அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை
To read the article in English: Ammachathiram Kannuswamy Pillai.
அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை (1876 - மார்ச் 19, 1927) (அம்மாசத்திரம் கண்ணுசாமிப் பிள்ளை) தவில் இசைக் கலைஞர். நாதஸ்வரம் வாசிப்பதிலும் தேர்ச்சி உள்ளவர், டி. என். ராஜரத்தினம் பிள்ளை போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் ஆசிரியர். பல பாடல்களும் தில்லானாக்களும் இயற்றியிருக்கிறார்.
இளமை, கல்வி
கண்ணுஸ்வாமி பிள்ளை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் என்ற ஊரில் நாட்டியக் கலைஞர் சுந்தரம் அம்மாளுக்கு ஒரே மகனாக 1876-ல் பிறந்தார். சுந்தரம் அம்மாளின் சகோதரி ஞானம் அம்மாளும் நாட்டியக் கலைஞர். அவருக்குக் குழந்தை இல்லாததால் இருவராலும் செல்லமாக வளர்க்கப்பட்டார்.
குழந்தைப்பருவத்தில் எதிர்வீட்டில் இருந்த கோவிந்தஸ்வாமி நட்டுவனாரிடம் ஜதிகளும் சொற்கட்டுக்களும் கற்றார்.
தனிவாழ்க்கை
திருவழந்தூர் மகாதேவ நட்டுவனார் மகள் செல்லம்மாளை மணந்தார்.
இவரது பிள்ளைகள்:
- திருவிழந்தூர் கணேச பிள்ளை (வீணை, சங்கீத அஷ்டாவதானி)
- காமு அம்மாள் (நாதஸ்வர வித்வான் வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளையின் அன்னை)
- சுப்பிரமணியம் (நாதஸ்வர வித்வான்)
- ஞானசுந்தரம் (செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையின் மகன் விஸ்வநாத பிள்ளையின் மனைவி)
- திருவிழந்தூர் ராமையா பிள்ளை
- ஜயலட்சுமி
- திருவிழந்தூர் வேணுகோபால் பிள்ளை (தவில் கலைஞர்)
இசைப்பணி
1890-ல் ஒரு திருமணக் கச்சேரியில் திருமருகல் நடேச பிள்ளை நாதஸ்வரம் வாசிக்க, இவரை தவில் வாசிக்குமாறு கூறினர். கண்ணுஸ்வாமி பிள்ளை புதுமையான சில பிரயோகங்களை வாசித்து, அங்கிருந்த மூத்த கலைஞர்களை அதிசயிக்க வைத்தார். அப்போது பதினாறு வயதாகிய திருமருகல் நடேச பிள்ளை, கண்ணுஸ்வாமி பிள்ளையே (14 வயது) இனி தனக்குத் தவில் வாசிக்க வேண்டுமென முடிவு செய்தார். இவ்விதம் திருவாவடுதுறை ஆதீனத் தொடர்பும் கண்ணுஸ்வாமி பிள்ளைக்கு உண்டானது.
திருமருகல் நடேச பிள்ளை கச்சேரி நடந்த ஒரு நவராத்திரி விழாவில் உறவினர் ஒருவர், தவில்காரனுக்கு நாதஸ்வரம் குறித்து என்ன தெரியும் என வேடிக்கையாக சொல்ல, கண்ணுஸ்வாமி கோபம் கொண்டு அக்குழு விட்டு விலகினார். பின்னர் தீவிரமாக நாதஸ்வரம் பயின்று அதிலும் சிறப்பான தேர்ச்சி கொண்டார்.
திருக்கோவிலூர் தபோவனத்தில் நடந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் முதல் கச்சேரியில் கண்ணுஸ்வாமி பிள்ளையே தவில் வாசித்தார். இருவருக்கும் மோதிரங்கள் ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது.
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் சில கச்சேரிகளில் கண்ணுஸ்வாமி பிள்ளை மிருதங்கமும் டோலக்கும் வாசித்திருக்கிறார். நான்கு வருடங்கள் ஜலதரங்கக் கச்சேரிகளும் செய்திருக்கிறார். தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை கொண்ட கண்ணுஸ்வாமி பிள்ளை பல பாடல்களும் தில்லானாக்களும் இயற்றியிருக்கிறார்.
கண்ணுஸ்வாமி பிள்ளையின் பொருத்தமான தவில் வாசிப்பை செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையின் நாதஸ்வர இசைத்தட்டுக்களில் கேட்க முடியும்.
உடன் வாசித்த கலைஞர்கள்
அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்)
- திருமருகல் நடேச பிள்ளை (நாதஸ்வரம்)
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை (நாதஸ்வரம்)
- சரப சாஸ்திரிகள் (புல்லாங்குழல்)
- திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
- பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை
மாணவர்கள்
பிரபலமான சில மாணவர்கள்:
- திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளை (தவில்)
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை (தவில்)
- திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாதஸ்வரம்)
- வழிவூர் வீராஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்)
- முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர் (லய தாளம்)
- கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் (லய தாளம்)
மறைவு
அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை மார்ச் 19, 1927 அன்று திருவிழந்தூரில் காலமானார்.
இதர இணைப்புகள்
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
- தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்
- வசந்தா ராக தில்லானா ஸ்வரங்கள் புகைப்படம் நன்றி: மங்கல இசை (முகநூல்)
- மங்கல இசை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:06 IST