரம்) என்ற இரு தங்கைகளும் இருந்தனர். கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையின் தங்கையும் மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையின் மனைவியும் ஆகிய தேனாம்பாள் சின்னப்பக்கிரிப் பிள்ளையின் மறைவுக்குப் பின் தன் சகோதரர் சௌந்தரராஜ பிள்ளை வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். அவர் தன் இறுதிக்காலத்தில் ராஜரத்தினம் பிள்ளையை தத்து எடுத்துக்கொண்டு தன் சொத்து முழுவதையும் அவருக்குக் கொடுத்தார். கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையின் மாணவர் ஜகந்நாத பிள்ளை என்பவரின் மகள் சிவகடாட்சத்தை ராஜரத்தினம் பிள்ளை மணந்தார். சில் காலத்தில் அப்பெண் மறைந்தார். பின்னர் நாதஸ்வரக் கலைஞர் ரங்கநாத பிள்ளையின் மகள் ராஜகுமாரியை மணந்தார். இவர்களுக்கு சௌந்தரராஜன் (தவில்), வேணுகோபாலன், விசாலாக்ஷி, லக்ஷ்மி, வெங்கடேசன் ஆகியோர் பிறந்தனர்.

இசைப்பணி

திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையிடம் இரண்டாவது நாதஸ்வரக்காரராக ராஜரத்தினம் பல கச்சேரிகள் செய்தார். பின்னர் திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளையுடம் சில ஆண்டுகள் இணைந்து வாசித்து அங்கும் குருகுலவாசம் போல ராஜரத்தினம் பிள்ளை கற்றுக் கொண்டார். திருவிடைமருதூரில் இருந்து கோட்டூர் வந்த பிறகு தனது தந்தையுடனும் திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை, திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை ஆகியோருடன் கச்சேரிகளில் வாசித்து வந்தார். பதினான்கு ஆண்டுகள் கழித்து யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை இலங்கையில் மூன்று மாதம் தங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்துமாறு ராஜரத்தினம் பிள்ளைக்கு அழைப்பு விடுத்தார். அவ்விதம் தனிக்கச்சேரி செய்த போது ராஜரத்தினம் பிள்ளையின் இசைத்திறமை வெளித்தெரிந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தில் பல கச்சேரிகளுக்கான அழைப்புகள் பெற்றார்.

ராஜரத்தினம் பிள்ளை சிறப்பாக லயஞானத்துடன் தாளம் போடும் வன்மை கொண்டவர். ராகம் வாசிப்பதிலும், அழகிய சங்கதிகளுடன் கீர்த்தனைகளை இசைப்பதிலும், பிருகா, விரலடியிலும் பெயர் பெற்றவர் ராஜரத்தினம் பிள்ளை.

மறைவு

கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை 1987-ம் ஆண்டில் மறைந்தார்.

இதர இணைப்புகள்

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:01 IST