நாகூர் சுப்பய்யா பிள்ளை
- நாகூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாகூர் (பெயர் பட்டியல்)
நாகூர் சுப்பய்யா பிள்ளை (1878 - ஏப்ரல் 08, 1932) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
சுப்பய்யா பிள்ளை 1878-ம் ஆண்டு நாதஸ்வரக் கலைஞர் நாகூர் ரங்கஸ்வாமி பிள்ளை - பாப்பம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார்.
சுப்பய்யா பிள்ளை தன் தந்தையிடம் முதலில் இசை கற்றார். பின்னர் தமக்கை சிவபாக்கியம் அம்மாளின் கணவர் திருவீழிமிழலை ஸ்வாமிநாத பிள்ளையிடம் நாதஸ்வரத்தில் மேற்பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
சுப்பய்யா பிள்ளையின் உடன்பிறந்தவர்கள் பக்கிரி பிள்ளை(நாதஸ்வரம்), சிவபாக்கியம் அம்மாள். ரங்கஸ்வாமி பிள்ளையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்கள் - சிங்காரம் பிள்ளை (ஜவுளிக்கடை), ராஜூப்பிள்ளை (நாதஸ்வரம்), பட்டம்மாள் மற்றும் பக்கிரி அம்மாள்(கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருமங்கலக்குடி ராஜூ பிள்ளை).
சுப்பய்யா பிள்ளை திருநாகவல்லி அம்மாளை மணந்தார். இவர்களுக்கு மீனாக்ஷி (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருவீழிமிழலை நடராஜசுந்தரம் பிள்ளை), சம்பந்தம் (12 வயதில் மறைந்தார்) என்னும் மகளும் மகனும் இருந்தனர். சுப்பய்யா பிள்ளையின் இரண்டாவது மனைவிக்கு (அப்பாத்தை எனக் குறிப்பிடப்படுகிறார், பெயர் தெரியவில்லை) ஒரு மகன் (அண்ணாத்தை எனப்படுகிறார், பெயர் தெரியவில்லை), சீதா என ஒரு மகள். மீனாக்ஷி அம்மாளின் கணவர் திருவீழிமிழலை நடராஜசுந்தரம் பிள்ளை சீதாவையும் திருமணம் செய்து கொண்டார்.
இசைப்பணி
எந்த ராகம் என்றாலும் இனிமையாகக் குழைய வாசிப்பது சுப்பய்யா பிள்ளையின் சிறப்பு. செஞ்சுருட்டி ராகம் எல்லாக் கச்சேரிகளிலும் வாசிப்பார். அவர் அதை வாசிக்காவிட்டாலும் ரசிகர்கள் கேட்டுவிடுவார்கள்.
மாணவர்கள்
நாகூர் சுப்பய்யா பிள்ளையின் முக்கியமான மாணவர்கள் இருவர்:
- திருவானைக்கோவில் மருதமுத்துப் பிள்ளை
- நாகூர் ராஜு பிள்ளை
- நாகூர் பக்கரிப்பிள்ளை
- வைத்தியநாத பிள்ளை
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
நாகூர் சுப்பய்யா பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- வழிவூர் முத்துவீர் பிள்ளை
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை
- பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை
- திருக்கடையூர் சின்னையா பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- கரந்தை ரத்தினம் பிள்ளை
மறைவு
நாகூர் சுப்பய்யா பிள்ளை ஏப்ரல் 08, 1932 அன்று சீர்காழி தாடாளன் கோவில் ஸ்வாமி வீதியுலாவுக்கு நாதஸ்வரம் வாசிக்க நடந்து சென்றவர், காலில் ராஜாத்தேள் கொட்டி கீழே விழுந்தார். இரண்டு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:06:31 IST