under review

பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை

From Tamil Wiki
பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை (மே 27, 1890 - 1964) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

அங்கப்ப பிள்ளை பெரம்பலூரில் நாகராஜ பிள்ளை - தாயம்மாள் இணையருக்கு மூத்த மகனாக மே 27, 1890 அன்று பிறந்தார். இவருக்கு உடன்பிறந்த இளையோர்கள் - ராதாகிருஷ்ணபிள்ளை (நாதஸ்வரம்), லக்ஷ்மியம்மாள், ராஜுப்பிள்ளை (தவில்), சுப்புலக்ஷ்மியம்மாள், நீலமேகம் பிள்ளை (நாதஸ்வரம்) ஆகியோர்.

பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை தனது தாய்வழிப் பாட்டனார் ரங்கஸ்வாமி பிள்ளையிடம் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கி எட்டாண்டுகள் கற்றார். பின்னர் லால்குடி ரங்கஸ்வாமி பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

அங்கப்ப பிள்ளை முதலில் வயலின் வித்வான் இலுப்பூர் பொன்னுஸ்வாமி பிள்ளையின் மகள் ரங்கநாயகி அம்மாளை மணந்தார். இவர்களுக்கு ஐந்து பெண்கள்:

  • நாகம்மாள்
  • கமலா (கணவர்: வயலின் கலைஞர் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை)
  • அகிலாண்டம் (கணவர்: இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா)
  • ஸரஸ்வதி
  • ராஜம்

அங்கப்ப பிள்ளை இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து ராஜகோபால் (நாதஸ்வரம்) என்ற மகன் பிறந்தார்.

இசைப்பணி

வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்றிருந்த அங்கப்ப பிள்ளை, கீர்த்தனைகளை சாஹித்யமாகவே பாடம் செய்து நாதஸ்வரத்தில் இசைப்பவராக இருந்தார். முதலில் பிக்ஷாண்டார் கோவில் சுப்பிரமணிய பிள்ளையிடமும் பின்னர் உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை, உறையூர் கருப்பையா பிள்ளை ஆகியோரிடம் துணை நாதஸ்வரக்காரராக இருந்தார். 1909-ம் ஆண்டு தனியாக குழுவை அமைத்து கச்சேரிகள் செய்யத்தொடங்கினார்.

இவரது ராக ஆலாபனை தனித்தன்மை பெற்றிருந்தது. செட்டிநாட்டிலும், மைசூர், எட்டையபுர சமஸ்தானங்களிலும் பல பரிசுகள், தங்கப்பதக்கங்கள், வைரம் போன்றவற்றை சன்மானமாகப் பெற்றிருக்கிறார். திருப்பனந்தாள் காசிமடத்து ஆதீனகர்த்தர் முப்பத்தேழு சவரன் தங்க நாதஸ்வரம் ஒன்றை செய்து அங்கப்ப பிள்ளைக்கு அன்பளிப்பாக அளித்தார். திருவாரூர் ஆலயத்திலும் அங்கப்ப பிள்ளைக்கு தங்க நாதஸ்வரம் பரிசளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் வைரம் பதித்த தங்கவேல் பதக்கம் ஒன்றை இவருக்கு அளித்து கௌரவித்தனர்.

மாணவர்கள்

பெரம்பலூர் அங்கப்ப பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • பேரூர் சுப்பையா முதலியார்
  • மருதமுத்துப்பிள்ளை
  • மைசூர் நாராயணப்பா - கர்நாடக மாநிலத்தின் சிறந்த நாதஸ்வரக் கலைஞர்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

பெரம்பலூர் அங்கப்ப பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை ஜூலை 20, 1964 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 06:34:54 IST