வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை
- வேதாரண்யம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வேதாரண்யம் (பெயர் பட்டியல்)
வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை (1924-அக்டோபர் 9, 1962) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
வேதமூர்த்தி பிள்ளை வேதாரண்யத்தில் நாதஸ்வரக் கலைஞர் கோபாலஸ்வாமி பிள்ளை - காமு அம்மாள் இணையருக்கு 1924-ம் ஆண்டு பிறந்தார்.
வேதமூர்த்தி பிள்ளை தன் தாய்மாமாவும் சங்கீத அஷ்டாவதானியுமான திருவிழந்தூர் ஏ.கே. கணேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். சில வருடங்கள் கீரனூர் சின்னத்தம்பி பிள்ளையிடம் இருந்து மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
வேதமூர்த்தி பிள்ளைக்கு ஐந்து சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்:
- கனகாம்புஜம் (கணவர்: அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையின் மகன் திருவிழந்தூர் வேணுகோபால் பிள்ளை - தவில்)
- பட்டம்மாள்
- வீணாவாதன விதூஷிணி
- லலிதாம்பாள் (கணவர்: தலைஞாயிறு குஞ்சிதபாதம் பிள்ளை - நாதஸ்வரம்)
- சுந்தராம்பாள்
- ஷண்முகசுந்தரம்
- பாலசுப்பிரமணியம் (தவில்)
நாதஸ்வரக் கலைஞர் சிதம்பரம் கோவிந்தஸ்வாமி பிள்ளையின் மகள் ராமதிலகம் என்பவரை வேதமூர்த்தி பிள்ளை மணந்தார். இவர்களுக்கு ஜஸிந்தா என்று ஒரு மகள். ராமதிலகம் காலமானதும் அவரது தங்கை சாந்தகுமாரி என்பவரை வேதமூர்த்தி பிள்ளை மணந்துகொண்டார். இவர்களுக்கு உமா, கலைச்செல்வன், இசைச்செல்வன், ஸரோஜா என நான்கு பிள்ளைகள்.
இசைப்பணி
வேதமூர்த்தி பிள்ளை வீணையைப் போல நாதஸ்வரத்தில் வாசிக்கும் திறமை பெற்றிருந்தவர். ஆரம்பகாலத்தில் அவருடைய நாதஸ்வர ஒலி இனிமையில்லாது இருந்தது. வெகுகாலம் இது குறித்துச் சிந்தித்து, அதுவரை யாரும் முயற்சி செய்திராத வகையில், நாதஸ்வரத்தின் உட்பகுதியில் ஒரு மெல்லிய உலோகக் குழாயைப் பொருத்தி இசைத்துப்பார்த்தார். அது முதல் வேதமூர்த்தி பிள்ளையின் நாதஸ்வர இசை வீணையைப் போல இனிமையாக ஒலித்தது. வேதமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து வாசித்து வந்த வேதாரண்யம் ஸோமாஸ்கந்த பிள்ளையும் ரங்கஸ்வாமி பிள்ளையும் இது போல் உலோகக் குழாய் பொருத்திய நாதஸ்வரத்தைப் பயன்படுத்தினார்கள்.
வேதமூர்த்தி பிள்ளை இசைத்தட்டில் பதிவுசெய்து வெளியான ’சிவதீக்ஷாபருலு’ என்ற குறிஞ்சி ராகப் பாடல்[1] அவரது வீணையைப் போன்ற வாசிப்புக்குச் சான்றாக இருக்கிறது.
பல ஊர்களில் இவரது கச்சேரிகள் நிகழ்ந்திருக்கின்றன. மைசூரிலேயே இருபத்தேழு முறை தங்கப்பதக்கங்கள் பெற்றிருக்கிறார். பல சமஸ்தானங்களில் தங்கச்சங்கிலிகளும் சாதராக்களும் பெற்றவர்.
மாணவர்கள்
வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளையின் முக்கியமான மாணவர் செம்பொன்னார் கோவில் எஸ்.ஆர்.வி. சுப்பிரமணியம்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை
- வடபாதிமங்கலம் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
- வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை
- நீடாமங்கலம் ஷண்முக வடிவேல்
- யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி
- திருவிழந்தூர் வேணுகோபால் பிள்ளை
- திருச்சேறை முத்துக் குமாரஸ்வாமி பிள்ளை
- வேதாரண்யம் பாலசுப்பிரமணியம்
மறைவு
வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை தீபாவளி அன்று வானொலியில் ஒலிபரப்பாகும் மங்கல இசை நிகழ்ச்சிக்காக மைசூர் சென்றிருந்தார். அக்டோபர் 9, 1962 அன்று அந்நிகழ்ச்சிக்காக வாசித்துவிட்டு சில மணி நேரத்திலேயே மறைந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
வெளி இணைப்புகள்
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை இசை
- மனசா எடுலோ - ராகம் மலயமாருதம்
- வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை நூற்றாண்டு விழா சிறப்புரை, லலிதா ராம், சென்னை டிசம்பர் 2023
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Sep-2023, 08:57:42 IST