பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (தவில்)
- ரத்தினம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரத்தினம் (பெயர் பட்டியல்)
- பந்தணைநல்லூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பந்தணைநல்லூர் (பெயர் பட்டியல்)
பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (1903 - 1936) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
ரத்தினம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூர் என்ற ஊரில் 1903-ம் ஆண்டில் பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை - பங்கஜவல்லியம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
ரத்தினம் பிள்ளை நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முதற்சீடராக இருந்தவர்.
தனிவாழ்க்கை
ரத்தினம் பிள்ளைக்கு கோவிந்தராஜ பிள்ளை என்ற தம்பியும் செல்லம்மாள் (கணவர்: திருக்கடையூர் சின்னையாத் தவில்காரர்) என்ற தங்கையும் இருந்தனர். செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையின் மகள் தனபாக்கியத்தம்மாளை முதலில் மணந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. தனபாக்கியத்தம்மாள் காலமானதும் ஆடுதுறை பெருமாள் கோவிலைச் சேர்ந்த ராமாமிருதம் அம்மாளை மணந்தார். பந்தணைநல்லூர் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்), முத்தப்பா (தவில்) இருவரும் இவர்களுடைய மகன்கள்.
இசைப்பணி
ரத்தினம் பிள்ளையின் வாசிப்பில் லயக் கணக்குகள் மிகச் சிறப்பாக இருக்கும். அவருடைய வாசிப்பைக் கேட்க இசைக் கலைஞர்கள் வந்து கூடுவது வழக்கம்.
உடன் வாசித்த கலைஞர்கள்
பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை
- பெரம்பலூர் அங்கப்ப பிள்ளை
- செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள்
- கீரனூர் சகோதரர்கள்
- திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
- திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை
- வண்டிக்காரத்தெரு ஷண்முகசுந்தரம் பிள்ளை
மறைவு
திருவனந்தபுரத்தில் மன்னர் முன்னிலையில் வாசித்துக் கொண்டிருந்த போது ராஜரத்தினம் பிள்ளை, பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளையை எல்லார் முன்னிலையிலும் அவமதித்து விட்டார். மனவேதனையுடன் ஊர் திரும்பிய ரத்தினம் பிள்ளை சில நாட்களில் 1936-ம் ஆண்டில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:26:07 IST