பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை
பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை (1903 - ஏப்ரல் 20, 1964) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் தவில் கலைஞர் பாபநாசம் முத்தையா பிள்ளை - கோமளத்தம்மாள் இணையருக்கு 1903-ம் ஆண்டு ராமஸ்வாமி பிள்ளை ஒரே மகனாகப் பிறந்தார்.
தந்தை பாபநாசம் முத்தையா பிள்ளையிடம் தவில் கற்றார்.
தனிவாழ்க்கை
ராமஸ்வாமி பிள்ளைக்கு மீனாக்ஷி, குப்பம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருக்காட்டுப்பள்ளி முருகய்யா பிள்ளை), குஞ்சம்மாள் (கணவர்: பாபநாசம் சுந்தரராஜ பிள்ளை), ராஜாயி என்ற மூத்த சகோதரிகள் இருந்தனர்.
நாதஸ்வரக் கலைஞர் கோவிலடி ஆறுமுகம் பிள்ளையின் மகள் பார்வதியம்மாளை ராமஸ்வாமி பிள்ளை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாமலேயே பார்வதியம்மாள் காலமானார்.
பின்னர் கோடாலிக் கருப்பூரைச் சேர்ந்த காவேரியம்மாளை ராமஸ்வாமி பிள்ளை மணந்தார். இவர்களுக்கு தர்மாம்பாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் பாபநாசம் ரமணி/ராமலிங்கம்), கனகாம்புஜம் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருக்காட்டுப்பள்ளி முருகையா பிள்ளையின் மகன் கோவிந்தராஜன்) என்ற இரு மகள்களும் நாராயணன் (தவில்) என்ற ஒரு மகனும் இருந்தனர்.
இசைப்பணி
ராமஸ்வாமி பிள்ளை தாய்மாமனான பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளையிடம் தவில் வாசிக்கத் தொடங்கினார். லய நுட்பங்களையும் இவர் குருஸ்வாமி பிள்ளையிடம் கற்றுத் தேர்ந்தார். சொற்சுத்தம் நிரம்பிய வாசிப்பென சக கலைஞர்களிடம் பாராட்டுப் பெற்றவர் ராமஸ்வாமி பிள்ளை.
உடன் வாசித்த கலைஞர்கள்
பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை
- ஸ்வாமிமலை சுப்பிரமணிய பிள்ளை
- பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
- நாகூர் சுப்பய்யா பிள்ளை
- செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள்
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை
மறைவு
பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை புற்றுநோயால் சிலஆண்டுகள் நோயுற்று ஏப்ரல் 20, 1964 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:28:44 IST