செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை
- கோவிந்தஸ்வாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோவிந்தஸ்வாமி (பெயர் பட்டியல்)
- செம்பொன்னார்கோவில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செம்பொன்னார்கோவில் (பெயர் பட்டியல்)
செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1897 - ஜூலை 7, 1955) ஒரு நாதஸ்வரக் கலைஞர். ’செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ என்ற பெயரில் அறியப்பட்ட சகோதரர்களில் மூத்தவர்.
இளமை, கல்வி
கோவிந்தஸ்வாமி பிள்ளை செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை - குட்டியம்மாள் இணையருக்கு 1897-ம் ஆண்டு பிறந்தார்
முதலில் மாயூரம் காசிபண்டாரத் தெரு சாம்பமூர்த்தி அய்யங்காரிடம் வாய்ப்பாட்டு கற்றார். வர்ணங்கள் வரை கற்றதும் மாயூரம் வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார்.
தனிவாழ்க்கை
கோவிந்தஸ்வாமி பிள்ளைக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூவர் - செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, விஸ்வநாத பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி பிள்ளை; சகோதரிகள் இருவர்- தனபாக்கியம் (கணவர்: தவில்காரர் பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை), சேதுஅம்மாள் (கணவர்: திருவீழிமிழலை சகோதரர்களில் மூத்தவரான சுப்பிரமணிய பிள்ளை)
கோவிந்தஸ்வாமி பிள்ளை, நாதஸ்வரக் கலைஞர் பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளையின் மகள் தங்கம்மாளை மணந்தார். பின்னர் ஒரு பிரச்சனையால் அவர் பிறந்தகம் சென்றுவிட்ட பின்னர் சிதம்பரத்தைச் சேர்ந்த கோமதி என்பவரை மணந்தார். பின்னர் மூன்றாவதாக நம்புத்தாயம்மாள் என்பவரை மணம் செய்தார்.
கோவிந்தஸ்வாமி பிள்ளைக்கு ஆறு மகன்கள், ஏழு மகள்கள்.
முதல் மனைவி தங்கம்மாள் மூலம்:
- எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் (நாதஸ்வரம்)
- எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணா (நாதஸ்வரம்)
இரண்டாவது மனைவி கோமதி அம்மாளின் பிள்ளைகள்:
- குஞ்சிதபாதம்
- சத்தியமூர்த்தி
- பெரிய அம்மாளு (கணவர்: திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளையின் மகன் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை)
மூன்றாவது மனைவி நம்புத்தாயம்மாள் மூலம் பிறந்தவர்கள்:
- வைத்தியநாதன்
- ராமஸ்வாமி
- பெரிய ஆச்சி (கணவர்: திருவிழந்தூர் ரங்கநாதன்)
- சின்ன ஆச்சி (கணவர்: திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளையின் மகன் பாண்டியன்)
- ஜீவரத்தினம் (கணவர்: மோஹன்)
- பாக்யலக்ஷ்மி (கணவர்: ஷண்முகசுந்தரம்)
இசைப்பணி
கோவிந்தஸ்வாமி பிள்ளை பதினாறு வயது முதல் கச்சேரிகள் செய்தார். இவருடைய தம்பி தக்ஷிணாமூர்த்தி பிள்ளையுடன் சேர்ந்து 'செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ என்ற பெயரில் வாசித்தார். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களில் இச்சகோதரர்கள் கௌரவ நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்.
கோவிந்தஸ்வாமி பிள்ளை ராக ஆலாபனையில் சிறப்பு பெற்றவர். ராகத்தை சிறிது நேரம் வாசித்துவிட்டு பல்லவியோ, ரக்தியோ தக்ஷிணாமூர்த்தி பிள்ளை தொடங்க, இருவரும் மாறி மாறி அதில் லய விளையாட்டுக்கள் நடத்துவது வழக்கம். 1937-ம் ஆண்டு, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலுடன் இச்சகோதரர்கள் இசைத்தட்டுக்கள் ஒன்பதை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இடையில் சில மனவேறுபாடு காரணமாக தக்ஷிணாமூர்த்தி பிள்ளை விலகி, ரெட்டியூர் சுப்பிரமணிய பிள்ளை என்பவருடன் வாசித்திருக்கிறார். அச்சமயங்களில் கோவிந்தஸ்வாமி பிள்ளை தன்னுடன் பயின்றவராகிய வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளையைத் தன்னுடன் அழைத்துச் செல்வார்.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளை
- நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் பிள்ளை
- பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை
- காவாலக்குடி சோமசுந்தரம் பிள்ளை
மரணம்
செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை ஜூலை 7, 1955 அன்று தனது ஐம்பத்தெட்டாவது வயதில் மறைந்தார்.
இதர இணைப்புகள்
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-May-2023, 18:12:25 IST