under review

பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை

From Tamil Wiki

பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை (’குறும்பு’ குருஸ்வாமி பிள்ளை) (1875-1963) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

குருஸ்வாமி பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூரில் விஸ்வநாத பிள்ளை - வீரலக்ஷ்மி அம்மாள் இணையருக்கு 1875-ம் ஆண்டு பிறந்தார்.

ஆறு வயதிலேயே இவருக்கு இருந்த தாள லய ஞானத்தைக் கண்டு தவில் கற்க வேண்டுமா எனக் கேட்ட தந்தையிடம் நாதஸ்வரத்தையே தேர்ந்தெடுத்தார் குருஸ்வாமி. முதலில் தந்தை விஸ்வநாத பிள்ளையிடமும் பின்னர் ’ஒத்துமூச்சு’க்குப் புகழ்பெற்ற பந்தணைநல்லூர் அய்யாக்கண்ணுப் பிள்ளையிடமும் கற்றார். ஆறு ஆண்டுகளில் தனிக் கச்சேரி நிகழ்த்தும் திறன் பெற்றார்.

தனிவாழ்க்கை

குருஸ்வாமி பிள்ளைக்கு நான்கு சகோதரிகள் - கௌரியம்மாள், சிவானந்தவல்லி, கோமளத்தம்மாள்(கணவர்: தவில் கலைஞர் பாபநாசம் முத்தையா பிள்ளை), மீனா அம்மாள்.

குருஸ்வாமி பிள்ளை தில்லையாடியைச் சேர்ந்த ஆதிலக்ஷ்மியம்மாளை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பெண்கள், நான்கு மகன்கள்:

  1. தங்கம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளையின் முதல் மனைவி)
  2. வேணுகோபால் பிள்ளை (நாதஸ்வரம்)
  3. குழந்தைவேல் பிள்ளை (தவில்)
  4. சுப்பையா பிள்ளை (நாதஸ்வரம்)
  5. சக்கரபாணி பிள்ளை (நாதஸ்வரம்)
  6. சின்னம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருக்கண்ணமங்கை கோதண்டபாணிப் பிள்ளை)

இசைப்பணி

குருஸ்வாமி பிள்ளை வாசிக்கும் பல்லவியைப் பிற வித்வான்கள் வாசிக்கத் திணறுவார்கள். பல்லவியை எடுத்துக்கொண்டு லய சம்பந்தமான குறும்புகள் செய்வதும் பஞ்சகதி-களை அமைத்துத் திடீரென்று பல்லவி ஒன்றை அமைத்து வாசிப்பதும், 'கைத்தாளப் பிடியில்’ பல்லவி வாசிப்பதும் இவரது வழக்கம். இவர் வாய்ப்பாட்டு கச்சேரிகளும் செய்திருக்கிறார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை 1963-ம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 06:15:41 IST