திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- முத்துவீர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துவீர் (பெயர் பட்டியல்)
திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை (1900- நவம்பர் 25, 1973) லயக்கணக்குகளில் புகழ்பெற்ற ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
சீர்காழிக்கு அருகே உள்ள திருமுல்லைவாயில் என்ற கிராமத்தில் 1900-ம் ஆண்டு, நாராயணஸ்வாமி பிள்ளை என்ற தவில் கலைஞருக்கும் பொன்னம்மாளுக்கும் ஒரே மகனாக முத்துவீர் பிள்ளை பிறந்தார். இவருக்கு உண்ணாமுலையம்மாள் என்ற ஒரு மூத்த சகோதரி இருந்தார்.
முத்துவீர் பிள்ளைக்கு இளமையில் இயல்பாகவே லய ஞானம் இருப்பதைக் கண்ட அவரது தந்தை லயத்தில் பெயர் பெற்றிருந்த அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையிடம் தவில் கற்க அனுப்பிவைத்தார். ஏழாண்டுகள் தவில் கற்றபின் முத்துவீர் பிள்ளை தனது பதினேழாவது வயதில் கச்சேரிகளில் வாசிக்கத் தொடங்கினார். தில்லையாடி ’கிடிகிட்டி’ ஸ்ரீனிவாஸ பிள்ளையிடம் ஜதிகள் கற்றுக் கொண்டார்.
தனிவாழ்க்கை
சாமிநாத பிள்ளை என்னும் தவில் கலைஞரின் மகள் குஞ்சம்மாள் என்பவரை முத்துவீர் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் முன்னரே குஞ்சம்மாள் காலமானார். அதன் பிறகு வழிவூர் முத்துவீர் பிள்ளையின் மகள் குஞ்சம்மாள் என்பவரை (இரு மனைவியருக்கும் அதே பெயர்) முத்துவீர் பிள்ளை திருமணம் செய்தார். இவர்களுக்கு பன்னிரண்டு பிள்ளைகள்:
- ஐயப்பன்
- ஷண்முக வடிவேல் (தவில் கலைஞர்)
- தக்ஷிணாமூர்த்தி
- நாராயணஸ்வாமி
- கலியமூர்த்தி
- வேம்பு
- சாந்தநாயகி
- சரோஜா (நாதஸ்வரக் கலைஞர் வலங்கைமான் சௌந்தரராஜ பிள்ளையின் மனைவி)
- ராதா
- ராஜலக்ஷ்மி
- வசந்தா
- மல்லிகா
மாயவரத்தில் கூறைநாடு நடேச பிள்ளையின் மாபெரும் வீட்டை விலைக்கு வாங்கி வாழ்ந்து வந்த முத்துவீர் பிள்ளை, இறுதிக்காலத்தில் திருமுல்லைவாயில் சென்று விட்டார்.
இசைப்பணி
முத்துவீர் பிள்ளை முதலில் திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளையின் நாதஸ்வரக் குழுவில் மூன்று மாதத்துக்கு எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் என்ற ஒப்பந்தத்தில் வாசிக்கத் தொடங்கினார். முத்துவீர் பிள்ளையின் லய நுட்பங்களும், அதி வேக கற்பனை மிகுந்த கோர்வைகளும், தாளக் கணக்குகளும் புகழ் பெற்றவை. முத்துவீர் பிள்ளை பல்வேறு சாதராக்களும் தங்கப்பதக்கங்களும் பெற்றவர்.
உடன் வாசித்த கலைஞர்கள்
திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை
- செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள்
- திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை
- ராஜாமடம் ஷண்முகசுந்தரம் பிள்ளை
- திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை
- திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
- வண்டிக்காரத்தெரு சுப்பிரமணிய பிள்ளை சகோதரர்கள்
- தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
- கீரனூர் சகோதரர்கள்
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை
- குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை
- திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
விருதுகள்
- 'கலாசிகாமணி’ விருது - தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் - 1964
- டி.என். ராஜரத்தினம் பிள்ளை நினைவு நாள் விழாவில்(கரூர்) வெள்ளிக் கேடயம்.
மறைவு
திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை நவம்பர் 25, 1973 அன்று தன் எழுபத்து மூன்றாம் வயதில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Jun-2023, 20:23:37 IST